Search This Blog

Monday, October 18, 2010

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாதது துர்பாக்கியம்: சிதம்பரம்

குன்னூர்:""காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாதது துர்பாக்கியமானது,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக நேற்று காலை 9 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனி ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் எம்.ஆர்.சி., வந்தார்.

பின்னர், ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றி விட்டு, காலை 11 மணிக்கு குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:சமீபத்தில், திருச்சியில் காங்., தலைவர் சோனியா பங்கேற்ற பிரமாண்ட பொதுக் கூட்டம், கட்சியின் செல்வாக்கை வெளிக்காட்டியுள்ளது; திருச்சியில், காங்கிரஸ் கட்சிக் கூட்டம் போடுவதற்கு முன், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்தின; அந்த கூட்டங்களை மிஞ்சும் அளவுக்கு கூட்டத்தைக் காண முடிந்தது.தமிழகத்தில் 43 ஆண்டுகளாக காங்கிரசால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை; இழந்த ஆட்சியை மீட்க முடியாத துர்பாக்கிய நிலையுள்ளது. பிற மாநிலங்களில் ஆட்சியை இழந்தாலும், மீண்டும் தக்க வைக்க கூடிய சக்தியை காங்கிரஸ் பெற்றுள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு பல காரணங்கள் இருக்கலாம்; அதற்கு நாங்களே கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை முதலில் கட்சியினர் மத்தியில் வர வேண்டும்; அதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ராஜிவுக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தலைமை பொறுப்பேற்றுள்ளார்; எதிர்காலத்தில் கட்சியை நிர்வகிக்கும் தலைவராக ராகுல் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்; அவரை நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்; அவர் வழிகாட்டுதல் படி, நாட்டில் 13 லட்சம் இளைஞர்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர். வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் புதிய தலைமுறைக்கு, தலைமையேற்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது.இவ்வாறு உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

அத்வானி மீது சாடல் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விமர்சனம் செய்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, "ஒமர் அப்துல்லா முதல்வர் பதவியில் இருந்த ராஜினாமா செய்ய வேண்டும்' எனக் கூறியிருப்பது குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்ட போது, ""ஒமர் அப்துல்லாவின் அறிக்கையில் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை; அவரது அறிக்கையை முழுமையாக படிக்காமல் ஒரு வரியை மட்டும் படித்து விட்டு, அவரை ராஜினாமா செய்யச் சொல்வது விவேகமானது அல்ல,'' என்றார். 

No comments: