நடிகர் சிரஞ்சீவியை தெரியாதவர்கள் அதிகம் இருக்க முடியாது. தெலுங்கு திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார். தெலுங்கு திரைப்பட உலகில் படிப்படியாக வளர்ந்து, உச்சத்தை தொட்டவர். சமூக விரோதிகள், ஊழல்வாதிகளுக்கு எதிராக, திரைப்படங்களில், கையை உயர்த்தி, கழுத்து நரம்பு புடைக்க இவர் வசனம் பேசும்போது, படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அடிவயிறு கலங்கும். திரையை கிழித்துக் கொண்டு வந்து, நம்மையையும் உதைப்பாரோ என, பீதி ஏற்படும். அந்தளவுக்கு உணர்ச்சிகரமாக நடிப்பவர். இவரது திரைப்படம் ரிலீசாகும் நாளில், ஆந்திராவே அலறும்.
பிரமாண்ட துவக்க விழா: ஒரு திரைப்படத்தில் நடித்தவர்களே, முதல்வர் கனவு காணும்போது, சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு அந்த ஆசை இருக்காதா? கடந்த 2008ல் இவருக்கும் அரசியல் ஆசை வந்தது. "ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்காக உழைக்கும் அரசை அமைப்பேன். ஊழல்வாதிகள், சமூக விரோதிகளை அடியோடு ஒழிப்பேன்'என, ஏகப்பட்ட "பில்டப்'களுடன் திருப்பதியில் பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார். சும்மா சொல்லக் கூடாது. திருப்பதியில் அன்று கூடிய கூட்டம், சமீப ஆண்டுகளில் ஆந்திராவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்குமே கூடியது இல்லை. அந்தளவுக்கு திரும்பிய திசை எல்லாம், மனித தலைகள் தெரிந்தன. பிரமாண்ட மேடை, மேடையின் நான்கு புறமும் டிஜிட்டல் திரைகள் என, ஏகப்பட்ட தடபுடல் ஏற்பாடுகளுடன், ஒயர்லெஸ் மைக் சகிதம் சிரஞ்சீவி மேடையில் தோன்றியபோது, ஆந்திராவே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது. இந்த பிரமாண்ட துவக்க விழாவை இந்தியாவின் முக்கியமான செய்தி சேனல்கள் எல்லாம், நேரடியாக ஒளிபரப்பு செய்து, ஆந்திர அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைத்தன.
அதிகாரிகள் ஆதரவு: சிரஞ்சீவியின் கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம், பெரும்பாலும் படித்தவர்கள் தான். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் இவரது கட்சியில் விரும்பி சேர்ந்தனர். அவர்களைக் கொண்டே, தனது கட்சியின் கொள்கைகளை உருவாக்கினார். "ஆந்திராவில், தெலுங்கு தேசம், காங்கிரசுக்கு மாற்றான கட்சியாக எங்கள் கட்சி அமையும். ஆந்திராவில் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கப் போகும் கட்சி இது'என, ரிகர்சல் பார்க்காமலேயே முழங்கினார், சிரஞ்சீவி.
மக்கள் கூட்டம்: இந்த நேரத்தில் தான், தனது பலத்தை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது. கட்சி ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளேயே, கடந்த 2009ல் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிரஞ்சீவிக்கு இருந்த மக்கள் செல்வாக்கை பார்த்த அரசியல் கட்சிகள், அவரை தங்கள் கூட்டணியில் சேர்க்க முன்வந்தன. ஆனால், திரைப்படங்களில் பேசுவதைப்போலவே இந்த நேரத்திலும் டயலாக் பேசினார் சிரஞ்சீவி. "மக்களுடன் தான் கூட்டணி அமைப்பேன். ஊழல் ஆட்சியாளர்களை ஒழிப்பது தான் என் வேலை. தனியாகவே தேர்தலை சந்திப்பேன்'என்றார். மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். பிரசாரத்துக்கு இவர் சென்றபோது, பயங்கரமான கூட்டம் கூடியது. மாடிகளிலும், மரங்களிலும், சாலைகளில் திரண்டு நின்ற கூட்டம், அவரைப் பார்த்து ஆர்ப்பரித்தது.
