Search This Blog

Sunday, September 5, 2010

30,40 சீட்டுக்காகவெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன்-விஜயகாந்த்

கூட்டணி குறித்து வரும் செய்திகளை நம்பி மக்கள் குழம்ப வேண்டாம். மக்கள், தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைத்தான் அமைப்பேன். 30, 40 சீட்டுக்காகவெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சிவகாசியில் இன்று முப்பெரும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகையில்,

தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான கூட்டணியை அமைப்பேன். 30, 40 சீட்டுகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டேன். எனவே தே.மு.தி.க. தொண்டர்களும், மக்களும் குழப்பம் அடைய வேண்டாம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.48 ஆயிரம் கோடிக்கு மக்கள் குடித்தே அழித்து இருக்கிறார்கள். இன்றைய நிலையில் நான் சிலருக்கு உதவிகளை செய்தால் கூட அதனை செய்யவிடாமல் தடுக்கிறார்கள்.

தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் இந்த வேளையில் முதல்வர் கருணாநிதி தமிழக விவசாயிகளுக்கு புதிய பம்பு செட் மோட்டார் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் என்ன பயன்? என்றார் விஜயகாந்த்.

மாறி மாறிப் பேசும் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலில் கூட்டணியே கிடையாது என்று பேசி வந்தார். இதைச் சொல்லித்தான் ஒரு சட்டசபை பொதுத் தேர்தல், ஒரு லோக்சபா தேர்தல், பல இடைத் தேர்தல்களை சந்தித்தார்.

ஆனால் கூட்டணி வைத்தாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்ட பின்னர் சமீபத்தில் கூட்டணி சேரத் தயார் என்றார்.

பின்னர் லேசாக பல்டி அடித்து தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்பேன் என்றார்.

தற்போது 35-40 சீட்டுக்கெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர் தான் கூட்டணி சேர விரும்பும் கட்சிக்கு மறைமுகமாக இத்தனை சீட் போதாது, இதற்கு மேல் வேண்டும் என்று சூசகமாக உணர்த்தியிருப்பதாக தெரிகிறது.

அதிமுக கூட்டணிக்குள் தேமுதிகவை இழுக்க நீண்ட நாட்களாக முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக இரு தரப்பு இரண்டாம் கட்டத் தலைவர்களும் பல சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகவும் பேச்சுக்கள் உள்ளன. இந்தப் பேச்சுக்களின் இறுதியில் விஜயகாந்த் கட்சிக்கு 40 சீட் வரை தர அதிமுக தயாராக உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில்தான் 30, 40 சீட்டுக்காகவெல்லாம் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதன் மூலம் தான் 40 சீட்களுக்கு மேல் எதிர்பார்ப்பதையும், அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதையும் மறைமுகமாக விஜயகாந்த்தே ஒப்புக் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

No comments: