Search This Blog

Wednesday, September 15, 2010

இனி வாரத்திற்கு 5 முட்டை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு தற்போது வாரத்திற்கு மூன்று நாட்கள் வழங்கப்படும் முட்டை, இனி பள்ளி வேலை நாட்கள் முழுவதும் வழங்கப்படும்,'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதன்படி, இனி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஐந்து நாட்களும் முட்டை வழங்கப்படும்.மேலும், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்காலிக நிலையில் பணிபுரிந்து வரும் துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தை 1,500 - 3,000 ரூபாய் என்ற நிலையில் உயர்வு அளித்தும் முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில், எட்டு ஏக்கர் பரப்பளவில் 180 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா, நேற்று மாலை நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.

நூலகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையையும், நூலகத்தையும் திறந்து வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:அண்ணா பெயரில் நூலகம் அமைய வேண்டும் என்ற எண்ணம், இப்போது ஏற்பட்டது அல்ல. அண்ணா பெயரால், பெரியார் பெயரால், பாரதிதாசன் பெயரால் வீதிதோறும், குக்கிராமம்தோறும் நூலகங்களை ஏற்படுத்தி, இந்த இயக்கத்தின் கருத்துக்களை பரப்பிய செயல்பாட்டின் தொடர்ச்சியாகத் தான், இந்த நூலகம் அமைந்துள்ளது.கடந்த 1948ல், "நூலகம்' என்ற தலைப்பில் ரேடியோவில் அண்ணா பேசினார். அப்போதெல்லாம், ரேடியோவில் பேச நம்மவர்களை அழைப்பதில்லை. ரேடியோ நிகழ்ச்சி, ஒரு சாராருக்கு மட்டுமே உரியது என்ற நிலையில், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து பேசச் சொல்லவில்லை; நிகழ்ச்சி நடத்தவும் அனுமதிப்பது கிடையாது.
அதே வானொலி நிலையம், 1948ல் நூலகத்தின் அவசியம் குறித்து பலரை அழைத்து பேசச் செய்தது. அதில், அண்ணாவும் பேசினார். நூலகத்தின் அவசியத்தைப் பற்றி பேசி, "வீடுகளில் அடிப்படை தேவைகளுக்குப் பின், சிறிய அளவில் நூலகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம்' என வலியுறுத்தினார்.

அவரது கூற்றுக்கு இணங்க, கிராமங்கள்தோறும், மாவட்டங்கள்தோறும் நூலகங்களை அமைத்து தி.மு.க., அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது அண்ணாவின் கனவை நிறைவேற்றியுள்ளோம்.அண்ணா, தனது வாழ்நாள் முழுவதும் புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சென்னை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்øகு நாள் குறித்த நிலையில் கூட, படிப்பதை அவர் நிறுத்தவில்லை. அதை நினைக்கும் போது ஏற்படுகின்ற துன்பத்தை தாங்க முடியவில்லை. எப்போதும், புத்தகமும், கையுமாக இருப்பார். அதனால் தான், அண்ணா புத்தகம் படிப்பது போன்ற நிலையில் அவரது சிலையை, நூலகத்தின் முன்பகுதியில் நிறுவியுள்ளோம்.

இந்நூலகத்தை, மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நூலகத்தின் தூய்மையை கடைபிடிக்கவும், நல்ல முறையில் பாதுகாக்கவும் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அண்ணா பிறந்த நாளான இன்று(நேற்று), இரண்டு அறிவிப்புகளை வெளியிடுகிறேன். பள்ளி மாணவர்களுக்கு, தி.மு.க., ஆட்சியில் தான் முதலில் ஒரு முட்டை வழங்கப்பட்டது. பின், கடந்த 2006 ஜூலை முதல் இரண்டு முட்டைகளாகவும், 2007 ஜூலை முதல், வாரத்திற்கு மூன்று முட்டை எனவும் வழங்கப்பட்டு வருகிறது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, வாழைப் பழம் வழங்கப்படுகிறது. இனி, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வேக வைத்த முட்டை வழங்கப்படும்.

அரசு, அரசு சார்ந்த அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில், தற்காலிக அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு, 1000 - 1,500 ரூபாய் என்ற நிலையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு இனி, அடிப்படை ஊதியம் 1,500 - 3,000 ரூபாய் என்ற நிலையில் திருத்தி, உயர்த்தி வழங்கப்படும்.அதன்படி, தொடக்க நிலையில் 2,320 ரூபாய் மாத ஊதியம் பெறுவர். மேலும், ஆண்டுக்கு 3 வீதம் வீதம் அகவிலைப்படி வழங்கப்படும். நூலகத்திற்காக வருபவர்களுக்கு, பஸ் கட்டணத்தில் சலுகை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், அண்ணா நூலகத்தின் முதல் உறுப்பினர் அட்டையை முதல்வருக்கு, நூலகத் துறை இயக்குனர் அறிவொளி வழங்கினார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். தலைமைச் செயலர் மாலதி நன்றி கூறினார்.

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பாராட்டு : விழாவில் முதல்வர் பேசும் போது குறிப்பிட்டதாவது: அண்ணாவின் நினைவாக, எழில் மாளிகையாக இந்த நூலகம் உருவாகியிருக்கிறது என்றால், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசின் உழைப்பும், முயற்சியும் தான் காரணம். யாரிடம், எந்தப் பணியை ஒப்படைக்க வேண்டும் என்று சிந்தித்து ஒப்படைப்பது என்பது வேறு; ஆனால், அதை மிகச் சிறப்பாக செய்து முடிப்பது தான் முக்கியம்.அந்த வகையில், தி.மு.க., மாவட்டச் செயலர்களில் தங்கம் தென்னரசின் தந்தை தங்கபாண்டியன் மிகச்சிறப்பாக பணியாற்றினார். அவர் பெற்ற செல்வம் தங்கம் தென்னரசு, தந்தைக்கு நிகராக, நாங்கள் ஆற்றும் பணிக்கு உடந்தையாக இருந்து, நான் கடிந்தால் வருந்தாமலும், நான் வாழ்த்தினால் அதை ஊக்கமாக எடுத்துக் கொண்டும் இந்தப் பணியை செய்து முடித்திருக்கிறார். அவரை, அனைவரது சார்பிலும் வாழ்த்துகிறேன்.கட்சியில் ஏற்கனவே ஒரு தென்னரசு இருந்தார். அவர் மறைந்துவிட்டதை நினைத்து, நான் கவலை கொள்வது உண்டு. அந்தக் கவலையை போக்கும் வகையில், அவருக்குப் பதில் இன்னொரு தென்னரசாக இவர் விளங்குகிறார்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக, அமைச்சர் வரவேற்று பேசும் போது, "குமரியில் திருவள்ளுவர் சிலையாக இருந்தாலும், வள்ளுவர் கோட்டமாக இருந்தாலும், டைடல் பார்க்காக இருந்தாலும், வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றிய பெருமை முதல்வருக்கு உண்டு. அந்த வரிசையில் தான், இந்த நூலகமும் உருவாகியுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், வருங்கால சந்ததியினரிடையே இந்த வரலாறும், பெருமையும் நிலைத்து நிற்கும். இத்தகைய பணியில் நாங்களும் பங்கேற்றதை பெருமையாக நினைக்கிறோம்' என்றார்

No comments: