Search This Blog

Sunday, February 20, 2011

தி.மு.க.,விடம் காங்., முதல்கட்ட பேச்சு: முக்கிய முடிவுகள் குறித்து பேசவில்லை

"சீட்' எண்ணிக்கை குறித்து தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் காங்கிரஸ் ஐவர் குழுவினர் நேற்று நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில், முக்கிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்காததால், பரபரப்பின்றி முடிவடைந்தது.

தமிழக சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளதால், தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. நேற்று இரு தரப்பு தலைவர்களும் நடத்திய பேச்சு, முதல் கட்ட ஆய்வாக பரபரப்பின்றி முடிந்தது.தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வந்தனர். அவர்களை தி.மு.க., பிரமுகர்கள் வரவேற்றனர்.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றுள்ள துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, பார்லிமென்ட் தி.மு.க., தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோருடன், காங்கிரஸ் ஐவர் குழு பேச்சுவார்த்தையை துவக்கினர். இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரம் நீடித்தது.

தி.மு.க., கூட்டணியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் 48 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. வரும் தேர்தலில் அதிக சீட்டுகளை காங்கிரஸ் பெற வேண்டும்; ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என, காங்கிரசார் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் பார்லிமென்ட் தொகுதிக்கு இரண்டு சட்டசபைத் தொகுதி என்ற அடிப்படையில் 78 சீட்டுகளும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேசலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது. ஐவர் குழுவினர் கேட்ட "சீட்' எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள வேண்டிய காரணங்களையும், தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் விளக்கினர் என்று கூறப்பட்டது.

அதாவது, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி, தேசிய லீக் மற்றும் சில சமுதாய அமைப்புகளைச் சார்ந்த கட்சிகளும் கூட்டணியில் இடம் பெறும். அக்கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. இதனால், தொகுதி எண்ணிக்கை குறித்த முடிவு இறுதி வடிவம் எட்டவில்லை என்பதால், கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து பேசவில்லை.

கூட்டம் முடிந்து வெளியே வந்த காங்., தலைவர் தங்கபாலுவிடம், "எத்தனை "சீட்' கேட்டீர்கள்? ஆட்சியில் பங்கு கேட்டீர்களா? பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதா?' என்று சரமாரியாக நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்:காங்கிரஸ் - தி.மு.க., தொகுதி பங்கீடு குழுக்களின் பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தது. எங்கள் கூட்டணி பலமான கூட்டணி; வெற்றிக் கூட்டணி. தற்போது பேசிய விவரங்கள் காங்., தலைவர் சோனியாவிடம் எடுத்துச் சொல்லப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் பேச இருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்; நல்ல செய்திகளைச் சொல்வோம். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக உள்ளது. எல்லா விஷயங்களையும் பேசினோம்.இவ்வாறு தங்கபாலு கூறினார்.

ஆனால், "எத்தனை சீட் என்ற தெளிவு, அடுத்த முறை நடத்தும் பேச்சுகளுக்குப் பின் தெளிவாகும்' என்று கூறினார். அடுத்த சந்திப்பு எந்த தேதியில் நடக்கும் என்பது பற்றி இப்பேச்சில் இறுதி செய்யப்படவில்லை.

துணை முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ""பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடரும்,'' என்றார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அடுத்து பெரிய அளவில் பரபரப்பு நிகழ்ச்சிகள் நடந்த பின், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட முக்கியத் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசிய போதும், பெரிய அளவில் முடிவுகள் எட்ட வழி காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

No comments: