2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என கூறுவது சரியானதல்ல,'' என, பொதுக்கணக்கு குழு முன் ஆஜரான சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங் கூறியுள்ளார்.
பா.ஜ., மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முன், நேற்று முன்தினம் ஆஜரான சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங் கூறியதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பான கிரிமினல் சதிகள் பற்றி மட்டுமே சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதனால், "2ஜி' ஒதுக்கீட்டால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என, தற்போதைய நிலையில் என்னால் உறுதியாக சொல்ல முடியாது. அதேநேரத்தில், இந்த மோசடி விவகாரத்தை பொறுத்தமட்டில், அரசுக்கு எந்த விதமான இழப்பும் இல்லை என்றும் சொல்ல முடியாது.இதுவரை சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் மேற்கொண்ட விசாரணையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால், அரசுக்கு 40 ஆயிரம் கோடி முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாம்.நான் பதவியேற்று இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான எங்கள் அமைப்பின் விசாரணையில் எந்த விதமான குறுக்கீடும் இல்லை. தற்போது எனக்கு தெரிந்த விவரங்களைக் கூறி விட்டேன். மீண்டும் ஒருமுறை ஆஜராக வாய்ப்பு அளித்தால், மேலும் பல விவரங்களை கேட்டு தெரிவிப்பேன்.இவ்வாறு ஏ.பி.சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment