Search This Blog

Thursday, February 3, 2011

ராஜாவை கைது செய்தது சி.பி.ஐ.; உயர் அதிகாரிகளும் சிக்கினர்

ரூபாய், 1.76 லட்சம் கோடி, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகிய மூன்று பேர், சி.பி.ஐ., அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த ராஜா (வயது 47), மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக, 2007, மே 18ல் பதவியேற்றார். இடையில் நடந்த தேர்தலில், 15வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னும், மீண்டும் அதே பதவியில் தொடர்ந்தார்.இவர், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2008ல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றது. இந்த ஒதுக்கீட்டில், ஏல முறை பின்பற்றப்படவில்லை என்றும், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற முறை பின்பற்றப்பட்டதால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து எழுந்த சர்ச்சையால், 2010 நவம்பர் 14ம் தேதி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜா விலகினார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான கட்டடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்குப் பின், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.அதே நேரத்தில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும், வரும் 10ம் தேதிக்குள் விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, கடந்த டிசம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில், ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், பல கேள்விகள் ராஜாவிடம் கேட்கப்பட்டன. பல விஷயங்கள் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.ராஜா மட்டுமின்றி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைசல், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர்கள் சித்தார்த்த பெகுரா மற்றும் மாத்தூர், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியும், வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் தலைவருமான நிரா ராடியாவிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் கடந்த திங்களன்று மூன்றாவது முறையாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. நேற்று முன்தினம், ராஜாவின் சகோதரர் ஏ.கே.பெருமாளிடம் விசாரணை நடைபெற்றது.

கைது: இதைத் தொடர்ந்து, நேற்று காலை, சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட ராஜாவிடம் நான்காவது முறையாக விசாரணை நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து ராஜாவையும், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா ஆகியோரையும் கைது செய்தனர்.சில தொலைத்தொடர்பு கம்பெனிகள், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மற்றும் டெண்டர் நடவடிக்கைகளை மாற்றி அமைத்தது என, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது குறித்து சி.பி.ஐ., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "விசாரணையில் இந்த மூவரும் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். வழக்கமான நடைமுறைகளை மீறி, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவர்கள், கிரிமினல் கூட்டுசதி புரிந்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 120பி மற்றும் லஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜா கைதை அடுத்து, இந்த விவகாரத்தில் அரசியல் தரகர் நிரா ராடியா எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்வி எழுகிறது. அது தவிர, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டைப் பெற்ற சில நிறுவனங்கள் லாபத்துடன் வேறு அமைப்புகளுக்கு விற்றன. அவர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனையானது, பெரும் இழப்புக்கு காரணமாக அமைவதால், சி.பி.ஐ., விசாரணையில் புதுத் தகவல் கிடைத்திருந்தால், அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்படலாம்.

ராஜா கைதானது தி.மு.க.,வுக்கு அதிர்சியான செய்தி என்றாலும், காங்கிரஸ் தரப்பில் இக் கைது, இனி பிரதமரையும், அவர் பதவியின் கவுரவத்தை உயர்த்த உதவிடும் என்ற அடிப்படையில் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. டில்லியில், முதல்வர் தங்கி இருந்த போதே அவரிடம் சி.பி.ஐ., நடவடிக்கை பற்றி கோடிட்டு காட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இனி, பார்லிமென்ட் சுமுகமாக நடக்க இக் கைது உதவும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

கைதானவர்கள் விவரம்:முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ராஜா:தமிழகம், பெரம்பலூரில், 1963ல் பிறந்தார். திருச்சி கல்லூரியில், பி.எஸ்சி., பட்டம் பெற்றார். பின்னர், சட்டம் படித்து வக்கீலானார். தலித் வகுப்பைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில், திராவிடர் கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தார். 1996ல், பெரம்பலூர் தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ல், நீலகிரி தொகுதியில் இருந்து, லோக்சபாவுக்கு தேர்வானார்.தன் 35வது வயதில், அதாவது, 1999ல், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், கேபினட் அமைச்சராக பதவியேற்றார். 2007ல், தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானார். 2009ல் நடந்த தேர்தலுக்குப் பின், மீண்டும் அதே துறையின் அமைச்சரானார். ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக, 2010 நவம்பர் 14ம் தேதி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

சித்தார்த்த பெகுரா: 2008 ஜனவரி 1 முதல், 2009 செப்டம்பர் 30 வரை, தொலைத்தொடர்புத் துறை செயலராக இருந்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட, 122 லைசென்ஸ்கள் தொடர்பாக, பைலில் கையெழுத்திட்டவர் இவரே. இவருக்கு முன்னாள், இந்த பதவி வகித்தவர், டி.எஸ்.மாத்தூர். இவர், ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தொடர்பான பைல்களில் கையெழுத்திட மறுத்து விட்டார். 2007 டிசம்பர் 31ல், மாத்தூர் ஓய்வு பெற்றார். அதன்பின்னர்தான், பெகுரா இந்தப் பதவிக்கு வந்தார்.

சந்தோலியா: 1984ல் தேர்வான ஐ.இ.எஸ்., (இந்திய பொருளாதார சேவைகள்) அதிகாரி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில், ராஜாவின் தனிச் செயலராக இருந்தார். ஐ.மு., கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, சந்தோலியா இணை செயலராக பதவி உயர்வு பெற்றார்.அதனால், அமைச்சரின் தனிச் செயலராக பதவி வகிக்க முடியாத சூழ்நிலை உருவானது. உடன் அவரை பொருளாதார ஆலோசகராக ராஜா நியமித்தார். இதன்மூலம், தொலைத்தொடர்புத் துறை தொடர்பான அனைத்து முக்கிய கொள்கைகளை கவனிக்கும் பொறுப்பாளரானார். இவர்தான் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்தாரர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூன்றாவதும் முதலும் :தமிழகத்தில் இருந்து, ஊழல் குற்றச்சாட்டுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்களில் மூன்றாவது நபராக இருந்தாலும், கைது செய்யப்படும் முதல் நபர் ராஜாவே.நிதியமைச்சர் பதவியில் இருந்து, எல்.ஐ.சி., தொடர்பான முந்திரா ஊழல் காரணமாக, நேரு அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தார்.வாஜ்பாய் அரசில், சாலை போக்குவரத்து அமைச்சராக இருந்த சேடபட்டி முத்தையாவும், தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

கருணாநிதி அன்று சொன்னது என்ன?ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி புகாரால், தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ராஜா பதவி விலகிய பின், கடந்த டிசம்பர் 8ம் தேதி நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, "2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ராஜா தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரை கட்சியில் இருந்து நீக்க தயங்க மாட்டோம். ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. சி.பி.ஐ., விசாரணை முடிந்து, ராஜா குற்றவாளி என நிரூபிக்கும் வரை அவர் குற்றமற்றவரே' என, தெரிவித்தார்.

அதேபோல், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 7ம் தேதி நிருபர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், ""2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில், அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏன, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கூறியிருப்பது தவறானது. அப்படிக் கருத்துக் கூறியது அரசை இக்கட்டான நிலைக்கு தள்ளியது. ஆனால், ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை துல்லியமாக ஆராய்ந்தால், அரசுக்கு இழப்பீடு பூஜ்யம் தான் ,'' என்றார்.

ராஜா கைது: டில்லியில் நடந்தது என்ன?

பிரணாபின் புன்னகை: ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நேற்று மதியத்துக்கு மேல் உறுதியாகிக் கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் தீவிர ஆலோசனையில் இருந்தனர். நார்த் பிளாக்கில் உள்ள பிரணாப்பின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. ஆனாலும், வெளியில் வந்தபோது நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு வெறும் புன்னகையை மட்டும் அளித்து விட்டு பிரணாப் சென்றார். பிரணாப்பும், அகமது படேலும், தி.மு.க.,வுடனான கூட்டணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது என்ன? சி.பி.ஐ., அலுவலகத்தில் நேற்று கைது செய்யப்பட்ட ராஜா, உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை. அவர், சி.பி.ஐ., அலுவலகத்திலேயே தங்க வைக்கப்படலாம் என, கூறப்பட்டது. இருப்பினும், பாட்டியாலா கோர்ட்டில் இன்று ராஜாவை ஆஜர்படுத்தும் போது, "தங்களது விசாரணை இன்னும் முடியவில்லை. அதனால், ராஜாவை தங்களது காவலிலேயே வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில் கோரப்படலாம். அப்படி இல்லாமல், தங்களது விசாரணை முடிந்து விட்டதாக கோர்ட்டில் சி.பி.ஐ., கூறினால், நீதிமன்ற காவலில், திகார் சிறைக்கு ராஜா அனுப்பப்படலாம்.

மேலும், ராஜாவை நேற்று விசாரணைக்கு வரும்படி மட்டுமே சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்திருந்தனர். ஆனால், ராஜாவுக்கு தான் கைது செய்யப்பட போகிறோம் என்பது நேற்று முன்தினம் இரவு வரை தெரியாது. காரணம் அவரை சந்திக்க வேண்டுமென்று, அவரது நண்பர்கள் சிலர் நேரம் கேட்டிருந்தனர். அவர்களை இன்று வந்து சந்திக்கும்படி அதற்கான நேரத்தை ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கைதை உறுதி செய்த ராஜா: காலையில் சி.பி.ஐ., அலுவலகத்திற்கு சென்ற ராஜாவிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனாலும், நேரம் ஆக ஆக கைது செய்திகள் கசிய ஆரம்பித்தது. மதியம் ஒரு மணிக்கு ராஜாவிடம் இருந்து அவரது வீட்டிற்கு போன் வந்துள்ளது. அப்போது தனது குடும்ப உறுப்பினர்களிடம் ராஜா பேசியுள்ளார். பின், "கைது செய்யப்படலாம் என்று செய்தி வருகிறதே' என, ராஜாவின் உதவியாளர் கேட்டபோது, " இன்று கைது நடவடிக்கை இருக்கலாம்' என்று கூறி, தனது கைது செய்தியை அப்போதே உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments: