கூட்டணி கட்சிகளுக்கு வேண்டிய தொகுதிகளை கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு கூட்டணியால் பலன் ஏற்படுவதை விட, இழப்பே அதிகம் ஏற்பட உள்ளது.
தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பத்து தொகுதிகள் வரை ஒதுக்கப்பட உள்ளன. இக்கட்சிகள், வடமாவட்டங்களில் தான் பெரும்பாலும் போட்டியிட உள்ளன. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 20 தொகுதிகளாவது வடமாவட்டங்களில் ஒதுக்கப்படும். இவ்வாறு, 50 தொகுதிகள் வடமாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்படியென்றால், வடமாவட்டங்களில் தி.மு.க., எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், கூட்டணி கட்சிகளால் எவ்வளவு பலனடையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரை, வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., போன்ற கூட்டணி கட்சிகளால் தி.மு.க., அணி வலுவாக காணப்படுகிறது. எனினும் சேலம், ஈரோடு, கோவை போன்ற மண்டலங்களில் அ.தி.மு.க.,வுக்கு சாதகமான நிலை உள்ளது. தே.மு.தி.க.,வும் அ.தி.மு.க., அணிக்கு வந்தால், இப்பகுதிகளில் அந்த அணி மேலும் வலுவடையும்.
இப்படிப்பட்ட நிலையில், அதிக சீட்களை கைப்பற்ற வேண்டிய வடமாவட்டங்களில், பெரும்பாலான தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு இழப்பே அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
மற்றொருபுறம், தென்மாவட்டங்களில் தன் கூட்டணியை ஜெயலலிதா வலுப்படுத்தியுள்ளார். புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி போன்ற கட்சிகளை அணியில் சேர்த்துள்ள ஜெயலலிதா, அப்பகுதிகளில் அ.தி.மு.க.,வுக்கு அதிக எண்ணிக்கையில் சீட் கிடைக்கும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். புதிய தமிழகத்துக்கு இரண்டு, மூவேந்தர் முன்னணிக்கு ஒன்று என்ற அளவில் அவர் தொகுதிகளை ஒதுக்கியுள்ளதால், இந்த கட்சிகளால் மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க., பலன் பெற உள்ளது.
அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த தி.மு.க., கூட்டணியால் பலனடைய முயற்சிப்பதற்கு பதிலாக, கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதிலும், திருப்திபடுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போதைய நிலையில், பா.ம.க.,வுக்கு 31 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள், காங்கிரசுக்கு 60 தொகுதிகள் என்று ஒதுக்கினால் கூட, தி.மு.க., வசம் மீதம் இருப்பது 133 தொகுதிகளே. இதிலும், கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, தி.மு.க., 125 தொகுதிகளில் தான் போட்டியிட வாய்ப்புள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், இவ்வளவு குறைவான தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., முடிவு செய்திருப்பது, எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாடு தான் காரணமாக இருக்கும்.
No comments:
Post a Comment