Search This Blog

Monday, September 6, 2010

சோனியாவின் அரசியல் பிரவேசம் அசாதாரணமானது


12 ஆண்டுகளுக்கு முன்பு இனி காங்கிரஸ் கட்சி அவ்வளவுதான் என்று நாடெங்கும் பேச்சு கிளம்ப, ராஜீவ் படுகொலையால் மவுனியாக மாறி இருந்த சோனியா, தன் அமைதியைக் கலைத்துவிட்டு காங்கிரசுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

1997-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் முதன் முதலாக காங்கிரஸ் கட்சி உறுப்பினராக சோனியா தன்னை பதிவு செய்து கொண்டார். அதில் இருந்து சரியாக 62-வது நாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா பொறுப்பேற்றார். அப்போது கூட சரத்பவாரும், சங்மாவும் இந்தியா காங்கிரசுக்கு இத்தாலி நாட்டுப் பெண் பொறுப்பு ஏற்பதா? என்று எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றனர்.

முதலில் இதை கண்டு மிரண்டு கண்ணீர்விட்ட சோனியா, பிறகு தெளிவாகி தைரியசாலியாக மாறினார். காங்கிரஸ் கட்சியை சக்தி வாய்ந்த கட்சியாக மாற்றுவேன். மதவாத சக்திகளை ஒழித்துக்கட்டுவேன் என்று சபதம் எடுத்தார்.

அந்த சபதத்தில் இன்று சோனியா ஓரளவு வெற்றி பெற்றுவிட்டார். இதற்காக சோனியா எதிர்கொண்ட இடையூறுகள், அவமானங்கள், பழிச்சொற்கள் ஏராளம்.

இத்தாலி நாட்டில் உள்ள வெனிடோ பகுதியில் இருக்கும் லுசியானா எனும் குக்கிராமத்தில் 1946-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி சோனியா பிறந்தார். அவரது இயற்பெயர் எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோ.

பெற்றோர் ஸ்டெபனோ அன்டோனியா- பவோலா மைனே. 1964-ம் ஆண்டு தன் 18-வது வயதில் பெல் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள சோனியா இத்தாலியில் இருந்து இங்கிலாந்து வந்தார். படிப்பு செலவுக்காக ஒரு ஓட்டலில் பணிப் பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கச் சென்றிருந்த ராஜீவ்காந்தி அந்த ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிடச் செல்வார். சோனியாவை பார்த்த முதல் பார்வையிலேயே ராஜீவுக்கு காதல் வந்துவிட்டது. சோனியாவும் ராஜீவை விரும்பினார்.

இந்திராகாந்தியிடம் ராஜீவ் இதுபற்றி சொன்னபோது, இந்திரா மிகவும் தயங்கினார். இந்திராகாந்தியின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான நடிகர் அமிதாப்பச்சனின் தாய் தேஜிபச்சன்தான் கடுமையாக போராடி ராஜீவ் காதல் திருமணத்துக்கு இந்திராவை சம்மதிக்க வைத்தார்.

1968-ம் ஆண்டு ராஜீவ்- சோனியா திருமணம் நடந்தது. அப்போது சோனியாவுக்கு வயது 22. டெல்லி சப்தர் ஜிங் சாலையில் உள்ள இந்திராகாந்தி வீட்டுக்குள் குடியேறியபோது இந்திய வகை உணவுகளும், சேலை உள்ளிட்ட உடைகளும் சோனியாவுக்கு கடும் சவாலாக இருந்தது.

ராஜீவ் “பைலட்” பணிக்குச் செல்ல சோனியா குடும்பத்தை கவனித்துக் கொண்டார். 1970-ல் ராகுல், 1972-ல் பிரியங்கா பிறந்தனர். சுமார் 10 ஆண்டுகள் ராஜீவ் மற்றும் குழந்தைகளுடன் மிக, மிக குதூகலமாக இருந்தார்.

மாமியார் இந்திரா காந்தியின் அரசியல் ஏற்றத் தாழ்வுகளை அருகில் இருந்து பார்த்தாலும் எந்த ஒரு சிறு விஷயத்திலும் அவர் மூக்கை நுழைத்ததே இல்லை. அரசியல் என்றாலே அவருக்கு அலர்ஜியாக இருந்தது.

இந்திராகாந்தியின் அதிரடி அரசியல் அவருக்கு பிரமிப்பை தந்தது. 1977ல் இந்திரா நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது மிரண்டு போன சோனியா, ராஜீவை வெளிநாடு அழைத்து சென்றுவிட்டார்.

1980ம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய்காந்தி மரணம் அடைந்த பிறகு ஒட்டு மொத்த காங்கிரஸ் காரர்களின் கவனமும் ராஜீவ் பக்கம் திரும்பியது. ராஜீவ் அப்போது பைலட் ஆக இருந்தார்.

ராகுலுக்கு சரியாக 10 வயது, பிரியங்காவுக்கு 8 வயது நடந்து கொண்டிருந்தது. கணவர், குழந்தைகள் என்று நிம்மதியாக, மகிழ்ச்சியோடு இருந்த சோனியாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜீவை அரசியலுக்கு வருமாறு அழைத்தது பிடிக்கவில்லை.

நமக்கு இந்த அரசியலே வேண்டாம் என்று கண்ணீர் விட்டார். சோனியாவை சமரசம் செய்து பக்குவப்படுத்த இந்திராவுக்கும், ராஜீவுக்கும் சுமார் 2 ஆண்டுகள் தேவைப்பட்டன.

1982-ம் ஆண்டு ராஜீவ் அரசியலில் குதித்தார். அதன் பிறகும் கூட சோனியா அரசியலில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தார். 1983-ம் ஆண்டு தனது தந்தை ஸ்டெபனோ மறைந்தபோது ஓசையின்றி சென்று வந்தார். அதன் பிறகே அவர் இந்திய பிரஜை ஆனார்.

1984-ம் ஆண்டு மெய்காவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை சோனியாவால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஏற்கனவே அரசியல் என்றாலே பயம் வந்தது.

ஆனால் அவரது அணுகு முறைகளை மீறி ராஜீவ் காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் ஆக்கினார்கள். அதன் பிறகு சோனியாவிடம் மெல்ல, மெல்ல மாற்றங்கள் வந்தது. 1984 பாராளுமன்றத் தேர்தலின்போது அமேதி தொகுதியில் ராஜீவுக்காக பிரசாரம் செய்யும் அளவுக்கு அவர் மாறி இருந்தார். அதோடு இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு எல்லாம் பறந்து சென்று பொதுக்கூட்டங்களில் பேசினார்.

1984 முதல் 1989 வரை 5 ஆண்டுகள் அவர் அரசியலை ஓரளவு புரிந்து கொண்டார். என்றாலும் எதிலும் அவர் தன்னை முன் நிறுத்திக் கொள்ளவில்லை.

1989ல் போபர்ஸ் பீரங்கி ஊழல் பூதாகரமாக கிளம்பியது. இதனால் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

1989-ல் ஏற்பட்ட வி.பி.சிங் ஆட்சி, சந்திரசேகர் கைக்கு மாறி இரண்டே ஆண்டுகளில் கவிழ்ந்துபோனது. 1991-ல் உடனடியாக பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தபோது ராஜீவ் மீண்டும் பிரதமர் ஆகிவிடுவார் என்று உலகமே எதிர்பார்த்தது.

ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரசாரம் செய்ய வந்த இடத்தில் ராஜீவ் கொல்லப்பட்டபோது சோனியா துடிதுடித்துப் போனார். அவருக்கு உலகமே இருண்டு போனது போல இருந்தது.

அப்போது ராகுலுக்கு 21 வயது. பிரியங்காவுக்கு 19 வயது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட விதத்தை யாராலும் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அந்த அனுதாப அலை காரணமாக காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எல்லாரும் சோனியா பிரதமர் ஆவாரா என்று எதிர்பார்த்தனர்.

ப்ளீஸ், என்னை விட்டு விடுங்கள் என்று சோனியா கெஞ்சவே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் நரசிம்மராவை பிரதமராக தேர்வு செய்தனர்.

1996 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தாலும் சோனியா ஒரு மவுனி போலதான் இருந்தார். ராகுல், பிரியங்காவும் கூட பரபரப்பு வெளிச்சத்துக்குள் வரவில்லை.

No comments: