கடந்த சட்டசபை தேர்தலில், மேட்டூர் தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்காத நிலையில், "வரும் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும். அதில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட வேண்டும்' என, மேட்டூரில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.கடந்த, 2006 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இருந்தது. அப்போது, பா.ம.க., கோரிக்கையை ஏற்று, மேட்டூர் சட்டசபை தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது; பா.ம.க., சார்பில், மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின், தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகியது. அடுத்து வந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், "2006 சட்டசபை தேர்தலின் போது மேட்டூர் சட்டசபை தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்கி, மாவட்ட பொருளாளர் கோபாலை வேட்பாளராக்க கோரினேன். கட்சித் தலைமை மேட்டூர் தொகுதியை பா.ம.க.,வுக்கு ஒதுக்கி விட்டது' என, விரக்தி தெரிவித்தார்.வரும், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்து போட்டியிடுகிறது. பா.ம.க.,வுக்கு, 31 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியுள்ளது. எனவே, மேட்டூர் சட்டசபை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க, பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு தொகுதி ஒதுக்கும் பட்சத்தில், பா.ம.க., மாநில தலைவர் ஜி.கே.மணியே மேட்டூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.
தி.மு.க., சார்பில் தொகுதி ஆலோசனை கூட்டம் மேட்டூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கோபால், மாவட்ட துணை செயலர் சிவலிங்கம் உட்பட கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட நகர, ஒன்றிய, கிளை செயலர்கள் உள்ளிட்ட அனைவரும், மேட்டூர் தொகுதி கடந்த, 2006ல் சட்டசபை தேர்தலின்போது, பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. வரும் தேர்தலில் மேட்டூர் தொகுதியை, தி.மு.க.,வுக்கே ஒதுக்க வேண்டும். மேலும், மேட்டூர் தொகுதியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
மேட்டூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கக்கோரி தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ம.க., கோரிக்கை விடுத்த நிலையில், தி.மு.க.,வினர், மேட்டூர் தொகுதியை, தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும், வீரபாண்டி ஆறுமுகத்தை மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment