டில்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புஷ்பவிகார் பகுதியில் அ.தி.மு.க.,வுக்கு கட்சி அலுவலகம் கட்டுவதற்கு கால் ஏக்கர் நிலத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 25 லட்ச ரூபாய் வரை மத்திய அரசுக்கு அ.தி.மு.க., அளித்து, 99 ஆண்டுகளுக்கான குத்தகையை அக்கட்சி பெற்றுள்ளது. இந்நிலத்தில் கட்சி அலுவலகம் கட்டிக் கொள்வதற்கு ஆண்டு தோ றும், 50 ஆயிரம் ரூபாயை மத்திய அரசுக்கு அ.தி.மு.க., அளிக்க வேண்டி வரும்.
தலைநகர் டில்லியில், அரசியல் கட்சிகள் எல்லாமே, அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து, கட்சி அலுவலகங்களாக மாற்றியுள்ளன. முன்னாள் பிரதமர் சந்திரசேகர், காங்கிரஸ் எஸ் கட்சியை நடத்திய போது, அந்த கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி., தான் இருந்தார். ஆனாலும், அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், ஏழு அரசு பங்களாக்களை ஆக்கிரமித்து இருந்தனர். இது பெரிய பிரச்னையாக அப்போது மாறியது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலைநகர் டில்லியில் அலுவலகம் கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்தது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு டில்லியில் பிரதான இடமாக விளங்கும் ஆந்திர பவன் அருகே அமைந்த ரவுஸ் அவென்யூ பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில கட்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் நிலம் ஒதுக்க மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் முன்வந்ததை அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியான அ.தி.மு.க.,வுக்கு, தற்போது நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தெற்கு டில்லி சாகேத் என்ற பகுதியை ஒட்டி அமைந்துள்ளது புஷ்பவிகார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் தான் அ.தி.மு.க., வுக்கு கால் ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை நேற்று முன்தினம் முறைப்படி அ.தி.மு.க., பார்லிமென்ட் தலைவர் தம்பிதுரை நேரில் சென்று அதிகாரிகளை வைத்து அளந்து பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய தம்பிதுரை, "அடுத்து தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமையும்பட்சத்தில் இங்கு ஒரே ஆண்டில் அலுவலகம் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்படும்' என்றார்.
99 ஆண்டுகளுக்கு குத்தகையாக பெற்றுள்ள இந்நிலத்தை, 25 லட்ச ரூபாய் வரை மத்திய அரசுக்கு செலுத்தி அ.தி.மு.க., வாங்கியுள்ளது. ஆண்டுதோறும் குத்தகை தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசுக்கு அக்கட்சி வழங்க வேண்டும். புஷ்பவிகார் பகுதி என்பது தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு கவுன்சிலராக இருக்கும் நாகராஜ் என்பவர் ஒரு தமிழர். இவர், பா.ஜ.,விலிருந்து அப்பகுதி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பகுதியில் பி.ராமமூர்த்தி நினைவாக இரண்டு கிரவுண்டு நிலத்தில் சி.ஐ.டி.யூ., கட்டடம் கட்டவும் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு திராவிட கட்சியான தி.மு.க.,வின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அக்கட்சிக்கு டில்லியில் அலுவலகம் என்ற ஒன்று இதுவரை இல்லை. பார்லிமென்டில் அக்கட்சிக்கு என அலுவலகம் உள்ளது. இம்முறை, 17 எம்.பி.,க்கள் வரை வெற்றி பெற்று வந்ததால், கீழ் தளத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிக்கு இவ்வாறு கீழ்தளத்தில் பெரிய அலுவலகம் ஒதுக்கப்படுவது இதுவே முதல்முறை. ஆனாலும், ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் தெலுங்கு தேசம் கட்சி தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அறையை காலி செய்யும்படி உயர் அதிகாரிகளிடம் தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, இளங்கோவன் ஆகியோர் பலமுறை முறையிட்டும், இதுவரை அந்த அலுவலகம் தி.மு.க., கைக்கு வந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நேற்று அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி, அ.தி.மு.க., சார்பில் டில்லியில் கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment