Search This Blog

Sunday, February 6, 2011

காங்கிரசில் இணைந்தார் சிரஞ்சீவி : டில்லியில் அறிவிப்பு

ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து பேசிய பின், தனது கட்சியை, காங்கிரசுடன் இணைக்கப் போவதாக நடிகர் சிரஞ்சீவி அறிவித்தார். இது காங்கிரசுக்கு பெரும் சாதகமாகும்.ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் கிரண்குமார் ரெட்டி, முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கப் போவதாகவும் அவர் கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இவர்கள் காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றால், ஆட்சி கவிழ்ந்து விடும். விரைவில் தனிக் கட்சி துவங்கப் போவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறி வருகிறார். மேலும், தெலுங்கானா விவகாரத்திலும், காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி அணி உருவாகியுள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளாலும், ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடமும் இதுகுறித்து கவலைப்பட்டது. இந்த எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டுமானால், நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியை, தங்களுடன் இணைத்துக் கொள்வது அல்லது கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என, முடிவு செய்தனர்.
சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவு அளித்தால், ஜெகன் மோகன் ரெட்டியின் எதிர்ப்பை எளிதாக சமாளித்து விடலாம் என, காங்., மேலிடம் திட்டமிட்டது. இந்நிலையில், கடந்த வாரம் ஐதராபாத்துக்கு வந்த, ராணுவ அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான அந்தோணி, சிரஞ்சீவியுடன் இதுகுறித்து பேச்சு நடத்தினார். அப்போது இது தொடர்பாக விரிவாக பேச்சு நடத்த டில்லிக்கு வரும்படி, சிரஞ்சீவிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சோனியாவுடன் சந்திப்பு: இந்த விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. நேற்று டில்லி சென்ற சிரஞ்சீவி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, ராணுவ அமைச்சர் அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து, இரு தரப்பிலும் பேசப்பட்டது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் நடிகர் சிரஞ்சீவி கூறுகையில்,"பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசுடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாள், வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைந்து விட்டது. ஆந்திர மக்களின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆந்திர அமைச்சரவையில் நான் சேரப்போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல' என்றார்.
சிரஞ்சீவியின் இந்த அறிவிப்பு குறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறுகையில்,"பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசுடன் இணைக்கும் விழா, விரைவில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. சிரஞ்சீவிக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், தற்போது அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், சிலர் ஆந்திர அமைச்சர்களாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த இணைப்பு மூலம், ஜெகன் மோகன் ரெட்டியின் எதிர்ப்பை, காங்கிரஸ் மேலிடம் எளிதாக சமாளித்து விடும்' என்றன.
இரண்டே ஆண்டுகளில் சிரஞ்சீவி கட்சி காணோம் : "ஆந்திராவில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு கட்சியை உருவாக்கபோகிறேன்' என்ற முழக்கத்துடன், கடந்த 2008ல் பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார், சிரஞ்சீவி. திருப்பதியில் நடந்த கட்சியின் துவக்க விழாவில், பத்து லட்சம் பேர் திரண்டனர். இதனால், ஆந்திர அரசியலில் சிரஞ்சீவி கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில் பிரஜா ராஜ்யம் கட்சி, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சிரஞ்சிவி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் இந்த கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால், கட்சியின் செல்வாக்கு குறைந்தது. தொடர்ந்து, தனியாக கட்சி நடத்த முடியாமல் திணறி வந்த சிரஞ்சீவி, தற்போது காங்கிரசுடன் கட்சியை இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், துவங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே, பிரஜா ராஜ்யம் கட்சி காணாமல் போய்விட்டது.

No comments: