Search This Blog

Thursday, September 30, 2010

அயோத்தி தீர்ப்பு ராமர் சிலை இருக்கும் இடம் இந்துக்களுக்கு சொந்தம் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 ஆக பிரித்து, 2 இந்து அமைப்புகளுக்கும், ஒரு முஸ்லிம் அமைப்புக்கும் சமமாக வழங்க வேண்டும்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பகுதிகளாக பிரித்து, 2 இந்து அமைப்பு களுக்கும் ஒரு முஸ்லிம் அமைப்புக்கும் வழங்க வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

லக்னோ, அக்.1-

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்துள்ள 2.7 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு, கடந்த 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

இடைக்கால தடை

இந்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் விசாரித்து வந்தது. ராம்லல்லா விராஜ்மன் ஸ்தல், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய அமைப்புகளும், கோபால்சிங் விஷாரத் என்பவரும் இந்த வழக்கை தொடுத்தவர்கள் ஆவர். நீதிபதிகள் சுதிர் அகர்வால், எஸ்.யு.கான், டி.வி.சர்மா ஆகியோர் இவ்வழக்கில் கடந்த 24-ந் தேதி தீர்ப்பு அளிக்க இருந்தனர்.

ஆனால், பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணும் வகையில், தீர்ப்பை ஒத்தி வைக்குமாறு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதை ஏற்று, தீர்ப்பு அளிக்க ஒரு வார கால இடைக்கால தடை விதித்து கடந்த 23-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பின்னர், அந்த இடைக்கால தடையை, கடந்த 28-ந் தேதி, தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் நீக்கியது.

பரபரப்பு தீர்ப்பு

இதையடுத்து, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் நேற்று அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மூன்று நீதிபதிகளும் தனித்தனி தீர்ப்புகளை அளித்தனர்.

இருப்பினும், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலை அமைந்துள்ள பகுதிதான், ராமர் பிறந்த இடம் என்பதில் 3 நீதிபதிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுத்தனர். அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று அவர்கள் கூறினர்.

நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று கூறிய சன்னி வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதி எஸ்.யு.கான், வக்பு வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தார்.

3 பங்காக பிரிப்பு

சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம், 3 சம பங்குகளாக பிரிக்கப்பட்டு, ராம்லல்லா விராஜ்மனுக்கும், சன்னி வக்பு வாரியத்துக்கும், நிர்மோகி அகாராவுக்கும் தலா ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் சுதிர் அகர்வாலும், எஸ்.யு.கானும் தீர்ப்பு அளித்தனர்.

நிலத்தை பங்கிடும் போது, சிறு சிறு `அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ள வேண்டும் என்றும், நிலம் குறைவாக கிடைத்தவருக்கு, சர்ச்சைக்குரிய நிலத்தை ஒட்டி மத்திய அரசு கையகப்படுத்தி உள்ள நிலத்தில், நிலம் ஒதுக்கி சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். யார் யாருக்கு எந்த நிலத்தை அளிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் விளக்கினர்.

நிலத்தை பிரிக்கும் பணி, 3 மாதங்களுக்கு பிறகு தொடங்க வேண்டும் என்றும், அதுவரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். ராமர், சீதை சிலைகளை தற்போது உள்ள இடத்தில் இருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் கூறினர்.

நீதிபதி சுதிர் அகர்வால்

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய கட்டிடம், பாபரல் 1528-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதை முஸ்லிம் தரப்பினர் நிரூபிக்க தவறி விட்டனர். அக்கட்டிடத்தின் மையத்தில் உள்ள வட்டவடிவ கூரையின் அடியில் ராமர் சிலை உள்ள இடம், ராமர் பிறந்த இடமாக இந்துக்களால் நம்பப்படுகிறது. அந்த இடத்தில், பிரதிவாதிகள் எந்தவிதத்திலும் தலையிடக்கூடாது, ஊறு விளைவிக்கக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.

உள் முற்றத்தில் உள்ள பகுதி, இந்துக்களும், முஸ்லிம்களும் நீண்ட நெடுங்காலமாக பயன்படுத்தி வந்ததால், அது இருதரப்பினருக்குமே சொந்தமானது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரித்து, இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், நிர்மோகி அகாரா அமைப்புக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.

யாருக்கு எந்த இடம்?

இந்துக்களுக்கு அளிக்கப்படும் பங்கில், தற்போது ராமர் சிலை அமைந்துள்ள இடம் இருக்க வேண்டும். வெளி முற்றத்தில் உள்ள ராம் சாபுத்ரா, சீதா ரசோய், பாந்தர் ஆகிய பகுதிகள், நிர்மோகி அகாரா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும். வெளி முற்றத்தில் உள்ள திறந்தவெளிப் பகுதியை இந்துக்கள் பல ஆண்டுகளாக தங்கள் வழிபாட்டுக்கு பயன்படுத்தி வந்ததால், அப்பகுதியை நிர்மோகி அகாரா அமைப்புக்கும், இந்துக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.

அதே சமயத்தில், முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் நிலம், மொத்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு குறைவாக இருக்கக்கூடாது. தேவைப்பட்டால், வெளி முற்றத்தில் இருந்து சிறிது நிலத்தை அளிக்கலாம்.

இவ்வாறு நீதிபதி சுதிர் அகர்வால் கூறியுள்ளார்.

நீதிபதி எஸ்.யு.கான்

நீதிபதி எஸ்.யு.கான் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய கட்டிடம், பாபராலோ அல்லது அவரது உத்தரவின்பேரிலோ மசூதியாக கட்டப்பட்டது. ஆனால், பாபருக்கோ அல்லது அதை கட்டியவருக்கோ அந்த மசூதி சொந்தமானது என்று நேரடி ஆதாரம் மூலம் நிரூபிக்கப்படவில்லை. அந்த மசூதியைக் கட்ட எந்த இந்து கோவிலும் இடிக்கப்படவில்லை. நீண்ட காலமாக இடிந்து கிடந்த கோவில் இடிபாடுகளின் மீதுதான் அந்த மசூதி கட்டப்பட்டது.

இந்துக்கள், முஸ்லிம்கள், நிர்மோகி அகாரா அமைப்பு ஆகிய மூன்று தரப்பினரும், சர்ச்சைக்குரிய நிலத்தின் கூட்டு உரிமையாளர்கள் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அந்த நிலம் மூன்று பங்காக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தற்காலிக உத்தரவாக பிறப்பிக்கப்படுகிறது. இருப்பினும், தற்போது ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம், இறுதி உத்தரவில், இந்துக்களுக்கு அளிக்கப்படும்.

வரைபடத்தில், ராம் சாபுத்ரா, சீதா ரசோய் என்ற வார்த்தைகளில் குறிக்கப்பட்டுள்ள இடங்கள், நிர்மோகி அகாரா அமைப்புக்கு அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி எஸ்.யு.கான் கூறியுள்ளார்.

டி.வி.சர்மா

நீதிபதி டி.வி.சர்மா தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

சர்ச்சைக்குரிய இடம், ராமர் பிறந்த இடம் தான். ராமர், ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்படுகிறார். அங்கு பாபரால் கட்டிடம் எழுப்பப்பட்டது. எந்த வருடம் என்பது நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக இருந்தது. மசூதிக்கு உரிய அம்சங்களே அதில் இல்லை. அதனால் அதை மசூதியாக கருத முடியாது.

ஏற்கனவே அங்கிருந்த பழமையான கட்டிடத்தை இடித்து விட்டுத்தான் அந்த கட்டிடம் கட்டப்பட்டது. அந்த இடத்தில், பிரமாண்டமான இந்து கோவில் இருந்ததாக, தொல்பொருள் ஆய்வுத்துறை நிரூபித்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில், 1949-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி நள்ளிரவில் சிலைகள் வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளில் இருந்தே, அதை புனித ஸ்தலமாக கருதி, ஆன்மிக பயணம் சென்று வருகிறார்கள்.

வெளி முற்றப்பகுதி, இந்துக்களுக்கே முற்றிலும் சொந்தமானது என்றும், அவர்கள் அங்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் உள்ள உள்முற்றப்பகுதியிலும் அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

இவ்வாறு நீதிபதி டி.வி.சர்மா கூறியுள்ளார்.

--நன்றி தினதந்தி

No comments: