தமிழக அரசியலில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு கூட்டணிகளை சேர்ப்பதில் திராவிட கட்சிகள் திணறி வருகிறது. தேர்தல் வெற்றியில் மைனாரிட்டியை தவிர்க்க நடக்கும் முயற்சியே தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளில் கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் எடுக்க திணறி வருகிறது.
தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. தி.மு.க., வை பொறுத்த வரையில் கடந்த தேர்தலில் இருந்த மெகா கூட்டணி இந்த தேர்தலில் இல்லை. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்ற போதும், வரும் தேர்தலில், 80 சீட் வரை எதிர்பார்ப்பும், ஆட்சியில் பங்கும் என்ற கோஷம் அதிகரித்து இருப்பதால், தி.மு.க., கலக்கத்தில் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு உள்ளிட்ட பிரச்னைகளில் தி.மு.க., திணறி போய் உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில் அக்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், கார்த்திக் கட்சி உள்ளிட்டவைகளுக்கு சில தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய தமிழகம், குடியரசு கட்சிக்கு சீட் ஒதுக்கீடு முடிந்துள்ளது. கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை தவிர பிற கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற தே.மு.தி.க., ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்று வரை, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. மாறாக தே.மு.தி.க., விதிக்கும் நிபந்தனைகளால் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது. தே.மு.தி.க., 50 சீட் வரையில் எதிர்பார்த்துள்ள நிலையில், மாவட்டத்துக்கு ஒரு தொகுதி மற்றும் மாநகராட்சி பகுதியில் இரண்டு முதல் மூன்று சீட்கள் எதிர்பார்ப்பதாலும், கடந்த தேர்தலில் தே.மு.தி.க., அதிக ஓட்டுக்கள் பெற்ற வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிக்கு தே.மு.தி.க., குறி வைத்து வருகிறது. மேலும் தேர்தலுக்கு பின் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்ற நிபந்தனையும், தே.மு.தி.க., விதித்திருப்பதாக அ.தி.மு.க., வட்டாரத்தில் பேசப்படுகிறது. தே.மு.தி.க., கூட்டணி குறித்த முடிவை பா.ம.க., மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.
இதை எல்லாவற்றையும் விட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் தனி பெரும்பான்மை பெற வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர். மொத்தம் உள்ள, 234 தொகுதியில் தனிப்பெரும்பான்மை பெற, 117 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கு, 130 முதல், 140 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே, 117 தொகுதிகளை பெற முடியும். அ.தி.மு.க.,வை பொறுத்த வரையில் தற்போது, தி.மு.க., அரசை மைனாரிட்டி அரசு என சுட்டிக்காட்டுவது போல் வரும் தேர்தலில் தமக்கும் அந்த நிலை வந்து விடக்கூடாது என நினைக்கின்றனர். தி.மு.க.,வும் தற்போதைய நிலையை போல் மைனாரிட்டி விமர்சனத்துக்கு ஆளாக கூடாது என நினைகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர தே.மு.தி.க., இணைந்தால் கூட்டணிக்கு அதிக தொகுதிகளை தாரை வார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், தே.மு.தி.க.,வை மட்டும் கூட்டணியில் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று கூட்டணி குறித்த தெளிவான முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க., கூட்டணி விஷயத்தில் சற்று சுறுசுறுப்பு அடைந்திருந்தாலும், மெஜாரிட்டியை தக்க வைக்க கூட்டணி கட்சிகளிடம் பேரத்தை படிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க.,வை பொருத்த வரை, காங்., கட்சியின் முடிவை பொறுத்து பிற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பா.ம.க., தி.மு.க., கூட்டணியில் இடம் பெறும் என்பது, கருணாநிதி-ராமதாஸ் சந்திப்பின் மூலம் உறுதியாகி உள்ளதால், தி.மு.க.,வுக்கு எந்தனை சீட்டில் போட்டியிடும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
No comments:
Post a Comment