Search This Blog

Friday, January 28, 2011

தி.மு.க.,விடம் அதிக சீட் கேட்டுப்பெற காங்., தயார்: பிரணாப், அகமது படேலிடம் பொறுப்பு ஒப்படைப்பு

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில், தமிழக காங்கிரசின் டில்லி மேலிட பொறுப்பாளராக இருக்கும் குலாம் நபி ஆசாத்தை அக்கட்சியின் தலைமை ஓரங்கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் காங்கிரஸ் மேலிடமே களம் இறங்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதிக சீட்கள் கேட்டு தி.மு.க.,விடம் பேரம் பேசும் பொறுப்பு, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அகமது படேல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் தமிழக காங்கிரசுக்கு என பெரிய அளவில் முக்கியத்துவத்தை தராமலேயே தவிர்த்து வருவது, காங்கிரசில் வழக்கமான ஒன்று தான். தேர்தல் நடக்கும் காலங்களில் மட்டுமாவது டில்லி மேலிடம், தமிழக காங்கிரசின் செயல்பாடுகள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது கூட தமிழகத்துக்கு மிகவும் டம்மியான ஆட்களையே மேலிடத் தலைவர்களாக நியமிக்கப்படுவதும் நடந்தது. இந்த பாணியில் தான் அருண்குமார் உட்பட சிலரிடம் தமிழக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. குலாம் நபி ஆசாத்தை தமிழக மேலிட பொறுப்பாளராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், டில்லி மேலிடம் அறிவித்தது.இவர் பொறுப்புக்கு வந்த பிறகு, "பலமான தலைவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்ற நம்பிக்கை, தமிழக காங்கிரசிடம் லேசாக துளிர்விட்டது. இவர் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே இவரது ஆதரவாளராகக் கருதப்படும் தங்கபாலுவும் தமிழக காங்கிரசுக்கு தலைவராக ஆக்கப்பட்டார்.

குலாம் நபி வந்த பிறகு, கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் தென்படுவதற்காக தொய்வு தான் ஏற்படத் துவங்கியது. பொறுப்புக்கு வந்ததில் இருந்து இதுவரை எதுவும் உருப்படியாக செய்த மாதிரி தெரியவில்லை. ஜெயலலிதா ஆதரவு தெரிவித்த சமயத்தில் மட்டும் ஒரே ஒரு தடவை தமிழக காங்கிரசில் இடம் காலியில்லை என்று பேட்டியளித்தது மட்டுமே நினைவில் நிற்கிறது.தமிழக சட்டசபையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி ஆறு மாதங்களாக காலியாக உள்ளது. சுதர்சனம் மறைவுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப வேண்டுமென்ற அக்கறையோ, நடவடிக்கையோ காட்டப்படவில்லை. எந்த கோஷ்டியைச் சேர்ந்த எவரையாவது ஒருத்தரை அந்த பதவியில் நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படியிருந்தும், 30க்கும் மேல் எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும் ஒரு கட்சிக்கு சட்டசபையில் தலைவர் இல்லை என்ற நிலையை மாற்ற அவர் முயற்சி செய்யவில்லை. மாறாக டில்லியிலும் அவரது நிலை ஊசலாட்டமாகவே இருக்கிறது. கட்சிப் பதவி, அமைச்சர் பதவி என இரண்டையும் வைத்துள்ளவர் என்பதால் இவர் மாற்றப்படுவார் என்று செய்திகள் வரும்.

இந்த சூழ்நிலையில் தான் எதிர்பாராத திருப்பமாக, தமிழக காங்கிரஸ் விவகாரங்களில் இவர் ஓரங்கட்டப்பட்டுள்ள விஷயம் தெரியவந்துள்ளது.தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம், சட்டசபையில் 100 சீட் என்ற கோரிக்கைகளை முன் வைக்க, காங்கிரஸ் தயாராக உள்ளது. தி.மு.க., தலைமையும், காங்கிரஸ் தலைமையும் நேரடியாக பேசி முடிவெடுத்தாலும் கூட, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியவர்களில் முக்கியமானவர் மேலிட பொறுப்பாளர். ஆனால், கூட்டணி விவகாரங்கள் திரைமறைவில் ஆரம்பமாகி, சில நாட்களில் டில்லிக்கு வரும் முதல்வரது பயணத்தின் போது இறுதியாகவுள்ள நிலையில், குலாம் நபி ஆசாத்தின் பங்களிப்பு என்பதே சுத்தமாக இல்லை.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களில் விசாரித்த போது தெரிய வந்ததாவது: சட்டசபைத் தேர்தல் விவகாரங்களில் தலையிட வேண்டாமென குலாம் நபி ஆசாத் அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதற்காக அவர் மாற்றப்படுவார் என்று அர்த்தம் இல்லை. குலாம் நபி ஆசாத் இடத்திலிருந்து அனைத்து விஷயங்களையும் அகமது படேலும், பிரணாப் முகர்ஜியும் நேரடியாகவே கவனித்துக் கொள்வர் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்கபாலு எப்படி?குலாம் நபிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளரான தங்கபாலு தமிழக காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்படுவரா என்ற கேள்வியும் எழுகிறது. இன்னும் சில தினங்களில் பல மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை மேலிடம் அறிவிக்க உள்ளது. அதில் தங்கபாலுவும் இடம் பெறலாம் என்றாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், தங்கபாலு மாற்றப்படுவார் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றே அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க.,வுக்கும்விருப்பமில்லை : அகமது படேலுக்கும், குலாம் நபிக்கும் பல ஆண்டுகளாகவே சுமுக உறவு இல்லை. இந்த சூழ்நிலையில் குலாம் நபி டம்மி செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் அவர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தவிர தி.மு.க., தலைமையும் குலாம் நபி ஆசாத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.பேச்சுவார்த்தையை நேரடியாக முடித்துக் கொள்ள முடிவெடுத்து விட்டதால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விஷயங்களில் குலாம் நபி ஆசாத் ஓரங்கட்டப்பட்டு விட்டதை தி.மு.க., வட்டாரங்களும் உறுதிப்படுத்தவே செய்கின்றன.

No comments: