Search This Blog

Monday, September 6, 2010

பீகார் சட்டசபைக்கு 6 கட்டதேர்தல் : அக்டோபர் 21ல் ஆரம்பம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 21ல் துவங்கி, நவம்பர் 20 வரை, ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். பீகாரில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது, அன்று மாலை தெரிந்து விடும்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். பீகார் சட்டசபையில் 243 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவிக் காலம், வரும் நவம்பர் 27ல் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் குறித்து, எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளமும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சியும் தொகுதி பங்கீட்டை முடித்து விட்டன. மற்றொரு புறம், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, இந்த தேர்தலிலும் தொடர்கிறது. அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேதி அறிவிப்பு : இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டசபை தேர்தலுக்கான தேதியை, தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.இதன்படி, பீகாரில் அடுத்த மாதம் 21ல் துவங்கி, வரும் நவம்பர் 20 வரை, ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் (47 தொகுதி) அக்.,  21ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் (45) அக்., 24ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் (48 தொகுதி) அக்., 28ம் தேதியும் நடக்கின்றன.நான்காம் கட்ட தேர்தல்  (42 தொகுதி) வரும் நவம்பர் 1ம் தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல் (35 தொகுதி) நவ., 9ம் தேதியும், ஆறாம் கட்டம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் (26 தொகுதி) நவ., 20ம் தேதியும் நடக்கின்றன.

தேர்தலில் பதிவான ஓட்டுகள், நவ., 24ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 56 ஆயிரத்து 943 ஓட்டுச் சாவடி மையங்கள் அமைக்கப்படும்.  இந்த தேர்தலில் 5.5 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.

சட்டசபை தேர்தலுடன் சேர்த்து, பங்கா லோக்சபா தொகுதிக்கான லோக்சபா தேர்தலும் வரும் நவம்பர் 1ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், அனைத்து தொகுதிகளிலும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனராக குரேஷி பதவியேற்றபின், அவர் நடத்தும் முதல் தேர்தல் இது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பீகாரில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. பீகாரில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது, வரும் நவம்பர் 24ம் தேதி தெரிந்து விடும்.

No comments: