சோனியா வருகை குறித்து, கோவையில் நேற்று நடந்த மூன்று மாவட்ட காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டத்தில் வாசன் அணியினர் கலந்து கொள்ளவில்லை.கோவை மாநகர், புறநகர் மற்றும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கலந்தாய்வு கூட்டம் கோவை ஒண்டிப்புதூரில்நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி., பிரபு, கோவை மேயர் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.,லட்சுமணன் முன்னிலை வகித்தனர். வரும் 9ம் தேதி திருச்சியில் சோனியா பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி குறித்து கலந்தாய்வு நடந்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசியதாவது:கட்சியின் 125வது ஆண்டு விழா, ராஜிவ் பிறந்த நாள் விழா மற்றும் கட்சி தலைவராக நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியாவுக்கு பாராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் கட்சியினர் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும். இங்கு பேசிய கட்சி நிர்வாகிகள் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளியிட்டனர். இவற்றை முழுமையாக ஆய்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் கடந்த 43 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இருப்பினும், இங்கு கட்சி இன்னும் உயிரோடு இருக்கிறது. இங்குள்ள தொண்டர்களுக்கு சிலை வைக்கலாம். காங்கிரஸ் கட்சியில்லாமல் இந்த நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம், சமூக மாற்றம், மதசார்பின்மை ஆகியன தழைக்க இயலாது. கூட்டணி குறித்து சோனியா தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, தங்கபாலு பேசினார்.
முன்னாள் எம்.பி., பிரபு பேசுகையில், ""தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் நடத்திய கூட்டங்களுக்கு திருச்சியில் நடக்கும் கூட்டம் போட்டி கூட்டமல்ல. ஆனால், அதற்குப் பின்னராவது காங்கிரசுக்கு மரியாதை தருகிறார்களா என பார்க்க வேண்டும்,''என்றார்.மாநகர் மாவட்ட தலைவர் சின்னையன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட தலைவர் மனோகரன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் பெருமளவு பிரபு அணியினர் மட்டுமே கலந்து கொண்டனர்; வாசன் ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.
No comments:
Post a Comment