Search This Blog

Wednesday, September 15, 2010

காஷ்மீருக்கு அனைத்து கட்சி தலைவர்கள் பயணம்

காஷ்மீர் நிலவரத்தை நேரில் கண்டறிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவை அங்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அமைதியின்மை நிலவுகிறது. பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதனால், ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும், "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி, பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கடந்த திங்களன்று விவாதித்தது. ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்தப் பிரச்னை பற்றி விவாதிப்பது என, முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

ஐந்தரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், முதல்வர் ஒமர் பங்கேற்கவில்லை. அவர் தந்தையும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லா பங்கேற்றார்.   ஒவ்வொருவரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய மக்கள் ஜனநாயக கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் கோரின. ஆனால், பாரதிய ஜனதாவும், மற்ற சில கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

கூட்டத்தில் பேசிய மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, ""ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்,'' என்றார்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பேசுகையில், ""ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை குறிப்பிட்ட பகுதிகளிலாவது வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்,'' என்றார். இதை இடதுசாரி கட்சிகளும், லோக்ஜனசக்தி கட்சியும் ஆதரித்தன.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""அமைதி வழியை கடைபிடிக்கும் யாருடனும் அல்லது எந்தப் பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், வன்முறை ஓயும் வரை பேச்சுவார்த்தை துவங்காது,'' என்றார். 

காஷ்மீர் இளைஞர்கள் கவலையை தீர்க்க திட்டம் தேவை என்று  காங்., தலைவர் சோனியாவும், "எந்தத் தீர்வானாலும் அரசியல் சட்ட அமைப்பிற்குள்  அமைய வேண்டும் ' என உள்துறை அமைச்சர் சிதம்பரமும் வலியுறுத்தினர்.  காஷ்மீரில் நடக்கும் சம்பவங்கள் கவலை தருகிறது என்றார் ராணுவ அமைச்சர் அந்தோணி.

பா.ஜ., சார்பில்  அத்வானி, சுஷ்மா, ஜெட்லி மற்றும் கட்சித் தலைவர் கட்காரி ஆகியோர் பங்கேற்றனர். வன்முறை இருக்கக்கூடாது என்று கட்காரி கூறினாரே தவிர, வேறு பரபரப்பு பேச்சை நிகழ்த்தவில்லை. ஆனால், சிவசேனா தரப்பில் ஆவேசக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

கூட்டத்திற்குப் பின், அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:இன்றைய (நேற்று) கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கான பயனுள்ள பல யோசனைகளை தெரிவித்தனர். நியாயமான எந்த அரசியல் கோரிக்கையையும் பேச்சுவார்த்தை மூலமாக, அமைதியான ஆலோசனைகள் மூலமாக, பரஸ்பரம் விவாதிப்பதன் மூலமாக  நிறைவேற்ற இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. அதை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அதனால், ஜம்மு  காஷ்மீர் மாநில நிலவரத்தை நேரில் கண்டறிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய தூதுக்குழுவை, அம்மாநிலத்திற்கு அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குழு செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். காஷ்மீர் செல்லும் இந்த தூதுக்குழுவினர் அனைத்து தரப்பு மக்களையும் சந்திப்பர். அவர்களின் கருத்தை கேட்டறிவர். அனைத்துக் கட்சி குழுவினரின் பயணத்திற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகமும், ஜம்மு  காஷ்மீர் மாநில அரசும் மேற்கொள்ளும். அனைத்துக் கட்சி குழுவினர் தரும் அறிக்கையின் அடிப்படையில், காஷ்மீர் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு அரசு முடிவெடுக்கும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யும் விவகாரத்தில், நேற்று நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்துதான் தூதுக்குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேறு ஏதோ காரணம் உள்ளது தி.மு.க., -  அ.தி.மு.க., வலியுறுத்தல்

""ராணுவத்தினரின் உணர்வுகளை எந்த வகையிலும் சிதைத்துவிடக் கூடாது. அமைதியை நிலைநாட்ட அவர்களே காரணம். காஷ்மீரில் பெண்களும், சிறுவர்களும்கூட கல்லெறிந்து எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.  அங்கு வேறு ஏதோ காரணம் உள்ளது. அதை கண்டுபிடித்து தீர்வு காண வேண்டும்,'' என  அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளன.காஷ்மீர் பிரச்னை குறித்து நேற்று டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் பங்கேற்றன. தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவர் டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவர் தம்பிதுரையும் பங்கேற்றனர்.

 டி.ஆர்.பாலு பேசியதாவது: காஷ்மீரில் நடக்கும் கலவரங்களைப் பார்க்கும்போது அது சாதாரண காரணங்களுக்காக இருக்கும் என்று தெரியவில்லை. அங்கு பெண்களும் கல்லெறிகின்றனர். சிறுவர்களும் கூட கல்லெறிகின்றனர். இதை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே அரசாங்கம் பார்க்கிறது. அப்படி பார்ப்பதை ஏற்க முடியாது. இவர்கள் எல்லாம் எதிர்ப்பை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்பதே முக்கிய கேள்வி. மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள அரசாங்கம் முதலில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தம்பிதுரை:  ஆயுதப்படை வீரர்கள் நிறைய தியாகங்கள் செய்துள்ளனர். அவர்கள்தான் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட காரணமாக இருப்பவர்கள். அவர்களின் உணர்வுகளை எக்காரணம் கொண்டும் சிதைத்துவிடக் கூடாது. அதே சமயம், மக்களின் போராட்டத்தை அலட்சியம் செய்துவிடவும் முடியாது. காஷ்மீர் மாநில மக்களின், குறிப்பாக இளைஞர்களின்  தேவைகள் மற்றும் அவர்களது மனவோட்டத்தை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் பிரச்னையை தீர்வுக்கு அழைத்துச் செல்லும்.

இந்த கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கலந்து கொண்ட மெகபூபா முப்தியின் பேச்சுதான் சற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அவர் தனது பேச்சின்போது," இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் எல்லாருமே காஷ்மீர் என்ற மாநிலத்தை நிலமாகவே பார்க்கின்றனர். உங்களுக்கு எல்லாம் நிலம் மட்டும்தான் தேவைப்படுகிறது. அங்குள்ள மக்களாகிய நாங்கள் தேவையில்லைபோல. இந்த மனநிலை மாற வேண்டும். காஷ்மீர் பிரச்னையை நிலப்பிரச்னையாக பார்ப்பதை விட்டுவிட்டு அங்குள்ள மக்களின் பிரச்னைகள் என்ன என்பதை பார்க்க ஆரம்பித்தால்தான் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது,' என்றார்.

 பா.ஜ.,வின் சரர்பில் அத்வானி கலந்து கொண்டாலும், ஐந்தரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அவர் எதுவும் பேசவில்லை. அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி மட்டும், இந்தியில் தயார் செய்யப்பட்டிருந்த உரையை கூட்டத்தில் வாசித்தார்.

காஷ்மீர் ஆர்ப்பாட்டங்களில் பெண்கள்: பிரதமர் அதிர்ச்சி : காஷ்மீரின் மோசமான நிலவரம் குறித்து, டில்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:காஷ்மீரில் இழந்த அமைதி மற்றும் முன்னேற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே திரும்பப் பெற முடியும். வன்முறையைக் கைவிடும் பட்சத்தில் யாருடனும் அல்லது எந்தக் குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.அரசுக்கு எதிரான மனக்குறைகள் கொண்டிருப்பவர்கள், அதுகுறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையை, வன்முறையையும் எதிர்ப்பையும் கைவிட்ட சூழலில்தான் நடத்த முடியும்.மத்திய அரசும், மாநில அரசும், இந்தக் கோரிக்கையை காஷ்மீர் மக்களின் முன் குறிப்பாக இளைஞர்களிடம் ஏற்கனவே வைத்துள்ளன. இப்போது நானும் அதையே மீண்டும் வலியுறுத்துகிறேன். பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தொடங்கிய நேரத்தில் சிலர் பின்வாங்கினர். அது மிகவும் வருத்தத்துக்குரியது. ஆர்ப்பாட்டங்களில் ஆண்கள், பெண்கள் ஏன் குழந்தைகள் கூட கலந்து கொள்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சில ஆர்ப்பாட்டங்கள் திடீரென தாமாகவே நடக்கின்றன. ஆனால், சில ஆர்ப்பாட்டங்களை சில கூட்டங்கள் தூண்டி விடுகின்றன.மாநிலத்தில் அமைதி திரும்பவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

No comments: