Search This Blog

Sunday, September 5, 2010

குஷ்புவுடம், சுந்தர்.சியும் சேர்ந்து திமுகவின் கொள்கைகளை வளர்க்க வேண்டும்-கருணாநிதி

கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். இனி அவரும், சுந்தர்.சியும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

குஷ்பு தயாரிக்கும் நகரம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது.

முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'நகரம்' படத்தின் பாடல் சி.டி.யை வெளியிட்டார். அவரிடம் இருந்து சி.டி.யை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது:

"இந்தப் படத்தில் எத்தகைய காட்சிகள் இருக்கும் என்பதற்கு ஒரு சான்றாக சுந்தரும், வடிவேலுவும் நடித்த ஒரு காட்சி இங்கே காட்டப்பட்டது. எனக்கு அந்தவொரு காட்சியிலேயே தமிழகத்தில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டப்பட்டது போன்ற எண்ணம் தோன்றியது.

சுந்தர் கதாநாயகனாக நடிக்கும் போது, "உனக்குப் பதிலடி வேறு இடத்திலே கொடுக்கிறேன் வா'' என்று வடிவேலு சொல்லிவிட்டு - எந்த இடத்திலும் சந்திக்காமல், பதிலடியும் கொடுக்காமல், எங்கேயோ மலை உச்சியிலே போய் உட்கார்ந்து கொண்டதைப் போல வடிவேலுதான் வீரன் என்றும், அந்த வீரத்தைக் காட்ட இது இடம் அல்ல, இது நேரமும் அல்ல என்றும் சொல்வது நல்ல நகைச்சுவையாக, இன்றைய தினம் நாட்டிலே இருக்கின்ற அரசியல் நிகழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக படம் பிடிக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.

இதிலே இந்தப் படத்தை முழுவதும் அல்ல, ஒரு துளி, ஒன்றிரண்டு காட்சிகளை நாம் கண்ட போது நம்முடைய தமிழ்ப் படங்களைப் பற்றிய நினைவு வந்தது. தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் புராணப் படங்களும், மூடநம்பிக்கைப் படங்களும், நல்லதங்காள் போன்ற கதைகளும் படங்களாக வந்த போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அது பற்றி தன்னுடைய கருத்தை ஒரு பாடல் மூலமாக வெளியிட்டார்.

"எந்தமிழன் படமெடுக்க ஆரம்பம் செய்தான்,
ஒன்றேனும் தமிழ் நடையுடை பாவனை வாய்ந்தது வாய் இல்லை,
ஒன்றேனும் தமிழ் மொழியைப் போற்றுவதாய் இல்லை,
அம்மாமி, அத்திம்பேர் என்ற தமிழ் தான் மிச்சம்''

-என்று தன்னுடைய ஆதங்கத்தை, ஆத்திரத்தை, வேதனையை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இந்தப் பாடல் மூலமாக அந்தக் காலத்து சினிமா எப்படியெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்கப் பயன்பட்டது என்பதையும், மொழியை மறைப்பதற்குப் பயன்பட்டது என்பதையும், மொழியே மறந்து போனது இயங்கியது என்பதையும் வெளிப்படுத்தினார்.

இப்போது நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்கள் இந்தத் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற காரணத்தால், நல்ல தமிழை - நல்லப் பாடல்கள் வாயிலாக நம்மால் கேட்க முடிகின்றது. இங்கே அவருடைய பாடல்கள் இசையின் நேர்த்தியினால் முழுமையாக என்னுடைய காதுகளில் கேட்க இயலாவிட்டாலும், ஒரு வரி "பளிச்'' என்று மின்னல் போல் வெளிப்பட்டது.

"நீ காதலிக்கிறாய் என்று சொன்னால், எனக்கு ரெக்கை முளைத்து விடும் அல்லது உனக்கு ரெக்கை முளைத்து விடும்''

- காதல் என்று சொன்னாலே, காதலர்களில் இருவரில் ஒருவருக்கு, அதிலும் ஆண் மகனுக்கு ரெக்கை முளைத்து விடும் என்று வைரமுத்து எழுதிய வரி இன்றைக்கு சமுதாயத்திலே சில பொருத்தமான அளவிலே பயன்படுத்தக் கூடிய வரியாகும்.

ரெக்கை முளைத்தால் பறந்து போகவும் கூடும் - அந்த இறக்கைகளை மேலும் மேலும் அசைத்து உற்சாகத்தோடு பறந்து பாடவும் கூடும் - இறக்கை முளைப்பது என்பது அந்தக் காதலியை விட்டு விட்டு யாரோடு தாவுமோ என்ற பொருளிலும் கொள்ளலாம்.

அண்டா.. ஆண்டவன்

இந்த கதையிலே எந்தப் பொருளுக்காக வைரமுத்து அந்த வரிகளைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.

ஆனாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்திலே திரைப் பாடல்களிலே நாம் கேட்பதற்கு, ரசிப்பதற்கேற்ற தமிழ் வரியாக, வாக்கியமாக இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதைப் போன்ற உவமைகளும், இதைப் போன்ற சொற்சித்திரம் மிகுந்த சுவையான வார்த்தைகளும் வைரமுத்து அவர்களுடைய பாடல்களிலே நிரம்ப உண்டு.

அந்த வகையில் நான் இதுபோன்ற அருமையான பாடல் வரிகள் இன்னமும் இந்தப் படத்திலே நமக்கெல்லாம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன். அதை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நம்முடைய சுந்தரைப் பற்றி இங்கே சொன்னார்கள். அவர் "அருணாசலம்'' படத்தில் பாடல் வரியிலே சேர்ப்பதற்கு லிங்கம் கிடைக்காத காரணத்தால், அண்டாவைக் கவிழ்த்து இதுதான் "லிங்கம்'' என்று சொல்லி, படமெடுத்தார் என்று சொன்னார்கள். அண்டப் புளுகைகளையெல்லாம் கவிழ்த்து - இதுதான் ஆண்டவன் என்று சொல்கின்ற காலத்தில், சுந்தர் எவ்வளவு பெரிய சுயமரியாதைக்காரராக இருந்து அந்தப் படத்திலே பகுத்தறிவினை விதைத்திருக்கிறார் என்பதை எண்ணும் போது, இந்தப் படத்திலும் அது போன்ற பகுத்தறிவு துளிகளை எதிர்பார்க்கிறேன்.

தமிழ் உணர்வு:

அவர் சொன்னார் - சட்டசபையிலே தமிழ்க்குடிமகன் எப்படியெல்லாம் உறுப்பினர்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி சட்டசபையே, சத்தசபையாக இருந்தது என்பதை எடுத்துச் சொன்னார். தமிழ்க்குடிமகன் சபாநாயகராக மாத்திர மல்ல, அவர் யாதவா கல்லூரியிலே பேராசிரியராகவும் இருந்த காரணத்தினால் அவரைப் போன்றவர்களிடம், எங்களைப் போன்றவர்களிடம் பழகி சுந்தர் தமிழ் உணர்வை, தன்மான உணர்வைப் பெற்றிருக்கிறார் என்பதை அறிய நான் மிக மிக மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் வெறும் சினிமாக்காரராக மாத்திரமல்ல, சிந்தனையாளராகவும் இருக்கிறார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அவரைப் போன்றவர்கள் - கருணாநிதி பாராட்டி விட்டாரே என்று பயந்து விடக்கூடாது. நாம் அண்டாவைக் கவிழ்த்து ஆண்டவன் என்று சொன்னோம் என்பதற்காகப் பயந்து விடக்கூடாது. பெரிய சிந்தனைகளை விதைத்திட வேண்டும்.

"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'' என்று சித்தர் சிவபாக்கியரே பாடியிருக்கிறார். அதனால் பயப்படாமல் இந்தக் கருத்துக்களை படக்காட்சிகள் வாயிலாகவும் எடுத்துச் சொல்வது தவறல்ல. இந்தப் படத்திலே இது போன்ற பகுத்தறிவு கருத்துக்கள், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைய வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். பயப்படக் கூடாது.

பகுத்தறிவாதிகள்:

உங்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ.பெருமாள் பங்குபெற்று எடுத்தப் படம் தான் "பராசக்தி''. அந்தப் படத்தில் நான் திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்றதும், என்னிடத்திலே சொன்னார். உங்களுடைய கருத்துக்கள், எண்ணங்கள், உங்கள் இயக்கத்தினுடைய கொள்கைகள் இந்த நாட்டிற்குத் தேவையானது எவையெவை இருக்கின்றதோ, மக்களை பகுத்தறிவாதிகளாக ஆக்கக் கூடிய செய்திகள் எவ்வளவு இருக்கிறதோ, அவைகளை யெல்லாம் நீங்கள் யாருக்கும் பயப்படாமல் - படம் ஓடாமல் போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் எல்லாவற்றையும் எழுதுங்கள் என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார், துணிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

வெளியூர்களுக்குச் சென்று நாடகங்களைப் பார்த்து, படங்களைப் பார்த்து அதிலே வருகின்ற முற்போக்குக் கருத்துக்களையெல்லாம் என்னிடத்திலே சொல்லி, இவைகளை எல்லாம் படத்திலே வர வேண்டுமென்று என்னிடம் அழுத்தந்திருத்தமாகச் சொல்வார்.

நான் இன்றல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, 1952-ம் ஆண்டு நேஷனல் பிக்சர்ஸ், பெருமாளுக்கு இருந்த அந்தத் துணிச்சலும், அந்தக் கொள்கை வெறியும் நம்முடைய சுந்தர் போன்றவர்களுக்கு இந்தக் காலத்தில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு வருமேயானால் இன்னும் ஐம்பதாண்டு காலத்திற்கு இளைய தலைமுறை லட்சிய தலை முறையாக, பகுத்தறிவு தலைமுறையாக வளர்க்கின்ற அந்த ஆற்றலை, பண்பை நாம் உருவாக்கினோம் என்ற பெருமைக்குரியவர்களாக ஆவோம், அதைச் செய்ய வேண்டுமென்று நான் இயக்குநர் சுந்தரை கேட்டுக்கொள்கிறேன்.

இயக்க கொள்கையை வளர்க்க வேண்டும்:

இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல - கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

குஷ்பு மாத்திரம் தி.மு.க.விலே சேர்ந்திருக்கிறார் என்றால் போதாது. சுந்தரும் குஷ்புவோடு சேர்ந்திருக்கிறார் என்ற அளவிற்கு இந்தப் படத்திலே வெற்றிகரமாக பல நல்ல கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

பகுத்தறிவு கருத்துக்கள் இருந்தால்தான்...

அதற்காக பட விநியோகஸ்தர்கள் யாரும் பயப்படவேண்டாம். அந்தக் கருத்துக்கள் எல்லாம் வந்தால்தான் படம் வெற்றிகரமாக ஓடும், ஐம்பது நாள், நூறு நாள் என்றெல்லாம் ஓடும் என்பதை மறந்து விடாமல், அந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் வர வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டு, வருவார்கள், வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை யோடு உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்..." என்றார்.

No comments: