Search This Blog

Wednesday, September 29, 2010

தங்கபாலு கூட்டத்தில் சிதம்பரம் ஆதரவாளருக்கு தர்ம அடி

தேனியில் நடந்த காங்., கூட்டத்தில், அமைச்சர் சிதம்பரம் படத்தை நோட்டீஸ் மற்றும் போஸ்டரில் போடாததை கண்டித்து, கட்சித் தலைவர் தங்கபாலுவிடம் கேள்வி எழுப்பிய கம்பம் ஒன்றிய தலைவர் பால்பாண்டியனுக்கு தர்ம அடி விழுந்தது.
தேனி மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டம் நேற்று, மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஆருண் எம்.பி., மாவட்ட வர்த்தக காங்., தலைவர் சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க வந்த மாநில தலைவர் தங்கபாலுவை வரவேற்று, நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை எதிலும் மத்திய அமைச்சர் சிதம்பரம் படம் இடம் பெறவில்லை. இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் கூட்டம் துவங்கியதும், கம்பம் ஒன்றிய காங்., தலைவர் பால்பாண்டியன், மேடை ஏறி வந்து தங்கபாலுவிடம், "நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் வரவேற்பு போஸ்டர்கள், தட்டிகள் எதிலும் சிதம்பரம் படம் இடம்பெறவில்லை' என புகார் தெரிவித்தார். அவரை தங்கபாலு சமாதானம் செய்தாலும், தொடர்ந்து பால்பாண்டியன் வாக்குவாதம் செய்தபடி இருந்தார். இதனால், மேடை முன் இருந்த பலர், பால்பாண்டியனை கீழே இறங்கும்படி கூச்சல் எழுப்பினர். தங்கபாலுவும், கீழே இறங்குமாறு பால்பாண்டியனை சத்தம் போட்டார். உடனே, மேடையில் இருந்த காங்., நிர்வாகிகள், பால்பாண்டியனை கீழே தள்ளினர். கீழே இருந்த தொண்டர்கள் அவரை அடித்து, உதைத்து, ஏறி மிதித்தனர்.

இதனால் கோபமடைந்த தங்கபாலு, "அறைக்குள் பேசும் விஷயங்களை, மேடையில் பத்திரிகையாளர்கள் முன் பேசக்கூடாது. விளம்பரம் தேடிக் கொள்வதற்காக நடத்தும் இது போன்ற சம்பவங்களால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். காங்., கட்சியில் சோனியா, ராகுல் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் கிடையாது. தமிழகத்தில் நான், சிதம்பரம், வாசன், இளங்கோவன் உட்பட எல்லா தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். சிறு விஷயங்களை பெரிதுபடுத்தி, யாரும் தகராறு செய்ய வேண்டாம். சோனியா அக்., 9ல் வந்து சென்ற பின், 10ம் தேதி முதல் நான் கட்சியினரிடம் குறைகளை கேட்பேன். அப்போது எல்லா விஷயங்களையும் கூறுங்கள்' என்றார். 

No comments: