Search This Blog

Wednesday, February 16, 2011

பதவி விலக மாட்டேன்: பிரதமர் மன்மோகன்

கூட்டணி அரசை தலைமையேற்று நடத்தும்படி, மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளதால், பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

தொலைக்காட்சி செய்தி சேனல்களின் செய்தி ஆசிரியர்கள் கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பதில் விவரம்:கூட்டணி அரசை வழிநடத்தி செல்லும் போது, சில சங்கடங்கள் எழுவது இயல்பே. சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே. அதற்காக, பிரதமர் பதவியை விட்டு விலகுவது என்ற எண்ணமே எனக்கு எழவில்லை.நான் இப்போதுள்ள பணியை திறம்படவே செய்கிறேன். எனவே, ஏற்றுக் கொண்ட பணியை பாதியிலேயே விட்டுச் செல்லும் எண்ணம் இல்லை. இந்த அரசு இன்னும் நிறைய விஷயங்களில் சாதிக்க வேண்டியுள்ளது.கூட்டணி அரசை தலைமையேற்று நடத்தும்படி, மக்கள் எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர். முடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளதால், அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு பதவி விலகும் பேச்சுக்கே இடம் இல்லை.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஒரு பைசா கூட நஷ்டம் இல்லை என, அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். இவ்விஷயத்தில் ஆரம்பம் எது என, பார்க்க வேண்டும். ஏலமுறையை பின்பற்றக்கூடாது என்பதே கொள்கையாக இருந்து வந்துள்ளது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கைப்படி பார்த்தால், லாப, நஷ்ட கணக்குகளை யூகிக்கவும் முடியாது.

அரசு எத்தனையோ திட்டங்களுக்கு மானியம் வழங்குகிறது. இதை வைத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறமுடியாது. உதாரணமாக உணவுப் பொருட்களுக்கு, 80 ஆயிரம் கோடி வரை அரசு மானியம் அளிக்கிறது. அதை விட, உரங்களுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் மண்ணெண்ணெய்க்கு மானியம் அதிகமாக வழங்கப்படுகிறது. எனவே, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கூறப்பட்ட நஷ்ட தொகை என்பது ஒரு அனுமானமே.இஸ்ரோ - தேவாஸ் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இதை வலுவிழக்க செய்யும் நோக்கத்தில், பிரதமர் அலுவலகம் எந்தவொரு காரியங்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபடுவதாக கூறப்படுவது தவறான தகவல்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. அதில், ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும்.பார்லிமென்ட் நடைபெறவிடாமல் எதிர்க்கட்சிகள் செய்வது குறித்து எனக்கு புரியவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடராவது சரியாக நடைபெற வேண்டும். எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருத்து வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும், பார்லிமென்ட் சுமுகமாக நடைபெற வேண்டும்.அடுத்த பொதுத்தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து இப்போதே எதுவும் கூற முடியாது. என்னுடைய மீதி பதவிக் காலத்தை பூர்த்தி செய்வேன் என்றே நம்புகிறேன். நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா கோப்பை வெல்ல வேண்டுமென்று நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நானும் அதையே விரும்புகிறேன். இந்திய அணியில் பிடித்தமான வீரர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு சொல்ல விருப்பமில்லை.இவ்வாறு பிரதமர் கூறினார்.

இலங்கை கடற்படையினர் பிடித்த மீனவர்களை மீட்க நடவடிக்கை : "இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து, ஏற்கனவே வெளியுறவுத்துறை செயலரை இலங்கைக்கு அனுப்பி, மத்திய அரசு தன் கண்டனத்தை தெரிவித்தது."இந்நிலையில், மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு அருகில் உள்ள நட்பு நாடுகள், இதுபோல நடப்பது ஏற்கத்தக்கது அல்ல. சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது' என்று பிரதமர் கூறினார்.அதே சமயம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மூலம் அந்த நாட்டு அரசுடன் பேசி உடனடியாக மீனவர்களை மீட்க பேசி, நடவடிக்கை எடுத்திருப்பதாக நேற்று மாலையில் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி கூறினார்.

"எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க தயார்' : சமீபகாலமாக மத்திய அரசின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சரமாரியாக சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இவற்றுக்கு விளக்கமளிக்கும் வகையில், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை, 11 மணிக்கு துவங்கிய இந்த சந்திப்பின் ஆரம்பத்தில், பிரதமர் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போட்டிகள், ஐ.எஸ்.ஆர்.ஓ., என, வரிசையாக பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இப்பிரச்னைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதில், ஊடகங்கள் சிறப்பாக செயல்பட்டன.இப்பிரச்னைகளில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, ஊடகங்கள் தூண்டுகோலாக இருந்தன.

ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ள பிரச்னைகளில், யார் தவறு செய்திருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இருப்பினும், நாடு முழுவதும் ஊழல்கள் மட்டுமே நிரம்பியிருப்பது போல சித்திரிக்கப்படுகிறது. ஆனாலும், உரிய முறையில் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தே உள்ளது. இந்த ஆண்டு, நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது, 8.54 சதவீதம் வரை உள்ளது.ஆனாலும், நாட்டின் பணவீக்கம், உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகியவை, கவலையளிக்கின்றன. வளர்ச்சி விகிதம் என்பது, பரவலாக பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. இருப்பினும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் மேலும் குறையும்.உள்நாட்டு பாதுகாப்பை பொறுத்தவரை, பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இது வரவேற்கத்தக்கது. வடகிழக்கு பகுதியில் முன்பை விட நிலைமைகள் மேம்பட்டுள்ளன. அங்கு, உல்பா அமைப்புகள் தங்களது வன்முறை பாதையை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர சம்மதித்து இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.ஜம்மு காஷ்மீரிலும் நிலைமைகள் மேம்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளியுறவுத் துறையை பொறுத்தவரை, உலகநாடுகள் பாராட்டும் வகையில் இந்தியாவின் நடவடிக்கைகள் உள்ளன.கடந்த முறை ஏற்பட்ட முட்டுக்கட்டையால், பார்லிமென்ட் இயங்காமல் இருப்பது சரியானது அல்ல. அரசு, எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் ஆகிய மூன்றுமே, ஒன்றுக் கொன்று ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறும் என, உறுதியாக நம்புகிறேன்.அரசைப்பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க தயாராகவே உள்ளோம். எங்கு, எப்போது நடவடிக்கைகள் தேவைப்படுகின்றனவோ, அப்போது, உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னைகள், எப்போதுமே இருக்கத்தான் செய்யும்.அதேபோல, அதற்குண்டான தீர்வுகளும் அந்த தீர்வை ஏற்படுத்த தேவையான வழிமுறைகளும் இருக்கத்தான் செய்யும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

எஸ்-பாண்ட் விவகாரம்: கேபினட் இறுதி முடிவு : "டிவி' செய்தி ஆசிரியர்களுக்கு பேட்டியளித்த மன்மோகன் சிங், "எஸ்-பாண்ட்' விவகாரம் கூறியதாவது:"எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு தொடர்பாக திவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இது குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இறுதி முடிவை எடுக்கும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, விண்வெளி கமிஷன் பரிந்துரை செய்த பின், என் அலுவலகம், திவாஸ் நிறுவனத்துடன் மறைமுக பேச்சுவார்த்தை எதையும் நடத்தவில்லை. ஒப்பந்தம் ரத்து செய்யப்படாத நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு விண்வெளித்துறை அதிகாரிகள், இஸ்ரோ அதிகாரிகள், ஆண்ட்ரிக்ஸ் நிறுவன அதிகாரிகள், திவாஸ் பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். ஆனால், அதன் பிறகு விண்வெளித்துறை அதிகாரிகளோ, இஸ்ரோ ஒப்பந்தத்தை அமல்படுத்தவது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விண்வெளி கமிஷன் எடுத்த முடிவை மாற்றியமைக்கவோ, சீர்குலைக்கவோ, மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறேன்.சில நடைமுறை சிக்கல்களால், ஒப்பந்தத்தை ரத்து செய்வது காலதாமதமானது. தற்போது அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனை முடிந்துள்ளது. விரைவில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான கமிட்டி முடிவு எடுக்க இருக்கிறது.இவ்வாறு பிரதமர் கூறினார்.

திவாஸ் மிரட்டல்: "ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமானால், நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என, திவாஸ் மல்டி மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments: