ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டின் பிடி மேலும் இறுகுகிறது. இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்த யாரையும், அவர்கள் எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், சி.பி.ஐ., சுதந்திரமாக விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன. இந்த இரு அமைப்புகளும், பிப்., 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் தரப்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், சி.பி.ஐ.,யின் செயல், உண்மைகளைக் கண்டறியும் வகையில் இருக்க வேண்டும் எனக் கூறியது. நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு: "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை மத்திய அரசு அமைக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் மோசடியில் பயனடைந்த யாரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் சுதந்திரமாக விசாரிக்கலாம். அதில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளியை காவலில் எடுக்க உரிமை கோரலாம்.
தாங்களே சட்டம் என, ஏராளமானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களையும் இந்தச் சட்டம் பிடிக்க வேண்டும். பிரபலமான வர்த்தக நிறுவனங்களையும், சி.பி.ஐ., தங்களின் விசாரணை வரம்பிற்குள் கொண்டு வரலாம். அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பிரபலங்கள் பட்டியலிலோ அல்லது கோடீஸ்வர்கள் பட்டியலிலோ இடம் பெற்றிருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களிடம் சுதந்திரமாக விசாரணை நடத்தலாம். இந்த மோசடியில் எந்த அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்களையும் விட்டு வைக்கக் கூடாது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினால் மட்டும் போதாது, அதற்கு மேலான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதையெல்லாம் காலதாமதமின்றி செய்ய வேண்டும்.
இதுவரை மோசடி தொடர்புடைய பல பெரிய கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அது வியப்பை அளிக்கிறது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்காதது ஏன்? விசாரணை நிறுவனங்களின் சுதந்திரம் எந்த வகையிலும் தடைபடக்கூடாது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதையும் தாண்டி, இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டும். சதிகாரர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். "2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக, வேறு எந்த கோர்ட்டுகளும் எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே கடந்த ஒருவாரமாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல ஆதாரங்களை திரட்டும் சி.பி.ஐ.,யின் பிடி, இனி கடுமையாக இறுகும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
No comments:
Post a Comment