Search This Blog

Tuesday, August 31, 2010

மத்திய அரசுடன் பேரம் பேச "மாநில சுயாட்சி' ஆயுதம் : ஜெ., குற்றச்சாட்டு

மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காக, "மாநில சுயாட்சி' என்ற ஆயுதத்தை கருணாநிதி கையில் எடுத்து கொண்டிருக்கிறார்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கல்வி, வரிவிதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பாதிக்காத வகையில் மத்திய அரசின் அணுகுமுறை இருக்க வேண்டுமென, தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "மாநில சுயாட்சி, மாநில உரிமை' குறித்து கருணாநிதி பேசுகிறார் என்றால், தன்னாட்சி, தன் உரிமைக்கு பங்கம் வந்து விட்டது என்று தான் பொருள்.தன்னலத்திற்காக மாநிலத்தின் உரிமைகளை விற்ற கருணாநிதிக்கு, மாநில சுயாட்சி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. கச்சத்தீவு மற்றும் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்னைகளில் நமக்குள்ள உரிமைகளை அவர் தாரை வார்த்துள்ளார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு அறிவித்த போது, அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், கருணாநிதி கடிதம் எழுதினார்.மத்திய அரசின் இந்த செயலுக்கு நான் கண்டனம் தெரிவித்து, அறிக்கை விடுத்ததோடு, இந்த திட்டத்தை கைவிடவில்லை என்றால், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன் மத்திய அரசு அதை நிறுத்தி விட்டது.தமிழகத்தில், "வாட்' வரி செயல்படுத்தப்பட வேண்டும் என்றால், 100 சதவீத இழப்பீட்டை மத்திய அரசு தர வேண்டும்; சேவை வரி விதிக்கும் உரிமையை மாநில அரசுக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைத்து மாநிலங்களும், "வாட்' வரியை அமல்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் பின்பற்றவில்லை என்றால் வரி இழப்பு ஏற்படும் என்று தி.மு.க., தெரிவித்தது.

கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், "வாட்' வரியை செயல்படுத்தினார். இதன் விளைவாக, தமிழக அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, மாநிலத்தின் வரி விதிக்கும் உரிமையும் பறிபோய் இருக்கிறது."வாட்' அமல்படுத்தியது காரணமாக, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு வர வேண்டிய இழப்பீட்டுத் தொகையான 3,500 கோடி ரூபாய் இன்று வரை வழங்கப்படவில்லை.இது மட்டுமல்லாமல், 2007ம் ஆண்டு, "வாட்' வரியை அமல்படுத்த கருணாநிதி முடிவெடுத்த போதே, சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பிற்கு ஒப்புக் கொண்டு விட்டார் என்று தான் அர்த்தம்.இந்த சூழ்நிலையில், இப்போது "மாநில சுயாட்சி, மாநில உரிமை' என்று கருணாநிதி புலம்புவது நகைப்புக்குரியதாக உள்ளது.

"வாட்' வரியை தமிழகத்தில் அமல்படுத்தியதன் மூலம், மாநிலத்தின் வரி விதிக்கும் உரிமையை கருணாநிதி தாரை வார்த்து இருக்கிறார்.சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநில அரசுக்கு எந்த வரி விதிக்கும் உரிமையும் இல்லாமல் போய்விடும். மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் சீரழித்த பெருமை கருணாநிதியையே சாரும்.தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி தொடருமானால், 69 சதவீத இட ஒதுக்கீடு உட்பட, தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய் விடக்கூடிய நிலைமை ஏற்படும். "உரிமை' என்ற நிலை மாறி, "யாசகம்' என்ற நிலை உருவாகிவிடும்.தற்போது மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காக, "மாநில சுயாட்சி' என்ற ஆயுதத்தை கருணாநிதி கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் இவருக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments: