Search This Blog

Wednesday, September 15, 2010

'U‌n‌i‌t‌e‌d S‌t​a‌t‌e‌s ‌o‌f I‌n‌d‌ia': நாட்டின் பெயரை மாற்றக் கோரி மதிமுக தீர்மானம்

இந்தியாவில் உண்மையான மாநில சுயாட்சி மலர அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் ​(U‌n‌i‌o‌n ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் ​(U‌n‌i‌t‌e‌d S‌t​a‌t‌e‌s ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்பட வேண்டும் என்று மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்ணாவின் 102வது பிறந்தநாளையொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காவிரி ஆறு, முல்லைப் பெரியாறு,பாலாறு போன்றவற்றிற்கு தமிழகத்திற்கான பங்கைப்பெறுவதில் திமுக அரசு தனது ஆட்சிக்காலத்தில் தவறிவிட்டது. இதனை மதிமுக வன்மையாக கண்டிப்பதோடு தமிழகத்திற்காக உரிமைக்காக மதிமுக தொடர்ந்து போராடும். 

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் திமுக அரசு ஆளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோடி, கோடியாக பணத்தைச் செலவு செய்தும், அதிகார பலத்துடன் வன்முறை நடத்தியும் வெற்றி பெற அவர்கள் திட்டமிடுகின்றனர்.

திமுக தலைவரின் குடும்பமா? அல்லது தமிழ்நாட்டின் ஜனநாயகமா? என்பதுதான், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் முன் வைக்கப்படும் கேள்வி.

அண்ணாவின் லட்சியங்களை வென்றெடுக்க, மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பெயரளவில் தான் கூட்டாட்சியாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா வலியுறுத்தினார்.

திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர, அதனைக் கேட்டதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நாம் விட்டுவிடவில்லை. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை என்பதுதான் எங்கள் கோட்பாடு என்று அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 1967ம் ஆண்டில் கூறினார்.

"அரசியல் சட்டம் மறுஆய்வு செய்யப்படலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்' என்று அதை உருவாக்கிய அம்பேத்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மத்தியில் நிலைநாட்டப்பட்டு, மாநில சுயாட்சி மலர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்திய ஒன்றியம் ​(U‌n‌i‌o‌n ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் ​(U‌n‌i‌t‌e‌d S‌t​a‌t‌e‌s ‌o‌f I‌n‌d‌ia)​​ என்று அழைக்கப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள ம.தி.மு.க. இடையறாது பாடுபடும்.

காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளியாகிவிட்ட, தமிழ் இனப் படுகொலையைக் கொடூரமாக நடத்திய சிங்கள அரசின் அதிபர் ராஜபக்சே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில், சுதந்திர தமிழ் ஈழத் தாயக லட்சியம், மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டதாகும். போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த லட்சியம் அழிந்து விடாது.

இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு [^] துரோகம் இழைத்தது. இதற்கு திமுகவும் உடந்தையாகச் செயல்பட்டது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ் ஈழ மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், அடிமை இருளில் இருந்து அவர்களை விடுவித்து, சுதந்திர ஒளியில் உரிமைக் கொடியை நாட்டுவதும், அவர்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள தாய்த்தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதால், திருச்சியில் 1995 ஜுலை 31ல் பிரகடனம் செய்த, `தனித் தமிழ் ஈழம்' என்ற தீர்மானத்தில், அணு அளவு மாற்றத்திற்கோ, சமரசத்திற்கோ இடம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற மதிமுக, ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டமைக்கவும் தொடர்ந்து பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை மதிமுகவின் நிர்வாகிகள் முன்மொழிய கூடியிருந்த சுமார் 15,000 தொண்டர்கள் கைத்தட்டலுடன் அவை நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே கட்-அவுட்களில் பெரியார், அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்-அவுட் வைக்கப்படவில்லை.

மாநாட்டுக்கு மதிமுகவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

No comments: