Search This Blog

Sunday, February 20, 2011

பா.ம.க.,வுடன் கூட்டணி: தி.மு.க.,வினர் அதிருப்தி

தி.மு.க.,கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்று இருப்பதை, தர்மபுரி மாவட்ட தி.மு.க.,வினர் விரும்பவில்லை. கடந்த தேர்தல்களில் பா.ம.க.,வுடன் கடுமையான மோதல்களை சந்தித்த நிலையில், வரும் தேர்தலில் பா.ம.க.,வுடன் கைகோர்த்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில், தர்மபுரி தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வன்னிய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் தர்மபுரி மாவட்டம் முதன்மை இடத்தில் உள்ளது. தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க., கூட்டணி மாறி தேர்தல் களத்தை சந்திப்பதோடு, கூட்டணி சேரும் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, ஐந்து தொகுதியில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளை குறி வைத்து பெற்று வருவதால், பா.ம.க., கூட்டணியில் தலைமை வகிக்கும் கட்சிக்கு வாய்ப்பு குறைந்து வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி (மொரப்பூர் தொகுதி நீக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி), அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன.ஐந்து தொகுதியில், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய மூன்று தொகுதிகளை, பா.ம.க., குறி வைத்துள்ளது. சமீபத்தில் தர்மபுரி வந்த ராமதாஸ், "இந்த மூன்று தொகுதியிலும் படுத்து கொண்டு வெற்றி பெறுவோம்' என, கூறி சென்றார்.

கடந்த, 2006ம் ஆண்டு, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க., தர்மபுரி மற்றும் பாலக்கோடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க., பென்னாகரம் மற்றும் மொரப்பூர் தொகுதியிலும், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி அரூர் தொகுதியில் போட்டியிட்டது.

தற்போது, தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., இரண்டு முதல் மூன்று தொகுதிகளை பெறும் வாய்ப்பு உள்ளது. "தர்மபுரி தொகுதியில் இந்த முறை தி.மு.க., போட்டியிடும்' என, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வன்னிய மக்கள் அதிகம் இருப்பதால், இந்த தொகுதியை தி.மு.க., கண்டிப்பாக, பா.ம.க.,வுக்கு விட்டு கொடுக்கும். அதே நேரம் பென்னாகரம் மற்றும் தர்மபுரி தொகுதியை பா.ம.க., பெற கடும் முயற்சி மேற்கொள்ளும்.

தர்மபுரி தொகுதியில் பா.ம.க., மாநில தலைவர் மணியும், மேட்டூர் தொகுதியில் அவரது மகன் தமிழ்குமரன் போட்டியிடுவர் என, அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.தர்மபுரி தொகுதி தி.மு.க.,வுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் என்ற நிலையில், பென்னாகரம் தொகுதியில் இடைத்தேர்தல் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்திருப்பதால், தி.மு.க., போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் பா.ம.க., போட்டியிட்டு, சொற்ப ஓட்டுக்களில் தோல்வியடைந்த பாலக்கோடு தொகுதியை பா.ம.க., இத்தடவை பெறுமா என்பது சந்தேகம். மேலும் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.பி., சேகர், இத்தொகுதியில் போட்டியிட தி.மு.க., சார்பில், ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில் பா.ம.க.,வுக்கு தர்மபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி ஒதுக்க வாய்ப்பு இருப்பதால் தி.மு.க.,வினர் கவலை அடைந்துள்ளனர்.

அரூர் (தனி) தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.எதிரும், புதிருமாக இரு தேர்தல்களை சந்தித்த நிலையில், மீண்டும் பா.ம.க.,வுடன் கைகோர்த்து, தி.மு.க., தொண்டர்கள் பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் தேர்தலில் பா.ம.க.,வின் வெற்றிக்கு, தி.மு.க.,வினர் முழு அளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்களா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

No comments: