தடை செய்யப்பட்ட, "சிமி' அமைப்புடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை ஒப்பிட்டுப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு, பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுலின் விமர்சனம் தேச அபிமானத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறியுள்ளது.
மத்திய பிரதேச பா.ஜ., தலைவர் பிரபாத் ஜா கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும், "சிமி' அமைப்பையும், ராகுல் ஒப்பிட்டுப் பேசியது தேசியத்தின், தேச அபிமானத்தின் மீதான தாக்குதல். ஆர்.எஸ்.எஸ்., ஒரு உண்மையான தேசியவாத அமைப்பு என்பதை ஒவ்வொருவரும் நன்கறிவர். "சிமி'யோ தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. ராகுலின் அறிவுக்கூர்மையை அளவிட என்னிடம் அளவுகோல் எதுவும் இல்லை. "துதி பாடிகளுக்கு இளைஞர் காங்கிரசில் இடமில்லை. அவர்கள் பா.ஜ.,வில் சேரலாம்' என, ராகுல் கூறியுள்ளார். பரம்பரை பரம்பரையாக நிர்வகிக்கப்படும் கட்சி எது, ஜனநாயக ரீதியாக செயல்படும் கட்சி எது என்பதை மக்கள் நன்கறிவர். வாரிசு அரசியலுக்கு ஒரு உதாரணம் ராகுல். இவ்வாறு பிரபாத் ஜா கூறினார்.
பா.ஜ., தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் இதுபற்றி கூறுகையில், "ராகுலின் அறிக்கை பக்குவமான மன நிலையை அடையாதவர்கள், வெளியிட்ட அறிக்கை போல உள்ளது. மூடத்தனமான, திமிர்த்தனமான அறிக்கை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தேசியவாத பள்ளியில் இருந்து உருவானது. அதை, "சிமி' அமைப்புடன் ஒப்பிடக்கூடாது. ராகுலின் அறிக்கை காங்கிரசின் நோயாளி மனோபாவத்தை காட்டுகிறது' என்றார்.
ராகுலின் விமர்சனத்திற்கு பதிலளித்த ஆர்.எஸ்.எஸ்., தகவல் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், "அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடும் முன்னர், ராகுல் நாட்டைப் பற்றிய நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.,க்கும் "சிமி'க்கும் உள்ள வேறுபாட்டையும், காங்கிரஸ் கட்சியின் வரலாற்றையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விமர்சித்த ராகுலுக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் கூறுகையில், "வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., வதந்திகளைப் பரப்புவதில் மாஸ்டர். அந்த அமைப்பின் அறிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை. ராகுல் சொன்னது சரியே. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிடம் இருந்து வரலாற்றையும், கலாசாரத்தையும் கற்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை' என்றார்.
No comments:
Post a Comment