விழுந்தது முதல் அடி: தேர்தல் முடிவுகள் வந்த பின்தான், திரண்ட கூட்டம் எல்லாம், தனக்கு ஓட்டளிக்க வந்த கூட்டம் இல்லை. தன்னை பார்க்க வந்த கூட்டம் என்பதை அவர் உணர்ந்தார். 294 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் மட்டும் தான், இவரது கட்சியினர் வெற்றி பெற்றனர். சிரஞ்சீவி, திருப்பதி, பலாகோல் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, திருப்பதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும், பலகோல் சட்டசபை தொகுதி, சிரஞ்சீவியின் சொந்த மாவட்டமான மேற்கு கோதாவரியில் உள்ளது. முதல் தேர்தலிலேயே சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய கசப்பான அனுபவம் சிரஞ்சீவிக்கு கிடைத்தது. லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அப்போது தான், அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை உணர்ந்தார். திரைப்படங்களில் கோலோச்சிய என்.டி.ஆர்., போன்றவர்கள் எல்லாம், எப்படி அரசியலிலும் அதிகாரம் செலுத்தினர், என, யோசிக்கத் துவங்கினார்.
கைவிட்ட தலைவர்கள்: தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சிக்குள் எதிரொலிக்கத் துவங்கியது. சிரஞ்சீவியின் செல்வாக்கை நம்பி, ஆட்சிக் கனவுடன் வந்தவர்கள் எல்லாம், சுதாரித்துக் கொண்டனர். அவருடன் நெருக்கமாக இருந்த மித்ரா ரெட்டி, பிரகாலா பிரபாகர், தேவேந்திர கவுடு ஆகியோர், கட்சியில் இருந்து வெளியேறினர். இவர்களில் தேவேந்திர கவுடு, மீண்டும் தனது தாய் கழகமான தெலுங்கு தேசத்தில் இணைந்தார். இவர்களைத் தொடர்ந்து, படிப்படியாக தலைவர்களும், தொண்டர்களும் வெளியேறிய வண்ணம் இருந்தனர். கடந்த சில மாதங்களில் மட்டும் சிரஞ்சீவி கட்சிக்கு முழுக்குப் போட்ட தலைவர்களின் எண்ணிக்கை 22 என்கின்றன, ஆந்திர அரசியல் வட்டாரங்கள்.
தெலுங்கானா விவகாரத்திலும் அதிருப்தி:இதைத் தொடர்ந்து, தெலுங்கானா பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இதில் என்ன முடிவு எடுப்பது என, தெரியாமல் திணறினார் சிரஞ்சீவி. இறுதியில், தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு எதிரான நிலையை மேற்கொண்டார். "ஒருங்கிணைந்த ஆந்திரா தான் சிறந்தது'என்றார். இதனால், அவரது கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்களில் பலர் கட்சியில் இருந்தே வெளியேறினர். "கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாகி விட்டதே'என, நொந்து போனார், சிரஞ்சீவி.
மீண்டும் திரைப்படம்: அடிமேல் அடி விழுந்ததால், அரசியல் நமக்கு சரிவராது என்ற முடிவுக்கே வந்து விட்டார். தனது 56 வது பிறந்த நாளின்போது, ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியபோது,"மீண்டும் திரைப்படங்களில் நடிக்க, ஆர்வமாக உள்ளேன். நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைத்தால் நடிப்பேன்'என்றார். இதனால், அரசியலுக்கு முழுக்குப் போட்டு விடுவாரோ என, அவரது ஆதரவாளர்கள் பயந்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டியால் லாபம்: கட்சி நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த சிரஞ்சீவிக்கு, ஜெகன்மோகன் ரெட்டியால் அதிர்ஷ்டம் அடித்து. தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், காங்கிரஸ் ஆட்சிக்கு குழி பறித்துக் கொண்டிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியை, எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கிப் போயிருந்த காங்., மேலிடம், அதிரடியாக அரசியல் கணக்கு போட்டது. சிரஞ்சீவியை நம் பக்கம் இழுந்து விடலாம் என, திட்டமிட்டது. சிரஞ்சீவி கட்சியில் 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு கிடைத்தால், ஜெகன்மோகன் இம்சையை சமாளித்து விடலாம் என, கணக்கிட்டனர். இதற்கான "அசைன்மென்ட்' காங்., மூத்த தலைவர்களான வீரப்ப மொய்லி, அந்தோணி ஆகியோரிடம் தரப்பட்டது. அவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக நிறைவேற்றினர்.
வலையில் விழுந்த சிரஞ்சீவி: "கட்சியில் சேர்ந்தால் மத்திய அமைச்சர் பதவி, உங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மாநில அமைச்சர் பதவி, இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் தான் துணை முதல்வர்'என, வலை விரித்தது காங்கிரஸ். அரசியல் கடலில் தனியாக நீந்தி கரை சேர முடியாது என்பதை உணர்ந்த சிரஞ்சீவி, காங்கிரஸ் விரித்த வலையில் வகையாக சிக்கிக் கொண்டார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் பரபரப்பாக அரங்கேறின. டில்லி சென்று காங்., தலைவர் சோனியாவை சந்தித்த சிரஞ்சீவி, காங்கிரசில் தனது கட்சியை இணைப்பதாகவும், மாநில மக்களின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.
பரிதாபம்: சிரஞ்சீவியின் இந்த இணைப்பு அரசியல் குறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: ஹீரோவாக நடித்து, பிரபலமானவர்கள், வயதானதும் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடிப்பது இல்லையா? அதுபோன்ற ஒரு பரிதாப நிலை தான், தற்போது சிரஞ்சீவிக்கு ஏற்பட்டுள்ளது. முதல்வர் கனவுடன் வந்தவரை, காங்கிரஸ் ஆட்சிக்கு துணை நிற்கும்படி கூறி இருக்கிறது, காங்., மேலிடம். அதையும் சிரஞ்சீவி ஏற்றுக் கொண்டது தான் பரிதாபம். ஆந்திராவில் காங்கிரசைப் பொறுத்தவரை, பழம் தின்று கொட்டை போட்ட பெரிய தலைகள் எல்லாம் உள்ளன. அவர்களை மீறி, முதல்வர் பதவியை அவரால், அத்தனை எளிதாக பிடித்து விட முடியாது. மக்களுக்காக உழைப்பேன். ஊழலை ஒழிப்பேன் என, முழங்கி வந்த ஹீரோ, தற்போது, கட்சி மேலிட உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என, சுருதி குறைந்து, அடக்கி வாசித்து வருகிறார். இன்னும் எத்தனை காலத்துக்கு காங்கிரசில் தாக்குப் பிடிப்பார் என, பார்ப்போம். இவ்வாறு ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன கட்சியின் வரலாறு (?)
2008 ஆகஸ்ட் 26: திருப்பதியில் 10 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில், பிரஜா ராஜ்யம் கட்சியின் துவக்க விழா நடந்தது.
2009 மே 16: ஆந்திர சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு 18 தொகுதிகளில் பிரஜா ராஜ்யம் கட்சி வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
2009 ஆகஸ்ட் 26: கட்சியின் முதலாமாண்டு துவக்க விழாவில் பேசிய சிரஞ்சீவி, காங்கிரசுடன், தன் கட்சியை இணைக்கப் போவதாக வெளியான தகவலை உறுதியாக மறுத்தார்.
2010 மே 30: ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சிரஞ்சீவி அறிவித்தார்.
2011 பிப்ரவரி 1: காங்., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அந்தோணி, சிரஞ்சீவியை சந்தித்து, காங்கிரசில் இணைய அழைப்பு விடுத்தார்.
2011 பிப்ரவரி 2: காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசிய பின், பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரசில் இணைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
No comments:
Post a Comment