மத்திய அரசின் சாதனைகளை விளக்குவதற்காக துவங்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரை தி.மு.க., எதிர்ப்பு யாத்திரையாக மாறியுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, "அமைச்சர்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும்' என்று, சமீபத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், காந்தி ஜெயந்தியன்று இளைஞர் காங்கிரஸ் சார்பில், கன்னியாகுமரியில் பாதயாத்திரை துவங்கியது. 125 சட்டசபை தொகுதிகள், 22 லோக்சபா தொகுதிகள் அடங்கிய 1,350 கி.மீ., தூரத்தை நடைபயணமாக நடக்க திட்டமிட்டு, பாதயாத்திரை நடந்து வருகிறது. சாதனைகளை விளக்குவதற்காக துவங்கப்பட்ட பாதயாத்திரை தமிழக அரசையும், தி.மு.க.,வையும் விமர்சிக்கும் யாத்திரையாக மாறியுள்ளது. பாதயாத்திரைக்கு தலைமை வகித்துள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பல்வேறு இடங்களில் பேசும் போது, ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆளுங்கட்சிக்கு கொடுத்து வந்த குடைச்சல் சற்று ஓய்ந்துள்ள நிலையில், ஊர், ஊராக சென்று இளைஞர் காங்கிரசார், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதால் ஆளுங்கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ராகுலின் நேரடி கட்டுப்பாட்டில் இளைஞர் காங்கிரஸ் இயங்குவதால், மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தி.மு.க., ஆதரவு தலைவர்களும் இதை கண்டிக்க தயங்கி வருகின்றனர். "மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மறைக்கிறது' என்று துவங்கிய விமர்சனங்கள், "சாலை வசதி சரியில்லை; அமைச்சர்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைக்கபடுமா' என, பல்வேறு விதமாக விரிவடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, "தமிழக அமைச்சர்களின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து பொதுமக்கள் பிரமிப்படைந்துள்ளதை பாதயாத்திரையின் போது பார்க்கிறோம். எனவே, அமைச்சர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும்' என, யுவராஜா வெளிப்படையாக அறிவித்துள்ளது ஆளுங்கட்சியை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. "மேலிடத் தலைமையின் ஆலோசனையில் பேரில் தான், நாங்கள் இவ்வாறு பேசுகிறோம்' என்றும் யுவராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்கிறோம். சில இடங்களில் அவை சரியாக செயல்படவில்லை என்றால் அதனை தெரிவிக்கிறோம். இதற்காக அவர்களுக்கு (தி.மு.க.,)கோபம் வருகிறது. உதாரணமாக, 100 நாள் வேலைத்திட்டத்தில் பல இடங்களில் 40 ரூபாய் தான் கூலி தருகின்றனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களை கூட்டம் சேர்க்க மட்டும் ஆளுங்கட்சி பயன்படுத்துகிறது. அரசில் எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதனால் தான், அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் கேட்டுள்ளோம்' என்றார்.
ஈரோட்டில் எழப்போகுது போர்குரல்: பாதயாத்திரை நாளை மறுநாள் ஈரோடு சென்றடைகிறது. அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இளைஞர் காங்கிரசார் திட்டமிட்டுள்ளனார். மத்திய அமைச்சர் வாசன், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரண்குமார் ரெட்டி, இளங்கோவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பேசவுள்ளனர். ஈரோடு மாவட்டம் இளங்கோவனின் சொந்த மாவட்டம் என்பதால், அவரது ஆதரவாளர்கள் இங்கு அதிகமாக உள்ளனர். இளங்கோவன் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய தி.மு.க., தான் காரணம் என்ற கோபம் அவர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. இதனால், ஆளுங்கட்சிக்கு எதிரான உச்சபட்ச சீற்றம் இந்த கூட்டத்தில் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் யுவராஜாவும், இந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 29ம் தேதி, ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டம் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறையும் தெரிவித்துள்ளதால், ஆளுங்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment