Search This Blog

Monday, February 7, 2011

தொகுதி பங்கீடு: திமுகவுடன் பேச ப.சிதம்பரம், வாசன் அடங்கிய 5 பேர் குழு அமைப்பு

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளார் அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி.

இதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவும், காங்கிரசும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் எதிர்ப்பால் இதில் பாமகவையும் சேர்ப்பதில் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 90 தொகுதிகள் கேட்டு திமுகவுக்கு அதிர்ச்சி தந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. திமுக தரப்பில் அதிகபட்சம் 60 தொகுதிகள் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தொகுதிப் பங்கீடு குறித்து பேசவும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி பேசவும் திமுக, காங்கிரஸ் சார்பில் தனித்தனியாக குழுக்கள் அமைத்து பேச்சு நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் அமைச்சர் பொன்முடி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஆனால், குழு அமைப்பதில் காங்கிரசில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந் நிலையில் இந்தக் குழுவை சோனியா காந்தி இப்போது அறிவித்துள்ளார். அதில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இத் தகவலை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் டெல்லியில் தெரிவித்தார்.

No comments: