அ.தி.மு.க., தலைமையிடம் தே.மு.தி.க., கேட்கப் போகும் தொகுதி பட்டியல் தயாரிப்பு பணியில், அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இந்த முறை உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.
அ.தி.மு.க.- தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அவ்விரு கட்சிகளிடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 24ம்தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான்று இவ்விரு கட்சிகளின் மூவர் குழுவினர் தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தே.மு.தி.க.,விற்கு 42 சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படவும், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படவும் வாய்ப்புள்ளது. இதனிடையே அ.தி.மு.க.,விடம் தே.மு.தி.க., கேட்கப் போகும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகள் கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் கடந்த இரு நாட்களாக தீவிரமாக நடக்கிறது. இப்பணியில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி செயலர் சுதீஷ், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2006ம் சட்டசபை தேர்தல், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் அடிப்படையில் தொகுதிகளை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இதில் தே.மு.தி.க., விற்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் "ஏ' பிரிவிலும், கூட்டணி பலத்தில் வெற்றிப் பெறக் கூடிய தொகுதிகள் "பி' பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது. இப்பட்டியலில் கொளத்தூர், கும்மிடிபூண்டி, மாதவரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், ரிஷிவந்தியம், வானூர், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பென்னாகரம், உத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், செஞ்சி, ஏற்காடு, ஓமலூர், எடப்பட்டி, குமாரபாளையம், பவானி ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.செய்யாறு, ஈரோடு மேற்கு, திருப்பூர் தெற்கு, பண்ருட்டி, நெய்வேலி, திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, திருப்பரங்குன்றம், அருப்புக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், அம்பாசமுத்திரம், தாராபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர் ஆகிய 42 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க., தலைமையிடம், இந்த தொகுதிகளை கேட்டுபெறுவதற்கு தே.மு.தி.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த்: கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டார். பா.ம.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட அத்தொகுதியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமாக ஓட்டுக்களை பெற்று அவர் எம்.எல்.ஏ., ஆனார். லோக்சபா தேர்தலில் அக்கட்சிக்கு எதிர்பார்த்த ஓட்டுக்கள் கிடைக்கவில்லை. இதனால், இம்முறை உளுந்தூர் பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிடுவார் என தெரிகிறது. ரசிகர்கள் மற்றும் பெண்கள் ஓட்டுக்களை மனதில் வைத்தே அவர் இத்தொகுதியை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment