Search This Blog

Thursday, February 3, 2011

கிராமப்புற மாணவர்கள் நிலை மோசம்: ஆய்வில் தகவல்

தமிழக கிராமப்புற பள்ளிகளில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், 47.5 சதவீதம் பேருக்கு முதலாம் வகுப்பு பாடத்தைக் கூட படிக்க தெரியவில்லை. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 79.5 சதவீதம் பேருக்கு கழித்தல் கணக்கு செய்ய தெரியவில்லை' என, தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிந்துள்ளது.

நாடு முழுவதும் குழந்தைகளின் அடிப்படை கற்றல் திறன் குறித்த ஆய்வினை(அசர் - 2010), பிரதம் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், "எய்டு இந்தியா' என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகள் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டன.

ஆய்வு முடிவுகளின் முக்கிய விவரங்கள்:நாடு முழுவதும் 522 மாவட்டங்களில், 14 ஆயிரத்து 830 கிராமங்களில் ஆறு லட்சத்து 9,659 குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் 29 மாவட்டங்களில், 830 கிராமங்களில் 26 ஆயிரத்து 19 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்கின்றனர். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 47.5 சதவீதம் பேருக்கு, முதலாம் வகுப்பு பாடத்தைக் கூட வாசிக்கத் தெரியவில்லை. மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 79.5 சதவீதம் பேருக்கு, கழித்தல் கணக்கு செய்யத் தெரியவில்லை.முதல் வகுப்பில், 47.6 சதவீதம் பேருக்கு மட்டுமே, தமிழ் எழுத்துக்களை வாசிக்கத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பில் 27.3 சதவீதம் பேருக்கு மட்டுமே, பத்தியை வாசிக்கத் தெரிகிறது. ஐந்தாம் வகுப்பில் 30.6 சதவீதம் பேருக்கு மட்டுமே, சிறிய கதையை வாசிக்கத் தெரிகிறது.

முதல் வகுப்பில் 54.4 சதவீதம் பேருக்கு மட்டுமே, 1 - 9 வரையிலான எண்களை அடையாளம் காட்டத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பில் 20.5 சதவீதம் பேருக்கு மட்டுமே, கழித்தல் கணிதம் தெரிகிறது. ஐந்தாம் வகுப்பில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே, வகுத்தல் கணிதம் தெரிகிறது.தமிழகத்தில் வாசிப்பு நிலையும், கணித அறிவும் தேசிய சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது. வாசிப்பு நிலையில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நீலகிரியில் 81.9 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 32.7 சதவீதம் பேருக்கும் பத்தியை வாசிக்கத் தெரிகிறது.

கணித அறிவில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக நீலகிரியில் 80.8 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக விழுப்புரத்தில் 25.8 சதவீதம் பேருக்கும் கழித்தல் கணக்கு தெரிகிறது.வருகைப் பதிவை பொறுத்தவரை, ஒன்று முதல் எட்டாம் வகுப்பில் ஆசிரியர் வருகை 79.9 சதவீதமாகவும், மாணவர் வருகை 90.7 சதவீதமாகவும் உள்ளது. தமிழக கிராமப்புற பள்ளிகளில் 80.5 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே குடிநீர் வசதி உள்ளது. 50.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே கழிவறை பயன்படுத்தும் நிலையில் உள்ளது; 20.8 சதவீத பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிவறை வசதி இல்லை.இவ்வாறு ஆய்வில் தெரிந்துள்ளது.

கல்வியாளர் ராஜகோபாலன் பேசியதாவது:தமிழகத்தைத் தவிர நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும், "அசர்' அறிக்கையை பற்றி கல்வித்துறையில் ஆய்வு செய்து எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கிறது. எஸ்.எஸ்.ஏ., அறிக்கையின்படி, தமிழகத்தில் 2006 - 07ம் ஆண்டில், அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 80 ஆயிரம் ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 1,000 ஆசிரியர்கள் என மொத்தம் மூன்று லட்சத்து 61 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தனர்.இது, 2008 - 09ம் ஆண்டில், அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 60 ஆயிரம் ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் என மொத்தம் மூன்று லட்சத்து 27 ஆயிரம் ஆசிரியர்களாக உள்ளது. 2006 - 07ம் ஆண்டை விட 2008 - 09ம் ஆண்டில் 34 ஆயிரம் ஆசிரியர்கள் குறைந்துள்ளனர்.இவ்வாறு ராஜகோபாலன் பேசினார்.

முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி பேசும்போது, ""இந்த அறிக்கையின் உண்மைகளை புரிந்து கொண்டு, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ""கேரளாவிற்கு அடுத்ததாக தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்ற கருத்து ஒரு மாயை. ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்கள் இந்த அறிக்கைக்கு பின், தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னேற்றம் கண்டுள்ளன,'' என்றார்.

No comments: