Search This Blog

Sunday, February 27, 2011

பொருட்கள் கொள்ளை; அராஜகம் உச்சகட்டம்: லிபியாவில் இருந்து திரும்பியவர்கள் கண்ணீர்

லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் துவங்கியது முதல், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தோம்; உணவு இல்லாமல் பட்டினி கிடந்தோம்' என, அங்கிருந்து விமானம் மூலம் நாடு திரும்பியவர்கள் தெரிவித்தனர்.

வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் தலைவர் கடாபி பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் இரண்டு வாரங்களுக்கு முன் போராட்டத்தில் குதித்தனர். அது முதல், போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், போராட்டக்காரர்களை ஒடுக்க, கடாபியின் ஆதரவாளர்களும், ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வன்முறை தலைவிரித்தாடியதால், அங்கு வசித்த 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்திய அரசு துவக்கியது.லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க இரண்டு விமானங்களும், நான்கு கப்பல்களும் அனுப்பப்பட்டன. ஏர்-இந்தியாவின் இரு விமானங்கள் மூலம் முதற்கட்டமாக 528 பேர், நேற்று முன்தினம் இரவு டில்லி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியுறவு இணை அமைச்சர் அகமதுவும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் மற்றும் அதிகாரிகளும் வரவேற்றனர். லிபியாவிலிருந்து வந்தவர்களில் பலர் தங்களின் கண்ணீர் கதைகளை, விமான நிலையத்தில் நிருபர்களிடம் விவரித்தனர்.

லிபியாவில் கடந்த 31 ஆண்டுகளாக வசித்த கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த முகமது சலி கூறியதாவது:லிபியாவில் கடாபிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மக்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. போராட்டம் ஆரம்பித்தது முதல் நாங்கள் எல்லாம், உயிருக்கு என்ன ஆகுமோ என பயந்து கொண்டிருந்தோம். நானும், என்னுடன் மேலும் சில இந்தியர்களும் இரண்டு நாட்களாக முகாமில் தங்கியிருந்தோம். எங்களின் உடைமைகளை எல்லாம் லிபியா மக்களில் பலர் அள்ளிச் சென்றனர்.கடாபிக்கு எதிராக போராட்டம் துவங்கியது முதல், லிபியாவில் சட்டத்தின் ஆட்சி இல்லை. தலைநகர் டிரிபோலியில் இருந்த பல போலீஸ் நிலையங்களை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரித்து தீக்கிரையாக்கினர். நாங்கள் உள்ளூர் மக்களின் தீவைப்பு சம்பவங்கள் மற்றும் கொள்ளையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.இவ்வாறு முகமது சலி கூறினார்.

லிபியாவில் கார்பென்டராக பணிபுரிந்த கரம்வீர் கூறுகையில், ""லிபியாவில் நிலைமை சீரானால் கூட, நான் மீண்டும் அங்கு செல்ல மாட்டேன். அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. மக்களே கொள்ளை, கொலையில் ஈடுபடுகின்றனர். அங்கு போலீசும் இல்லை; பாதுகாப்பும் இல்லை. எங்களை பாதுகாப்பாக சொந்த நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்த இந்திய அரசுக்கு நன்றி,'' என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக லிபியாவில் தனியாக வசித்த பெண் டாக்டர் நவ்பீர் கூறுகையில், ""கடாபிக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கும் வரை, அங்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதாக நான் உணரவில்லை; நான் அன்னிய நாட்டில் இருப்பது போன்றும் உணர்ந்ததில்லை. இந்தியா வருவதற்காக விமானத்திற்கு செல்ல முற்பட்ட போது கூட, சிலர் என்னை போக வேண்டாம் என தடுத்தனர். டிரிபோலி விமான நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது. விமான நிலையத்திற்குள் செல்ல குறைந்தபட்சம் 10 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நீண்ட வரிசையில் நின்று தான், விமான நிலையத்திற்குள் செல்ல முடியும்,'' என்றார்.

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த மொபின் குரேஷி கூறுகையில், ""எங்களுக்கு உதவ யாரும் இல்லை. அனைத்து வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. நாங்கள் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இந்தியர்கள் நிலைமை குறிப்பாக பணியாளர்கள் முகாமில் இருப்பவர்களின் நிலைமை மிக மோசம். முகாம்கள் எல்லாம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டு விட்டன; தங்குவதற்கு இடமில்லை. டிரிபோலி விமான நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் கூட, பணம், மொபைல் மற்றும் இதர மதிப்புமிக்க பொருட்களை எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர்,'' என்றார்.

லிபியாவில் தொழிலாளர்களாக வேலை பார்த்த பலர் கூறுகையில், ""எங்களுக்கு லிபியா போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக எங்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் பறித்துக் கொண்டனர். வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்த போது, உணவோ அல்லது மருத்துவ வசதிகளையோ, எங்களை வேலைக்கு அழைத்துச் சென்ற நிறுவனம் வழங்கவில்லை. மேலும், எங்களை முறையான பணி விசாவில் அழைத்துச் செல்லாமல், சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றுள்ளதும் தெரிய வந்தது. எங்களுடன் லிபியாவுக்கு பணிக்கு வந்த ஒருவர், வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எந்த மருத்துவ வசதியும் அளிக்கப்படவில்லை,'' என்றனர்.

லிபியாவில் நடப்பது என்ன? கோவை வந்த டாக்டர் பேட்டி: லிபியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு 600 பேருடன் விமானங்கள் டில்லி வந்தன. இவர்களில் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த டாக்டர் கவிதா, கோவை மதுக்கரையைச் சேர்ந்த இன்ஜினியர் அருண் பிரசாத் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று பகல் 11.50 மணிக்கு விமானத்தில் கோவை வந்தனர்.

டாக்டர் கவிதா கூறியதாவது:கணவர் சரவணன், லிபியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார். கடந்த இரு வாரங்களாக அந்நாட்டில் பெரும் கலவரம் நடக்கிறது. நகர் பகுதியை விட, புறநகர் பகுதியில் தான் கலவரம் தொடர்ந்து நடக்கிறது. ஆனாலும், பாதுகாப்பு கருதி ஒரு வாரமாக வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம். அந்நாட்டில், இந்தியாவைச் சேர்ந்த 18 ஆயிரம் பேர் வசிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த நாடு திரும்ப முடிவு செய்து, விமான நிலையங்களில் காத்திருக்கின்றனர்.விரைவில், கலவரம் ஓய்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலானோர் அங்கேயே உள்ளனர். கணவருக்கு அங்கு அவசிய வேலை இருப்பதால் நானும், என் குழந்தைகளும் புறப்பட்டு வந்துள்ளோம் என்றார்.

இன்ஜினியர் அருண் பிரசாத் கூறுகையில், ""தலைநகர் டிரிபோலியில் இருந்து தொலைவில் உள்ள பென்டகார்ட் பகுதியில் தங்கியுள்ளோம். நாட்டில் பல பகுதியில் கலவரம் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வருவதில்லை. பாதுகாப்பு கருதி பகல் நேரத்திலும் மக்கள் நடமாட்டம் இல்லை. கலவரத்துக்கு பயந்து நானும், பேராசிரியையான எனது மனைவி ரேஷ்மா(35), குழந்தைகள் ஆதிரா(10), துவாரகா(6) ஆகியோர் சொந்த ஊர் திரும்பி விட்டோம்,'' என்றார்.

டுனீசியா சென்ற 258 பேர் : லிபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் பணியை மத்திய அரசு முடுக்கி விட்டிருந்தாலும், லிபியாவில் தங்கியிருந்த இந்தியர்கள் 88 பேர் சாலை மார்க்கமாக லிபியாவில் இருந்து டுனீசியாவின் ராஸ் ஜெடிர் நகருக்குச் சென்றனர். அவர்களை டுனீசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களுக்காக முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்படுவர். இதுதவிர, மேலும் 170 இந்தியர்களும் நேற்று ராஸ் ஜெடிர் வந்துள்ளனர்.இதற்கிடையில், ஐ.என்.எஸ்.ஜலஸ்வா மற்றும் ஐ.என்.எஸ்.மைசூர் என்ற இரண்டு கப்பல்கள் நேற்று முன்தினம் காலை லிபியாவுக்கு புறப்பட்டுச் சென்றன. இந்தக் கப்பல்கள் அங்கு சென்றடைய 12 நாட்களாகும். ஏற்கனவே "ஸ்காட்டிய பிரின்ஸ்' என்ற மற்றொரு கப்பல் லிபியா நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. லிபியாவில் சிக்கித் தவிப்போர், இந்தக் கப்பல்கள் மூலம் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

மீட்கப்பட்ட 18 தமிழர்கள் சென்னை வந்தனர் : லிபியாவில் இருந்து மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட, இந்தியர்களில் 18 தமிழர்கள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர்.நேற்று மதியம் 1.50 மணிக்கு, சென்னை வந்த தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ்குமார், பரமக்குடியை சேர்ந்த இளையராஜா, விழுப்புரத்தை சேர்ந்த அருள்முருகன், கன்னியாகுமரியை சேர்ந்த மஞ்சு உள்ளிட்ட 18 பேரும், விமான நிலையத்தில் இருந்து தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்தியர்களை மீட்க மேலும் விமானங்கள்:லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில், மார்ச் 7ம் தேதி வரை இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மேலும் சில விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும் என்று, இந்தியாவின் வெளிநாடு வாழ் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

No comments: