தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் வன்னியர்களுக்கு போதிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போடப்படும் குழுவிலும் இரண்டு வன்னியர்களை நியமிக்க வேண்டும். ஓட்டு வங்கி வைத்திருக்கும் பா.ம.க.,வையும் கூட்டணியில் இடம் பெற செய்வதே நல்லது' என, டில்லி காங்கிரஸ் மேலிடத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்து கட்சிகளுமே ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு தேர்தலுக்கு முன், வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற குரலும் காங்கிரசில் ஒலிப்பது வழக்கம். அந்த வகையில் இப்போதும் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.,யும், சமூக சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பின் நிறுவனருமான, இரா.அன்பரசு நேற்று டில்லிக்கு வந்திருந்தார். மூத்த தலைவர்கள் அந்தோணி, மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் மற்றும் மத்திய அமைச்சர் வாசன் ஆகியோரையும் சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் வன்னியர்களுக்கு போதுமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
பின், இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு வன்னியர்கள் உள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக வன்னியர் சமூகம் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சமூகத்தின் பெருவாரியான ஆதரவு, காங்கிரசுக்கே இருந்து வந்துள்ளது. இருப்பினும் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வின் போது மூன்று தொகுதிகள் மட்டுமே வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட கிடைத்தது. கிடைத்த மூன்றிலும் வெற்றியும் பெறப்பட்டது. அதேபோல, கடந்த லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு சீட் மட்டுமே வன்னியருக்கு ஒதுக்கப்பட்டது; அதிலும் வெற்றி பெறப்பட்டது.
முந்தைய காலகட்டங்களில் எல்லாம் வன்னியர்களுக்கு சட்டசபை தேர்தல்களில் 25 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கும். லோக்சபா தேர்தலில் ஒன்பது முதல் 10 தொகுதிகள் வரை வன்னியர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால், வர வர இந்த நிலைமை மாறிவிட்டது; இது நியாயமானது அல்ல. எனவே, இந்த தேர்தலிலாவது வன்னியர்கள் போட்டியிடுவதற்கு அதிக தொகுதிகளை காங்கிரஸ் மேலிடம் ஏற்பாடு செய்ய வேண்டும். போதிய பிரதிநிதித்துவத்தை இந்த தேர்தலில் அளிக்க மேலிடம் முன்வர வேண்டும். இது தவிர, தி.மு.க.,வுடன் பேசுவதற்காக காங்கிரஸ் சார்பில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அந்த குழுவில் வன்னியர்கள் இடம் பெறுவது அவசியம். அப்போது தான் அதிக தொகுதிகள் வன்னியர்களுக்கு கிடைக்கும். எனவே, வன்னிய தலைவர்கள் இரண்டு பேரையாவது அந்த குழுவில் நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உள்ஒதுக்கீடு பிற சமூகங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதேபோல, நீதித் துறை, காவல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் வன்னியர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாது, அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நியமனத்திலும் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். டில்லியில் சந்தித்த மேலிட தலைவர்களிடம் இதை வலியுறுத்தினேன்.
இந்த கோரிக்கைகள் குறித்து மேலும் கருத்துக்களை கேட்பதற்கு, வன்னிய தலைவர்கள் பலரையும், சென்னையில் கூட்டி, நாளை ஆலோசனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகளை இடம் பெற வைப்பது என்பது குறித்து, இந்த இரு கட்சிகளின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். ஆனாலும், பா.ம.க., ஓட்டு வங்கி உள்ள ஒரு கட்சி. நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டி கடுமையானதாகவே இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதால், ஓட்டு வங்கி இருக்கும் பா.ம.க., போன்ற ஒரு கட்சியை கூட்டணிக்குள் வைத்து கொள்வதே நல்ல முடிவாக இருக்கும். இவ்வாறு அன்பரசு கூறினார்.
No comments:
Post a Comment