Search This Blog

Thursday, February 10, 2011

சத்தியமூர்த்தி பவன், "கேட்' பூட்டு உடைப்பு: இளங்கோவன் ஆதரவாளர்கள் அதிரடி

இளங்கோவன் ஆதரவாளர்கள், சத்தியமூர்த்தி பவனில், பூட்டப்பட்டிருந்த, "கேட்'டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கண்டன கூட்டம் நடத்தினர்.

தி.மு.க., கூட்டணியில் இடப் பங்கீடு பற்றி பேச, காங்கிரஸ் சார்பில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், மாநில தலைவர் தங்கபாலு, ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கொண்ட ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், இளங்கோவன் பெயரை சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சத்திய மூர்த்தி பவனில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மங்கள் ராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, ராணி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது: தி.மு.க.,வுடனான கூட்டணி குறித்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொண்ட உணர்வைத்தான் நான் வெளிப்படுத்தி வந்தேன். மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இன்னும் மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி செய்ய வேண்டியுள்ளது. உடல் நலம் சரியாக, தேனில் குழைத்து கசப்பு மருந்து உண்பது போல், மத்தியில் நம் ஆட்சி தொடர, தி.மு.க., ஆதரவு வேண்டும். இதற்காக, சோனியா முடிவுப் படி வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தி.மு.க.,வுடன் அணி சேர்ந்துள்ளோம். இனி மற்ற பிரச்னைகளை பேசாமல், தேர்தலில் நம் கூட்டணி வெற்றிக்கு உழைக்க வேண்டும்.

கூட்டணியில் இடப் பங்கீடு செய்ய நம் கட்சியில், ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் இருவரும் நம் மதிப்பிற்குரியவர்கள். ஜெயந்தி நடராஜன் ஆங்கில புலமை உடையவர்; கட்சியின் செய்தித் தொடர்பாளர். ஜெயக்குமார் இளைஞர், இவர்களை நான் வரவேற்கிறேன். இக்குழுவில், தங்கபாலு எந்த தகுதியை வைத்து இடம் பெற்றுள்ளார்? தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், ஆறுகள், அணைகள் குறித்து புள்ளி விவரத்துடன் பேசக் கூடிய துரைமுருகன், தி.மு.க., அணியில் இடம் பெற்றுள்ளார். அதே போல், 234 தொகுதிகள் குறித்தும் புள்ளி விவரத்துடன் பேசக் கூடிய, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனை நம் கட்சியின், இடப் பங்கீட்டுக் குழுவில் இடம் பெறச் செய்திருக்கலாம் அல்லது நீண்ட காலமாக அரசியலில் உள்ள யசோதாவை இடம் பெறச் செய்திருக்கலாம். அதை விட்டு விட்டு, தங்கபாலு அந்த குழுவில் இடம் பெற்றது ஏன் என்று கேட்டால், 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உண்டு. தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார், எனச் சொல்கின்றனர். இவரின் அரசியல் அனுபவம் என்ன என்பது எனக்கு தெரியாதா? "மெடிக்கல் சீட் வாங்கித் தருகிறேன், வெளிநாட்டிற்கு அனுப்புகிறேன்' எனக் கூறி, லட்சக்கணக்கில் மோசடி செய்த போது காப்பாற்றியது நான் தானே, அந்த நன்றி விசுவாசம் கூட இல்லையே. இவர் முன்பு தலைவராக இருந்த போது, நான்கு பேர் புகுந்து கட்சியினரை அடித்து உதைத்தனர்; அந்தளவில் தான் இவர் கட்சியை வளர்த்து இருந்தார். பிரிந்து இருந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து நான் கட்சியை வளர்த்தேன். இவர் கட்சிக்காக என்ன செய்துள்ளார்?

டில்லிக்கு நான் சென்றிருந்த போது, குலாம் நபி ஆசாத் என்னிடம், "நீங்கள் மூத்த தலைவர். காங்கிரஸ் குழுவில் நீங்கள் இடம் பெறுவீர்கள்' என்று சொன்னார். கடைசியில், என்னை குழுவில் சேர்க்கவிடாமல் தங்கபாலு தடுத்து விட்டார். இப்பிரச்னையை இதோடு விட்டு விடுங்கள், அவரை நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் கட்சித் தலைமை மாறும்; அப்போது, சத்தியமூர்த்திபவன் நம் வசமாகும். இவ்வாறு இளங்கோவன் பேசினார். முன்னதாக, சத்தியமூர்த்திபவன் வாயிலில் இளங்கோவன் ஆதரவாளர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில், "கேட்' பூட்டப்பட்டிருந்தது. மூடப்பட்டிருந்த கேட்டின் பூட்டை, இளங்கோவன் ஆதரவாளர்கள் உடைத்தெறிந்தனர். பலர் ரகளையிலும் ஈடுபட்டனர்.

"இவர்கள் ஏன் தியாகி ஆகவில்லை?' காங்கிரஸ் குழுவில் இளங்கோவனுக்கு இடம் அளிக்காததை கண்டித்து, தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அவரை மற்றவர்கள் தடுத்து விட்டனர். தீக்குளிப்பு முயற்சியை கண்டித்த இளங்கோவன், "தீக்குளிப்பது, தற்கொலை செய்வது ஆண்மையாகாது; அது கோழைத்தனம். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமரனை தியாகி எனக் கூறி, பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள் கொண்டாடுகின்றனர். தற்கொலை செய்து கொள்வது தியாகமென்றால், அந்த தியாகத்தை இவர்கள் செய்யாதது ஏன்?' என, கேள்வி எழுப்பினார்.

No comments: