Search This Blog

Monday, September 20, 2010

காங்கிரஸ் எனக்கு ரூ. 300 கோடி பணம் கொடுத்ததா?: விஜயகாந்த்

 திமுகவை ஆட்சியிலிருந்து விரட்டுவதே எனது முதல் வேலை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் [^].

சென்னையில் தேமுதிக 6வது ஆண்டு விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கட்சித் தலைவர் விஜயகாந்த் சிறப்புரையாற்றினார்.

விஜயகாந்த் பேசியதாவது...

தே.மு.தி.க. ஆட்சிக்கு வராது என்று புலம்புகிறார்கள். நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. தெய்வம் இருக்கிறது. நான் கடவுளை நேசிக்கிறேன். விழுப்புரத்தில் அம்பேத்கார் சிலை வைத்த என்னுடைய தொண்டர்களை தடுத்திருக்கிறார்கள். என்னுடைய கட்சியை சேர்ந்த 260 பேர் மீது வழக்கு போட்டுள்ளனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டோம். என்மீது வேண்டுமானாலும் வழக்கு போடட்டும். நானும் ஜெயிலுக்கு செல்ல தயார்.

என்னுடைய படமான விருதகிரி வெளிவரவிடாமல் தடுக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். எத்தனையோ கோடிகளை இழந்திருக்கிறேன். திருமண மண்டபத்தை கூட இழந்திருக்கிறேன். பல கோடிகளை பார்க்கவேண்டும் என்றால் அரசியலில் கூட்டணி வைத்திருப்பேன்.

விஜயகாந்த் இந்தப்பக்கம் போய்விட்டார், அந்தப்பக்கம் போய்விட்டார் என்று கூறுகிறார்கள். கூட்டணி பற்றி நான் மக்களை குழப்புவதாக கூறுகிறார்கள். நான் தெளிவாகதான் இருக்கிறேன். அவர்கள் தான் கூட்டணி பற்றி குழம்பிபோய் இருக்கிறார்கள். கூட்டணி சம்பந்தமாக தொண்டர்களை கலந்து பேசிதான் முடிவு செய்வேன். தொண்டர்களை கலந்து பேசாமல் எதையும் செய்யமாட்டேன். மக்களுக்காக தொண்டு செய்வதுதான் எனது வழி.

எங்கு சென்றாலும் என்னை ராஜா மாதிரி அழைத்து செல்கின்றீர்கள். இதைவிட எனக்கு என்ன வேண்டும். ஒவ்வொரு தொண்டனுடைய வீட்டிலும் ஒரு நாள் சாப்பிட்டாலே போதும்.

எங்களுடைய கட்சி தொண்டர்களை சீண்டி பார்க்காதீர்கள். இங்கு வந்திருக்கும் கூட்டம் திரட்டப்பட்ட கூட்டமல்ல. திரண்டு வந்திருக்கும் கூட்டம். என்னை ஆட்சியில் அமரவைத்தால் மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டிக் காட்டுவேன்.

காங்கிரஸ்காரர்கள் 300 கோடி பணம் கொடுத்ததால்தான், நான் தனியாக தேர்தலில் நிற்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். வருகின்ற சட்டசபை தேர்தலிலும் நான் பணம் வாங்கினேன் என்று வதந்தியை பரப்ப தயாராக 
உள்ளனர்.

திமுகவும், காங்கிரஸும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தபோது எம்.ஜி.ஆர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக் காட்டினார். எனவே மக்கள்தான் வெற்றியைத் தீர்மானிப்பவர்கள். கூட்டணியைப் பொறுத்தவரை நான் மக்களைத்தான் முதலில் மதிப்பேன்.

கருணாநிதிக்கு சகிப்புத் தன்மை போய் விட்டது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதையும் தாங்கும் இதயம் என்று போதித்த அண்ணாவின் வழிவந்தவரா கருணாநிதி [^] என்ற சந்தேகம் வருகிறது. எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள முதலில் கருணாநிதி பழகிக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு தாங்கும் சக்தியை தர வேண்டியதுதான் அரசின் கடமை. ஆனால் இலவசப் பொருட்களைக் கொடுத்து கொடுத்து அவர்களின் சக்தியை குறைத்து சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. 

மத்திய அரசின் திட்டங்களான 108 ஆம்புலன்ஸ் திட்டம், ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் போன்றவற்றை தனது சொந்தத் திட்டம்போல கூறி மக்களை ஏமாற்றுகிறது.

பல பிரச்சினைகளில் கருணாநிதி இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார். பன்றிக் காய்ச்சல் பிரச்சினை பூதாகரமாக இருப்பது குறித்து நான் எச்சரித்தபோது அதை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது பன்றிக்காய்ச்சல் பெரிதாக பரவி வருவதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்களின் ஓட்டு மட்டும் கருணாநிதிக்கு வேண்டும். ஆனால் அவர்களது தொலைக்காட்சி, விநாயகர் சதுர்த்தி தின சிறப்பு நிகழ்ச்சி என்று சொல்ல மனம் இல்லாமல், விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று கூறுகிறது. பெயரைச் சொல்லக் கூட அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இதனால் தமிழக மக்கள் அடைந்த பலன் என்ன என்பதை அவர்கள் சொல்ல முடியுமா.

சினிமாத்துறையை இன்று கருணாநிதியின் பெரிய குடும்பம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இங்கு கூடியிருப்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும், ஜனநாயகமா, குடும்ப ஆட்சியா?. இந்த ஆட்சியை அகற்ற எனக்கு உதவுவீர்களா? (கூட்டத்தினர் ஆம் என்று பலத்த கோஷமிட்டனர்)

எனது முதல் வேலையே திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான். நான் அதைச் செய்வேன் என்றார் விஜயகாந்த்.

நேற்றைய பேச்சில் திமுகவை மட்டும் கடுமையாக சாடிப் பேசிய விஜயகாந்த் அதிமுக குறித்தோ,ஜெயலலிதா [^] குறித்தோ எதுவுமே பேசவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 30 சீட், 40 சீட்டுக்கெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே அவர் விமர்சித்துப் பேசினார்

No comments: