Search This Blog

Monday, February 7, 2011

பூஜ்யத்தின் மதிப்பை பாஜகவுக்கு உணர்த்த போகும் தமிழக தேர்தல்-ப.சிதம்பரம்

தமிழகம் -புதுவையில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக அக் கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். அவர்கள் தனித்து போட்டியிட வாழ்த்துகிறேன். அப்படி செய்தால்தான் பூஜ்யம் என்ற எண்ணின் மதிப்பு அவர்களுக்கு தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

புதுச்சேரி மாநில முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிலிருந்து விலகி தனிக் கட்சி தொடங்கியுள்ளார்.

இந் நிலையில் அம் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வில்லியனூர் தென்கோபுர வீதியில் நடந்தது. முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம்,

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் துணையோடு காங்கிரஸ் புதுவையில் ஆட்சிக்கு வந்தது. இன்னும் 20 நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் காங்கிரஸ் என்ன சொல்லப் போகிறது என்பதை கூட்டணி கட்சியினர் பொதுமக்கள், ஏன் எதிர்கட்சிகள் கூட எதிர்பார்க்கிறார்கள்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் மாநில அரசின் சாதனை பற்றி விளக்கினார்கள். நான் யார்? உங்களுக்கும், எனக்கும் என்ன உறவு?. வைத்திலிங்கம் முதல்வர் என்றால் நாராயணசாமி மத்திய அமைச்சர் என்றால் அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான். எங்களுக்கு அடையாளம் தந்தது காங்கிரஸ் கட்சிதான்.

இந்த இடத்தைவிட்டால் நாங்கள் சாதாரண மனிதர்கள்தான். இந்த சாதாரண பெயருக்கு முகவரி காங்கிரஸ் கட்சிதான். இந்த இயக்கத்தில் இருந்து சில நண்பர்கள் விலகியுள்ளார்கள். அவர்கள் தங்கள் அடையாளத்தில் இருந்து விலகி உள்ளனர்.
அவர்களுக்கு முகவரி தந்த இயக்கத்தில் இருந்து விலகி உள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் முதல்வரானதற்கு காரணம் உங்களின் அபரிவிதமான சக்தி காரணமில்லை. காங்கிரஸ் கட்சிதான் காரணம். காங்கிரஸ் கட்சியை விட்டு போகிறவர்கள் முக்கியமல்ல. காங்கிரசுக்கு வருபவர்கள்தான் முக்கியம். ஒரு பெருமாள் சென்றால் பெத்தபெருமாள் வந்துள்ளார். சந்தை பொருளாதாரத்தில் ஒரு கடையை மூடினால் 2 கடைகளை திறக்க முடியும். ஒருவர் இடத்தை காலி செய்தால் 2 இளைஞர்கள் வருவார்கள். 125 வயதான காங்கிரசுக்கு என்றும் வசந்த காலம்தான்.

பாஜகவைச் சுஷ்மா சுவராஜ் புதுவைக்கு வந்து குறை கூறிவிட்டுச் சென்றுள்ளார். பாஜக ஆட்சிகாலத்தில் பெயர் செல்லும்படியாக ஒரு திட்டமாவது றைவேற்றப்பட்டதா? அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊரக வேலை உறுதி திட்டம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி மாணவர்களுக்கு கல்வி கடன் என எண்ணற்ற பல திட்டங்களை அளித்துள்ளோம்.

இதோடு மத்திய அரசு கட்டாய கல்வி சட்டம் கொண்டு வந்துள்ளது. இப்போது உணவுக்கு உரிமை சட்டம் தயாராகி வருகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 20 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ.3 விலையில் வழங்குவோம் என்று கூறியிருந்தோம். இப்போது சோனியாகாந்தி 35 கிலோ அரிசி அல்லது கோதுமை ரூ.2 விலையில் தர விரும்புகிறார். வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அதை தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கான வரைவு சட்டம் தயாராகிறது. விரைவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சுஷ்மா சுவராஜ் தமிழகம் -புதுவையில் தனித்து போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். அவர்கள் தனித்து போட்டியிட வாழ்த்துகிறேன். அப்படி செய்தால்தான் பூஜ்யம் என்ற எண்ணின் மதிப்பு அவர்களுக்கு தெரியும்.

புதுவை வந்த அவர் மத்திய அமைச்சர் நாராயணசாமியை அர்ச்சனை செய்துள்ளார். வழக்கமாக அர்சனை செய்பவர் பூஜாரி, அர்ச்சிக்கப்படுபவர் கடவுள்.

இந்திய மக்கள் புத்திசாலிகள். அதனால்தான் பாஜகவை புறக்கணித்துள்ளார்கள் என்றார் சிதம்பரம்.

No comments: