Search This Blog

Tuesday, September 14, 2010

அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் அரசியல் பணி செய்கிறேன்: ஜெயலலிதா சொல்கிறார்

அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியிலேயே பெரியாருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட தலைவர் இருக்கையை இன்றும் ஆக்கிரமித்துக் கொள்ளாமல், அவர்கள் வழியிலேயே நானும் அரசியல் பணிகளை செய்து வருகிறேன் என்று 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 102வது பிறந்த நாளையொட்டி கொடநாடு எஸ்டேட்டில் இருந்தபடி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்லவர்களின் சிற்பக்கலைக்கு சாட்சி சொல்லும் கலை வளமும், பரிமேலழகரால் பாடப்பட்ட புகழ் வளமும், தின்னாகர் என்னும் பௌத்த அறிஞரையும், திருநைனாப்பிள்ளை என்னும் மாபெரும் இசைக்கலைஞரையும் விளைவித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சிப் பெருநகரமே, தென்னாட்டு காந்தி என்றும், இந்நாட்டு பெர்னார்ட் ஷா என்றும் பெருமை பொங்கிட அழைக்கப்பட்ட நம் பேரறிஞர் அண்ணாவையும் 1909ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் நாள் நடராசன் -ராசாமணி அம்மாள் என்னும் பேரன்பு பெற்றோர்கள் வழியில் நமக்குத் தந்தது.

ரசியல் விடிவெள்ளியாய், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தளபதியாய், திரையுலகத்திற்கு பல திருப்புமுனைகளை உருவாக்கிய கலை உலகத்தின் காவலராய், சாதி, மத பேதங்களைச் சாடுவதில் இந்நாட்டு இங்கர்சாலாய், இசையறிவில் ஏழிசை மன்னராய்,

தாய் மொழி காப்பதில் தன்மானக்காவலராய், நயம் பட நவில்வதில் நாவலர் மாமணியாய், உரையாடலுக்கு ஓங்கு புகழ் சேர்த்த ஒளி விளக்காய், வாதிடுவதில் வல்லமை மிக்க சாக்ரடீசாய்......

இப்படி எண்ணிலடங்கா திறமைகளை தன்னில் கொண்டிருந்த நம் பேரறிஞர் அண்ணாவின் 102வது பிறந்த நாளை கொண்டாடுவதில் நாம் பெரு மகிழ்வு கொள்கிறோம்.

மொழி, இலக்கியம், இனம், பண்பாடு ஆகியவற்றின் மறு மலர்ச்சிக்காக தன் வாழ் நாளை மிச்சமில்லாமல் அர்ப்பணித்தவர் அண்ணா. “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு’', “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'‘, “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு'’, “ஒன்றே குலம், ஒருவனே தேவன்’' போன்ற பேரறிஞரின் அமுத மொழிகள் என்றென்றும் சாகா வரம் பெற்ற அமரத்துவமான போதனைகளாய் இன்றும் வலம் வருகின்றன.

சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே மறுமலர்ச்சி என்ற தலையாய நோக்கங்களை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.

“என் கடன் பணி செய்து கிடப்பதே'’ என பொதுத் தொண்டில் பேரார்வம் கொண்டு உழைத்தார். தனது பிறந்த நாளைக் கூட, “என்னை இச்சமூகம் மேலும் பணியாற்ற இடும் கட்டளை’' என்றே அடக்கத்துடன் அறிவித்தார்.

அரை நூற்றாண்டு கால தனது அயராத போராட்டத்தால், காங்கிரஸ் கட்சியை தமிழக அரசியல் அதிகாரத்தில் இருந்தே அப்புறப்படுத்தி, திராவிட இயக்க ஆட்சிக்கு கால்கோள் நாட்டினார்.

1967ல் அரியணையில் அமர்ந்த அடுத்த ஆண்டே 1968ல் உலகத் தமிழ் மாநாட்டை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்வோடு பங்கு பெறும் வண்ணம் நடத்திக் காட்டினார். கருணாநிதி போல் மொழி, இனம் பேசி ஆட்சி அதிகாரங்களை ஐந்து முறை சுவைத்து விட்டு, விடைபெறும் விளிம்பில் தன் அரசியல் வாழ்வின் கடைசி தருவாயில், அவசர அவசரமாய் காலம் தன்னை பழிக்குமே என்கிற பதற்றத்தில் தற்புகழ்ச்சிக்காக உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தவில்லை.

ஸ்ரீ, ஸ்ரீமான், ஸ்ரீமதி, குமாரி என்னும் வடமொழிச் சொற்களுக்கு முற்றாக விடை கொடுத்து, திரு, திருமதி, செல்வி என்னும் அழகு தமிழ்ச் சொற்களை அரசு மடல்களில், ஆவணங்களில் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

சீர்திருத்தத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கினார். பிள்ளைக்கு தாய் பெயர் சூட்டும் நிகழ்வுகளை நாளும் நாம் பார்க்கலாம். ஆனால், தாய்க்கு ஒரு பிள்ளை பெயர் சூட்டுகிற பெருமையை பேரறிஞர் அண்ணா பெற்றார். இந்த மாநிலத்திற்கு “தமிழ்நாடு’' என்று பெயர் சூட்டி, சங்கரலிங்கனார் போன்ற தியாகிகளின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் மடை திறந்த வெள்ளமென, கொட்டுகிற அருவியென பேச்சாற்றல் கொண்டு, தமிழகம் கடந்து இந்தியாவைத் தொடர்ந்து, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் வரை தமிழினத்திற்கும், தமிழுக்கும் நம் பேரறிஞர் அண்ணா பெருமை சேர்த்தார்.

சிறந்த பேச்சாளர்கள் பட்டியலின் முன்னணியில் டொமஸ் தெனியை கொண்டு வந்து நிறுத்தியது கிரேக்க நாடு. 
எட்மண்ட் பர்க்கை கொண்டு வந்து நிறுத்தியது இங்கிலாந்து. ராபர்ட் கிரீன் இங்கர்சாலை கொண்டு வந்து நிறுத்தியது அமெரிக்கா. அந்த வரிசையில் “இதோ! எங்கள் உலகில் சிறந்த உன்னதப் பேச்சாளர்” என்று திராவிடம் முன்னிறுத்தியது நம் பேரறிஞர் அண்ணாவை.

மேடைப் பேச்சு என்பது வாய் பொத்தி, கைகட்டி பேசும் உபதேசமல்ல. அருள் வாக்குமல்ல. வசன சங்கீதமுமல்ல. வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பிரச்சனைகளைப் பற்றி மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது; மக்கள் மருண்டிருந்தால் மருட்சியை நீக்குவது; மக்கள் கவலையுற்றிருந்தால் பிரச்சனையின் பொறுப்பை உணரச் செய்வது; நீதியை நிலைநாட்ட, நேர்மையை வலியுறுத்த, நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளை சாய்க்க, சிறுமைகளின் சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும்.

அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையில் பூத்திடும் கருத்து மலர்களை அழகுறத் தொடுப்பதே மேடைப் பேச்சு என்றார் பேரறிஞர் அண்ணா.

மாற்றுக் கருத்து கொண்டோரை நாராச நடையில் பேசி, நான், நீ என்று விளிக்கும் நாலாந்தரப் பேச்சாளராய் இல்லாமல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று எதிர்ப்போரின் கருத்தையும் ஏற்று பரிசீலிக்கும் பரந்த உள்ளம் கொண்டவராக அண்ணா திகழ்ந்தார்.

இப்படி, பெருந்தன்மைகளின் உச்சமாய் வாழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் அரசியல் குருகுலத்தில் பண்பாடு கற்றுக்கொண்ட நல்ல மாணவராக நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவானார்.

“நீ முகம் காட்டினால் முப்பது லட்சம் வாக்குகள் நிச்சயம்“ என்று பேரறிஞரால் உச்சிமுகர்ந்து புகழப்பட்டவர் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

தம் குருவுக்கு செலுத்தும் நன்றிக் கடனாகவே நம் இயக்கத்தை பேரறிஞர் அண்ணாவின் பெயரிலேயே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்தார்.

தனது மாட்சிமை மிக்க தலைவரான பெரியாரின்பால் அன்பு கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, எப்படி தலைவர் இருக்கையை அவருக்காகவே கடைசி வரையிலும் ஒதுக்கி வைத்திருந்தாரோ, அது போலவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் தலைவர் இருக்கையை தான் நிரப்பிக் கொள்ளாமல், பொதுச் செயலாளர் பதவியையே ஏற்றுக்கொண்டார்.

அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியிலேயே பெரியாருக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இருக்கையை இன்றும் ஆக்கிரமித்துக் கொள்ளாமல், அவர்கள் வழியிலேயே நானும் அரசியல் பணிகளை செய்து வருகிறேன்.

ஒழுக்கம் போதிக்கும் உயரிய பள்ளியிலும் மோசமான மாணவர்கள் நுழைந்துவிடுவது போல, அண்ணாவின் அரசியல் குருகுலத்தில் பயின்றாலும், அவரது விருப்பத்திற்கு மாறாக அரியணையை ஆக்கிரமித்துக் கொண்டதோடு, அண்ணா, பெரியாருக்கு ஒதுக்கி வைத்த இருக்கையையும் தனதாக்கி, ஆக்கிரமித்து; கழகத்தை குடும்பமாக நேசிக்க வேண்டும் என்ற அண்ணாவின் பண்பாட்டை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு,

தனது கோபாலபுரக் குடும்பத்தையே கட்சியிலும், அரசியலிலும், அதிகாரங்களிலும் திணித்து, ஆக்கிரமித்து; அண்ணாவின் விருப்பத்திற்கு மாறாக நடந்து வருபவர் கருணாநிதி என்பதை இத்தருணத்தில் நினைத்து வருத்தப்பட்டுத் தான் ஆக வேண்டும்.

இன்று அண்ணா உயிரோடு இருந்திருந்தால், ''ஏ மிகத் தாழ்ந்த தமிழகமே" என்று விளித்து, வருந்தியிருப்பார். எழுத்தில் அடக்கிட முடியா அவலங்களால் தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தை, அதிகார வெறிபிடித்த கருணாநிதி குடும்பத்திடமிருந்து மீட்பது ஒன்று தான் அண்ணாவுக்கு நாம் சேர்க்கும் பெருமையாகும். அதற்காக இந்நாளில் உறுதி ஏற்போம்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்னும் பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரத்திற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி; ''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'' என்பதை, "என் குடும்பத்தின் சிரிப்பில் குதூகலத்தைக் காண்போம்" என்று உருமாற்றி;

''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு'' என்பதை, "மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு நல்ல விலை உண்டு" என்ற நிலையை உருவாக்கி; அநாகரீக அரசியலின் உச்சம் தொட்டுவிட்ட கருணாநிதி அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே, அண்ணா 102வது பிறந்த நாளில் நாம் ஏற்கும் சபதமாக இருந்திடல் வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: