பா.ஜ., மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தனது சொத்து விவரங்களை பட்டியலிட்டு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரிக்கு அனுப்பியுள்ளார். முதல்வர் எடியூரப்பா தனது சொத்து விவரங்களை இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார். நேற்று மாலை, முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், அவரது செய்தி தொடர்பாளர் ஜெகதீஷ், எடியூரப்பா சொத்து நகலை வெளியிட்டார். இந்த நேரத்தில், முதல்வர் எடியூரப்பா உடுப்பி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.
தன்னிடம் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பட்டியலிட்டுள்ளார். விவசாய நிலங்கள், விவசாயமற்ற நிலங்கள், வங்கி முதலீடுகள், பங்குகள், அசையும் சொத்துகள், தங்கம், வெள்ளி நகைகள், சேமிப்பில் உள்ள வங்கி கணக்குகள், ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடுகள், இதர சொத்துக்கள் என்ற தலைப்பின் கீழ், தனது சொத்து கணக்குகளை தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்கள் : ஷிகாரிபுரா தாலுகா சன்னஹள்ளியில் மொத்தம் மூன்று இடங்களில் உள்ள 13.21 ஏக்கர் நிலம், சிகாரிபுரா தாலுகா திம்மலாபுராவில் 5.2 ஏக்கர் நிலம்.
விவசாயமற்ற நிலங்கள் : ஷிகாரிபுராவில் 22க்கு 35 அடி, 40க்கு 35 அடி, 2க்கு 22 அடி குடியிருப்பு வீடுகள். ஷிகாரிபுராவில் 28க்கு 50 அடி குடியிருப்பு வீடு. ஷிரலாகொப்பாவில் 9.12 ஏக்கர் விவசாய நிலம், (இந்த நிலம் பின்னர் தொழிற்பகுதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது). பெங்களூரு ஆர்.எம்.வி. செகண்ட் ஸ்டேஜில் 50க்கு 80 அடி வீடு, (இந்த பிளாட் 1997 மே 27ல் பி.டி.ஏ. ஒதுக்கியது, 1999 பிப்ரவரியில் வீடு எழுப்பப்பட்டது).
வங்கி கணக்குகள் : கெய்தான் நிறுவனத்தில் 70 பங்குகள் 1984 நவம்பர் 22ல் வாங்கப்பட்டது. ஷிகாரிபுரா சிவா கூட்டுறவு வங்கியில் 2002 டிசம்பரில் 20 ஆயிரம் ரூபாய் டிபாசிட். ஷிகாரிபுரா நகர வங்கியில் 100 பங்குகள் 1971 நவம்பரில் வாங்கியது, சாப்ட்வேர் டெக் குரூப்பில் 100 பங்குகள் 2000 ஜனவரியில் வாங்கியது, ஜெனித் இன்போடெக் லிமிடெட்டில் 50 பங்குகள் 2000 ஜனவரியில் வாங்கியது சொத்தில் அடக்கம்.
அசையும் சொத்துகள் : காண்டஸா கார், ஸ்கார்பியோ என இரண்டு கார்களும் வாங்கி விற்கப்பட்டுள்ளன. ஆனால் எப்போது வாங்கினார், எப்போது விற்றார் என கணக்கு இல்லை. தங்க, வைர நகைகள் 2 ஆயிரத்து 596 கிராம் உள்ளன. வெள்ளி நகைகள், பாத்திரங்கள் 76 கிலோ மதிப்புள்ள 34 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எட்டு வங்கிகளில் சேர்த்து மொத்தம் 31 லட்சத்து 24 ஆயிரத்து 169 ரூபாய் இருப்பு உள்ளது. 1.70 லட்சம் எல்.ஐ.சி., பாலிசி எடுக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உயோகப் பொருட்கள் உள்ளன.
இந்த கணக்குகள் லோக் ஆயுக்தா, தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை, தற்போதைய நிலவரம் என பிரித்து கணக்கு காண்பித்துள்ளார். நிலங்கள், வீடுகள் மதிப்பிடப்படவில்லை. ஷேர்கள், கார்கள் மதிப்பை குறிப்பிடவில்லை. முதல்வர் எடியூரப்பா தனக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர் என்றும், இவர்கள் தனித்தனியாக வசிப்பதாகவும், 2004 பிப்ரவரியில் சொத்துகள் பிரித்து கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதே நகலை பா.ஜ., மேலிட பொறுப்பாளர் தர்மேந்திரா பிரதானுக்கும் அனுப்பியுள்ளார்.
முதல்வர் எடியூரப்பா தன் வங்கி கணக்குகள், வீடுகள், நிலங்களை தனது சொந்த தொகுதியான ஷிகாரிபுராவில் தான் வாங்கியுள்ளார். பெங்களூரில் ஒரே ஒரு வீடு மட்டும் இருப்பதாகவும், அதுவும் பி.டி.ஏ., கொடுத்தது என்றும் உருகியுள்ளார். மற்றபடி எனக்கோ, எனது மகன்கள், மகள்களுக்கு சுவிஸ் வங்கியில் எந்த கணக்கும் இல்லை. வருமான வரி விலக்கு அளிக்கும் சொர்க்க நாடுகளிலும் வங்கி கணக்கு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment