Search This Blog

Wednesday, September 15, 2010

சென்னையில் 6 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும்: கார்த்தி சிதம்பரம்

வரும் சட்டசபை தேர்தலில் சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆறு எம்.எல்.ஏ.,க்களை உருவாக்க வேண்டும்,'' என, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது. கவுன்சிலர் ருக்மாங்கதன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பேசும்போது, ""தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கு கல்வி கண்ணை திறந்தவர் காமராஜர். பாமர மக்களும் உயர்கல்வி பயிலுவதற்கு கல்விக் கடன் வழங்கியவர் சிதம்பரம். அவர் கறுப்பு காமராஜர்; இவர் சிவப்பு காமராஜர். பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா தத்தளித்த போது, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் சிதம்பரம் பார்த்துக் கொண்டார்,'' என்றார்.

அழகிரி எம்.பி., பேசியதாவது: இந்தியாவில் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கல்விக் கடன் திட்டத்தை சிதம்பரம் கொண்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு இணையாக கல்வித் துறை, தொழில் துறையில் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு கல்விக் கடன் முக்கிய காரணமாக விளங்குகிறது,'' என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: தமிழகத்தில் 43 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மன வருத்தம் உள்ளது. இந்த வருத்தம் போக அதிக பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளையும், கட்சி கொள்கைகளையும் தெளிவாக பொதுமக்களிடம் சொல்ல வேண்டும். மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்படும் நிதியை வைத்து தான் மாநில அரசு பல்வேறு திட்டங்களை நேரடியாக நிறைவேறுகிறது. இவற்றை பொதுமக்களிடம் கூட்டம் போட்டு தெரிவிக்க வேண்டும். பிரசாரம் செய்ய காங்கிரசார் கூச்சப்படக் கூடாது. பெட்ரோல் விலை ஏறினால் மத்திய அரசு தான் காரணம் என பொதுமக்கள் கருதுகின்றனர். மாநில அரசு தான் விற்பனை வரி வசூலிக்கிறது.

டில்லியில் பெட்ரோல் விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில அரசுகளும் அப்படி செய்ய வேண்டும். மத்திய அரசை விமர்சித்தால் காங்கிரசார் அதற்கு பதில் கொடுக்க வேண்டும். காங்கிரசை அழிப்பேன் என வைகோ சொல்கிறார். எத்தனை வைகோ வந்தாலும் காங்கிரசை அழிக்க முடியாது. இளைஞர் காங்கிரசில் 13 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் பெயரும், விலாசம், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரமும் வெப்சைட்டில் உள்ளது. சில கட்சிகளில் பாசறை, சிறை, அறை என்கின்றனர். அதை திறந்து பார்த்தால் ஒன்றுமில்லை. காங்கிரஸ் மீது மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம், எதிர்பார்ப்பு உள்ளது. மக்களுக்கு உகந்த கட்சியாக இருக்க வேண்டும். மக்களோடு மக்களாக இணைந்து நேரடியாக சந்திக்க வேண்டும். அப்போது தான் வெற்றி பெறமுடியும். காங்கிரசை ஒதுக்கிவிட்டு எந்த கட்சியும் அரசியல் நடத்த முடியாது. சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி., - எம்.எல்.ஏ., இல்லை. வரும் சட்டசபை தேர்தலில் ஒரு லோக்சபா தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏ., வீதம், ஆறு எம்.எல்.ஏ.,க்களை உருவாக்க வேண்டும். அதற்கு காங்கிரசார் பணியாற்ற வேண்டும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.

65 பேர் உடல் தானம்: மத்திய அமைச்சரின் 65வது பிறந்தநாளையொட்டி, இன்று காலை அவரது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை தலைமையில் சுப்பிரமணியம், கிருபா உள்ளிட்ட 65 பேர், உடல்தானம் செய்கின்றனர்; 100 பேர் ரத்ததானம் செய்கின்றனர்.

No comments: