கிராமப்புற மாணவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிடுவது, அதிகரித்து வருவதாக, தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் சோனியா கவலை தெரிவித்துள்ளார். நவோதயா வித்யாலயா சார்பில் நடந்த விழாவில், காங்கிரஸ் தலைவரும், தேசிய ஆலோசனை குழுத் தலைவருமான சோனியா கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை உள்ளது. அது சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. நாட்டில், தற்போது கட்டாய கல்விச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, படிப்பதற்கு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்காகவும், அவர்களின் குழந்தைகளுக்காகவும் கவலைப்பட்டார். அவர்கள், பொருளாதாரத்திலும் கல்வியிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்பினார். நவோதயா வித்யாலயா பள்ளிகளை ராஜிவ் அறிமுகப்படுத்தினார். தற்போது, நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பாதியிலேயே படிப்பை கைவிடுவது அதிகரித்து வருகிறது. கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் நான்கில் ஒரு பங்கு ஆசிரியர்கள் பணிக்கு சரியாக வருவதில்லை. இதனால், மாணவர்களின் படிப்புத் தரம் குறைகிறது. மாணவர்களும் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வியையும், அவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment