பார்லிமென்டில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய எம்.பி.,க்களை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் இருவர் மீதான வழக்குகளை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. ஊழலை வெளிக்கொணர ஸ்டிங் ஆபரேஷன் நடத்துவதில் தவறில்லை என்றும் கூறியது. இத்தீர்ப்பை பரபரப்பாக வழங்கினார் நீதிபதி திங்கரா. போலீசார் வழக்கு பதிவு செய்த விதத்தையும் கண்டித்தார்.
பார்லிமென்டில் கேள்வி கேட்க, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.,க்கள் லஞ்சம் வாங்கிய விவகாரம் கடந்த 2005ம் ஆண்டு டிசம்பரில் வெளிச்சத்திற்கு வந்தது. "ஆஜ்தக்' செய்தி சேனல், "ஆபரேஷன் துரியோதன்' என்ற பெயரில் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் இந்த விவகாரம் நாட்டு மக்களுக்கு தெரிந்தது. இதையடுத்து, லஞ்சம் வாங்கிய எம்.பி.,க்கள் தொடர்பாக விசாரணை நடத்த பார்லிமென்டின் இரு சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, லஞ்சம் வாங்கிய லோக்சபா எம்.பி.,க்கள் 10 பேரையும், ராஜ்யசபா எம்.பி., ஒருவரையும் பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. அதே நேரத்தில், ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய நிருபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஊழலை ஊக்கப்படுத்தும் வகையில் எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக, பத்திரிகையாளர்கள் அனிருத் பாகல் மற்றும் சுகாசினி ராஜ் என்ற இருவருக்கு எதிராக டில்லி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 12 , 13 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120 பி-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. பத்திரிகையாளர்கள் இருவரும் "கோப்ரா போஸ்ட் டாட் காமை' சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை பரிசீலித்த சிறப்பு கோர்ட் நீதிபதி, அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்நிலையில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ரத்து செய்யக்கோரி, பத்திரிகையாளர்கள் இருவரும் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு விசாரணைக்கு வந்த போது, டில்லி போலீஸ் சார்பில் ஆஜரான வக்கீல், ""பத்திரிகையாளர்கள் பாகல் மற்றும் ராஜுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானதே. எம்.பி.,க்களுக்கு இவர்கள் லஞ்சம் கொடுத்தது ஊழலை ஊக்கப்படுத்தும் செயல்,'' என்றார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பத்திரிகையாளர்களின் வக்கீல், ""எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்திருக்காவிட்டால், இந்த ஸ்டிங் ஆபரேஷனே நிகழ்ந்திருக்காது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததன் மூலம், ஊழல் எம்.பி.,க்களை காப்பாற்ற போலீசார் முற்பட்டுள்ளனர்,'' என்றார். இதையடுத்து பத்திரிகையாளர்களின் மனு மீதான தீர்ப்பை கடந்த செப்டம்பர் 17ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி திங்ரா கூறியதாவது: பார்லிமென்டில் கேள்வி கேட்க எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர்கள் அனிருத் பாகல் மற்றும் சுகாசினி ராஜ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக 2009 ஜூலை 6ம் தேதி சிறப்பு கோர்ட் பிறப்பித்த உத்தரவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது, இந்த நாட்டின் மக்கள் தங்களின் கடமைகளைச் செய்ய விடாமல் தடுப்பது போன்றது. அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறியதாகும். அதே நேரத்தில், எம்.பி.,க்களுக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் வழக்கின் விசாரணை தொடரும்.
நாட்டில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளது. எனவே உயர்மட்டத்தில் நிலவும் ஊழலை வெளிக்கொணர, ஒருவர் லஞ்சம் வாங்கத் தூண்டும் ஏஜன்ட் போல செயல்படுவதில் தவறில்லை. அதை குற்றத்திற்கு உதவி புரிந்ததாக கருத முடியாது. இந்த ஊழல் வழக்கில் டில்லி போலீசார் செயல்பட்ட விதம் சரியில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களின் உத்தரவுக்கு ஏற்றவாறு செயல்பட்டுள்ளனர். ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் பாடுபட வேண்டும். ஊழல் பற்றிய விவரங்கள் தங்களின் கவனத்திற்கு வரும் போது, அதை வெளிப்படுத்த முற்படுவதில் தவறில்லை. அனைத்து மட்டத்திலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். நீதிபதிகளின் நேர்மையை கூட இதுபோன்ற ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அவ்வப்போது பரிசோதிக்கலாம். இவ்வாறு நீதிபதி திங்கரா கூறினார்.
No comments:
Post a Comment