Search This Blog

Wednesday, September 29, 2010

அயோத்தி பாதுகாப்பு வளையத்தில் தீர்ப்பு கூறும் நீதிபதிகள்


லக்னெள: அயோத்தி நில விவகார வழக்கில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பை அறிவிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையின் 3 நீதிபதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தான் இன்று இந்தத் தீர்ப்பை அளிக்கவுள்ளது.

இந்த தீர்ப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளையின் உள் பகுதியிலும், வெளிப் பகுதியிலும் கூடுதலாக மத்தியப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணியில், ஒரு எஸ்பி, 6 கூடுதல் எஸ்பிக்கள், 22 துணை எஸ்பிக்கள், 144 சப்-இன்ஸ்பெக்டர்கள், 104 ஏட்டுகள், 807 போலீஸார் மற்றும் 200 மத்திய கமாண்டோ படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீர்ப்பை வெளியிடவுள்ள நீதிபதிகள் டி.வி.சர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யு.கான் ஆகியோருக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிபதிகளின் வீடுகளுக்கு தலா 20 கமாண்டோ படையினர், 5 மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

மேலும் 3 நீதிபதிகளுக்கும் தனித்தனி பாதுகாப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகளின் கார்களுக்கு முன்பாக `பைலட்' கார்களும், பின்னால் `எஸ்கார்ட்' கார்களும் பாதுகாப்புக்காக செல்கின்றன.

No comments: