Search This Blog

Tuesday, September 7, 2010

தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மீண்டும் எழுச்சி பெறும் காங்கிரஸ்: ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் 35,000 இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14.5 லட்சமாக உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி [^] கூறினார்.

கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

தொடர்ந்து கம்யூனிஸ்டு ஆட்சியின் கீழ் இருந்து வரும் மேற்கு வங்க மாநிலத்தின் பரிதாப நிலையை காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்லது. இதனால் மாநிலத்துக்கு எண்ணற்றத் திட்டங்களை மத்திய அரசு [^] அறிவித்து அதற்காக கணிசமான நிதியையும் ஒதுக்கியது.

ஆனால், மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியை மேற்கு வங்க மாநில அரசு வீணாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அளித்த நிதியின் பெரும்பகுதி சுரண்டப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்காக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஒரு உருப்படியான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை.

மேற்கு வங்கத்தில் இரு பிரிவினர் உள்ளனர். ஒன்று எல்லா வசதிகளையும் பெற்று செல்வச் செழிப்புடன் வாழும் கம்யூனிஸ்டு கட்சியினர். மற்றொன்று எந்த ஒரு வசதி வாய்ப்பும் இல்லாமல் மிகவும் பின்தங்கியிருக்கும் மற்றவர்கள்.

ரஷ்யாவில் கம்யூனிசம் முடிவுக்கு வந்ததாக ஒரு நாள் செய்திதாளில் நான் படித்தேன். அதே நிலை மேற்கு வங்கத்திலும் ஏற்படும். மார்க்சிஸ்ட் அரசு தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

கம்யூனிஸ கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்த உலக நாடுகள் எல்லாம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளன. கம்யூனிஸ நாடான சீனாவே வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ஆனால் மேற்கு வங்கத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டு கட்சியினர் கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறிப் போயுள்ளனர். வளர்ச்சிக்கு அவர்கள் பெரும் தடைக்கல்லாக உள்ளனர். நான் சீனா சென்றிருந்த போது அந்நாட்டு மூத்த கம்யூனிஸ்டு தலைவர்களை சந்தித்தேன். அவர்கள்கூட மேற்கு வங்க கம்யூனிஸ்ட்டுகள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசுக்கு புத்துயிரூட்ட நான் முயற்சித்த போது என்னை பலரும் கேலி செய்தார்கள். அங்கு காங்கிரஸ் புத்துயிர் பெறுவது நடக்காத காரியம் என்றார்கள். அதை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு கட்சிக்கு புத்துயிரூட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டேன். இப்போது உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எழுச்சியடைந்துள்ளது.

அதே போல தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்.

எனது இந்த கருத்தைக் கேட்டு சிலர் சிரிக்கலாம். ஏளனம்கூட செய்யலாம். இதைப் பற்றியெல்லாம் தொண்டர்கள் கவலைப்படக் கூடாது.

தமிழ்நாட்டில் 35,000 ஆக இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது, 14.5 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதே போல மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலத்தை கம்யூனிஸ்ட்களின் கையிலிருந்து விடுவிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் ராகுல்.

பின்னர் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி [^], ராகுல் புதிய தலைமுறையின் தலைவர். நாங்கள் அவருக்குஉறுதுணையாக இருப்போம். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், தமிழ்நாடு [^] ஆகிய மாநிலங்களில் தான் இந்தியாவின் 40 சதவீத நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. எனவே அந்த மாநிலங்களில் நாங்கள் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.

No comments: