Search This Blog

Tuesday, February 1, 2011

திமுக முன்பு இழுத்தடித்ததால் இப்போது பழிவாங்குகிறதா பாமக

கூட்டணியில் சேர விரும்பி முன்பு பலமுறை தூது விட்டபோது நிபந்தனைகள் போட்டதால் ஏற்பட்ட விரக்தியை, இப்போது திமுகவை, பாமக பழி வாங்க ஆரம்பித்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

டெல்லியில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் திமுக கூட்டணியில் பாமகவும் இருப்பதாக கூறினார் முதல்வர் கருணாநிதி. சென்னையில் சொல்வதை விட டெல்லியில் நின்று அவர் சொன்னதன் மூலம் பாமகவுக்கும் ஒரு கெளரவமாக இது கருதப்பட்டது.

ஆனால் முகத்தில் அடித்தாற் போல, நாங்கள் இதுவரை கூட்டணி குறித்து முடிவு செய்யவே இல்லை என்று கூறி விட்டார் ராமதாஸ். இது திமுக வட்டாரத்தை மட்டுமல்லாமல் பாமக வட்டாரத்திலும் கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணிக்காகத்தானே இத்தனை காலம் பாடுபட்டோம், கடுமையாக முயன்றோம், எம்.எல்.ஏக்களை தூது அனுப்பினோம். பிறகு ஏன் ராமதாஸ் இப்படிக் கூறினார் என்ற கேள்வி பாமக மத்தியில் நிலவுகிறது.

ஆனால் டாக்டர் ராமதாஸ் பழி வாங்கும் படலத்தில் இறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் பாமக இருந்தபோது திமுகவையும், திமுக ஆட்சியையும் கடுமையாக சாடினார் ராமதாஸ். வரலாறு காணாத இந்த சாடலை மிக மிகப் பொறுமையுடன் எதிர்கொண்டார் கருணாநிதி. ஆனால் திமுகவினரோ கொதிப்படைந்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் திமுக கூட்டணியிலிருந்து பாமக நீக்கப்படுவதாக திமுக உயர் மட்ட செயல் திட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் ராமதாஸ். படு தோல்வியையும் சந்தித்தார். கட்சியின் அடிப்படையே கடும் ஆட்டம் கண்டது. இதனால் ஆடிப் போன ராமதாஸ், பென்னாகரம் சட்டசபை இடைத் தேர்தலில் மிகக் கடுமையாக பாடுபட்டு 2வது இடத்தைப் பிடித்து பாமகவின் உயிர் நாடியை பிடித்து நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேரும் வேலைகளை அவர் தொடங்கினர். படு ரகசியமாக இதை செய்து வந்தார். தனது கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் எம்.எல்.ஏக்கள் குழுவை, குறிப்பாக திமுகவையும், கருணாநிதியையும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தையும் கடுமையாக சாடி வந்த சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்களையே கருணாநிதியை சந்திக்க அனுப்பி வைத்தார்.

மேலும் அவரே, முதல்வருக்கு ஒரு விரிவான கடிதத்தை எழுதி, அதில், திமுக கூட்டணியில் சேர பாமக விரும்புவதாகவும் கூறியிருந்தார். இந்தக் கடிதத்தை பின்னர் கருணாநிதி அதிரடியாக பகிரங்கப்படுத்தி ராமதாஸை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.

திமுக கூட்டணியில் மீண்டும் பாமகவை சேர்க்கத் தயார். ஆனால் ராஜ்யசபா சீட் உடனடியாக தர முடியாது. 2011ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று செக் வைத்தார்.

இந்த நிபந்தனை குறித்து பரிசீலித்த பாமக, எந்த முடிவுக்கும் வர முடியாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

இந்தப் பின்னணியில்தான் டெல்லியில், பாமக மீண்டும் கூட்டணியில் இருப்பதாக அறிவித்தார் கருணாநிதி.

ஆனால் தற்போது பல்டி அடித்துள்ளார் ராமதாஸ். முதல்வர் பெருந்தன்மையுடன் அறிவித்ததை வைத்து பாலிட்டிக்ஸில் குதித்துள்ளார் அவர்.

அதேசமயம், பாமக கூட்டணியில் சேருகிறது என்று முதல்வர் கருணாநிதி தன்னிச்சையாக அறிவித்தது காங்கிரஸை பலவீனப்படுத்தத்தான் என்று காங்கிரஸ் தரப்பில் கருதுகிறார்களாம். பாமக கூட்டணியில் இருப்பதாக அறிவித்தால், பாமகவுக்கு நிறையத் தொகுதிகளைத் தர வேண்டியிருப்பதால், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளைத் தர முடியாத நிலையில் இருப்பதாக கூறி தப்பலாம் என்று கருணாநிதி நினைத்தார். அதனால்தான் அவராகவே பாமக கூட்டணியில் இருப்பதாக அறிவித்தார் என்று காங்கிரஸ் தரப்பில் கருதுகிறார்கள்.

தற்போது இதையே தனக்கு சாதகமாக ராமதாஸ் எடுத்துக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதை காங்கிரஸ் தரப்பே, பாமக தரப்பிடம் ரகசியமாக கூறி ராமதாஸை தூண்டி விட்டு, கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என்று கூற வைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அதேசமயம், 50 சீட்கள் வரை கேட்போம் என்று ஏற்கனவே ராமதாஸ் கூறியிருந்தார். ஆனால் 35 சீட்களுக்கு மேல் தர திமுக தரப்பு தயாராக இல்லை. அதேவேளை, அதிமுக பக்கமிருந்து பாமக கேட்கும் தொகுதிகளைத் தரத் தயாராக இருப்பதாக தூது மேல் தூது வந்த வண்ணம் உள்ளதாம்.

இதனால் எந்த பேரம் சாதகமாக இருக்கிறதோ, அந்தப் பக்கம் சாய முடிவெடுத்து விட்டார் ராமதாஸ். கடந்த தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாமக என்பது நினைவிருக்கலாம்.

பாமகவின் வரலாறு:

1980ம் ஆண்டு வன்னியர் சங்கத்தைத் தொடங்கிய டாக்டர் ராமதாஸ் அதை 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றி அரசியல் களத்தில் முறைப்படி புகுந்தார்.

அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக பாமக போட்டியிட்டது. 15.36 லட்சம் வாக்குகளைப் பெற்ற பாமகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. ஆனால் தனக்கென அது வாக்கு வங்கியை உருவாக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

1991ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. வென்றவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இப்போது இவர் தேமுதிகவின் அவைத் தலைவர்.

அதே ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் பாமகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்குப் புதிய அத்தியாயம் மலர்ந்தது. 4 தொகுதிகளில் அக்கட்சிக்கு வெற்றி கிடைத்து, தான் ஒரு அரசியல் சக்தி என்பதைக் காட்டியது.

இருப்பினும் அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.

1998 முதல் மாறி மாறி கூட்டணி:

1998ம் ஆண்டு முதல் முறையாக கூட்டணி சேர்ந்தது பாமக. அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டிலிருந்து அது மாறி மாறி திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து வருகிறது.

1999ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 18 இடங்களைப் பெற்றது.

2004ல் மீண்டும் திமுக அணிக்குத் தாவி, லோக்சபா தேர்தலில் 6 இடங்களில் வெற்றி பெற்றது.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அணி மாறாமல் திமுக கூட்டணியிலேயே நீடித்து 18 இடங்களை வென்றது.

2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது அணி மாறி அதிமுகவுடன் கூட்டணி வைத்து முட்டை வாங்கியது.

இப்போது சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திமுகவுடன் இணைந்தால், 6வது முறையாக அது அணி மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: