கர்நாடகாவில் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரும் 12ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் கெடுவிதித்துள்ளார். கவிழ்ப்பு முயற்சியிலிருந்து எடியூரப்பா அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில், பா.ஜ., அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அமைச்சர் ÷ஷாபாவை நீக்க வேண்டுமென்று ரெட்டி சகோதரர்கள் போர்க்கொடி தூக்கினர். இதே போன்று, ஒவ்வொரு பிரச்னையிலிருந்தும் எடியூரப்பா சமாளித்து வெளியே வந்தார். தற்போது, முதல்வர் எடியூரப்பா மீதும், அவரது குடும்பத்தினர், சில அமைச்சர்கள் மீதும் நில ஊழல் விவகாரங்களை எதிர்க்கட்சியினர் பட்டியலிட்டு காட்டினர். இந்த நேரத்தில், கர்நாடகா அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், தங்களுக்கும், தங்கள் ஆதரவாளர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை என கூறி, 25க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ.,க்கள் சென்னையில் முகாமிட்டனர். இவர்களை,அமைச்சர்கள் அசோக்,பசவராஜ் பொம்மை, ஸ்ரீராமுலு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும்பலன்கிடைக்க வில்லை. மதசார்பற்ற ஜனதா தள ஜமீர் அகமது, புட்டண்ணா ஆகியோர் சென்னை சென்று, அதிருப்தி எம்.எல். ஏ.,க் களை சந்தித்து,பா.ஜ., அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற கேட்டுக் கொண்டனர்.
4 அமைச்சர்கள் நீக்கம்: பரபரப்பான சூழ்நிலையில், நேற்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்ட முடிவு குறித்து முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: சுயேச்சை எம்.எல்.ஏ.,க் களான அமைச்சர்கள் சுதாகர், வெங்கடரமணப்பா, நஞ்சுண்டசாமி, சிவராஜ் தங்கடகி ஆகியோரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்குமாறு, கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வாபஸ் வாங்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவருக்கும் 20 கோடி ரூபாயை கொடுத்து விலைக்கு வாங்க ம.ஜ.த., முயற்சித்துள்ளது. குறுக்கு வழியில் பதவிக்கு வந்து விட வேண்டும் என்று ம.ஜ.த.,வினர் துடிக்கின்றனர், என்றார்.
இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கரலிங்கே கவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் ராஜ்பவனுக்கு சென்று, கவர்னரை சந்தித்து பா.ஜ., அரசுக்கு தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தார். இதே போல், சுயேச்சை எம்.எல்.ஏ., வர்த்தூர் பிரகாஷும் கவர்னரிடம், கடிதம் கொடுத்தார். மற்ற அதிருப்தியாளர்களிடம் பெற்ற ராஜினாமா கடிதங்கள் அனைத்தும், முன்னாள் முதல்வர் குமாரசாமி முன்னிலையில் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கெடு விதிப்பு: "அக்டோபர் 12ம் தேதி மாலை 5 மணிக்குள், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு, தனது மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும்' என, கவர்னர் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டு: சென்னையில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் எடியூரப்பா மீது சரமாரியாக குற்றம் சாட்டினர். பின், நேற்று மதியம் தனி வாகனத்தில் சென்னை விமான நிலையம் சென்றனர். அங்கிருந்து தனி விமானத்தில் கொச்சி சென்றனர். இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்த, அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சென்னையில் நீண்டதொரு பேச்சு நடத்தினார். அதிருப்தி கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் அமைச்சர்கள் ஜார்கிஹோளி, ரேணுகாச்சார்யா ஆகியோர் கூறுகையில்,"மொத்தம் 20 எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். எங்களது கோரிக்கைகளை முதல்வர் எடியூரப்பா கவனிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எங்களுக்கு பணம் கொடுக்கவில்லை' என்றனர்.
பிளவா? ஆனால், சென்னையிலிருந்து கிளம்பியவுடன், தொட்டண்ண கவுடா பாட்டீல், ஹாரிஸ் ஆகியோர், "தாங்கள் பா.ஜ., அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை' என்று அறிவித்தனர். இதனால், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், காங்.,தலைவர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வீட்டில் ஆலோசனை நடத்தி, கவர்னர் பரத்வாஜை சந்தித்தனர். ம.ஜ.த., தலைவர் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவும் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தினர். குதிரைபேரம் துவங்கியுள்ளதை யடுத்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் புனேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ரெட்டி சகோதரர்களின் முயற்சி தோல்வி: கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை சரிகட்ட சென்னைக்கு பறந்து வந்த ரெட்டி சகோதரர்களின் சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து அதிருப்தியாளர்கள், விமானம் மூலம் கொச்சி புறப்பட்டுச் சென்றனர். எடியூரப்பா அரசை கவிழ்க்க திட்டமிட்டு, ரேணுகாச்சார்யா மற்றும் ஏழு அமைச்சர்கள், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 25 பேர் நேற்று முன்தினம் சென்னை புறப்பட்டு வந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் தங்கி, அவசர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே அமைச்சர் ரேணுகாச்சார்யா மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்த, மாநில உள்துறை அமைச்சர் அசோக் தலைமையில் அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை, ஸ்ரீராமுலு ஆகியோர் சென்னை வந்தனர். ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுடன் நடத்திய நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமைச்சர் அசோக், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு திரும்பினார். பசவராஜ் பொம்மை, ஸ்ரீராமுலு ஆகியோர் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சரிகட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் வெற்றிகிட்டவில்லை.
நேற்று மதியம் 2 மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் கொச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். இவர்களை சந்திக்க, ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி தலைமையில் ஆறு கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் விமான நிலையத்திற்கு வந்து, அதிருப்தியாளர்களுடன், வி.ஐ.பி.,க்கள் ஓய்வறையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு சமரச திட்டங்களை ஜனார்த்தன ரெட்டி கூறியதாகவும், அவற்றை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிருப்தியாளர்களான பாலச்சந்திரன், ரேணுகாச்சார்யா, வெங்கடரமணப்பா, சுதாகர், ராஜ்கோஜ், டாக்டர் பாகலி, சுவாமிநாதானந்தா, நாகராஜூ, கோபாலகிருஷ்ணன், சம்பங்கி, சிவராஜ், கூலிகட்டி சேகர் ஆகிய 12 பேர் நேற்று மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து கொச்சி புறப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து மாலத்தீவுகளுக்கோ அல்லது துபாய்க்கோ செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெஜாரிட்டி உள்ளது: ஜனார்த்தன ரெட்டி நிருபர்களிடம், "இந்த பேச்சுவார்த்தையின் போது பல்வேறு சமரச திட்டங்கள் கூறப்பட்டன. ஆனால், பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இருப்பினும், கர்நாடக அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தற்போதுள்ள அரசுக்கு போதிய மெஜாரிட்டி உள்ளது. சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் நேரில் கூற உள்ளேன்' என்றார். ஜனார்த்தன ரெட்டி தலைமையில் வந்த எம்.எல்.ஏ.,க்கள், சென்னையில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் விமானம் மூலம் பெங்களூரு சென்றனர்.
பா.ஜ.,வின் பலம் என்ன? கர்நாடகா சட்டசபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 224. இதில், பா.ஜ., 117, காங்கிரஸ் 73, மதசார்பற்ற ஜனதா தளம் 28, சுயேச்சை 6 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், சுயேச்சைகள் ஆறு பேர், பா.ஜ., எம்.எல்.ஏ., 15 பேர் என மொத்தம் 21 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால், பா.ஜ.,வின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஹாரிஸ், தொட்டண்ண கவுடா பாட்டீல் ஆகியோர், "கவர்னரை சந்தித்து, பா.ஜ., அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறவுள்ளோம்' என்றனர். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமென்றால் 113 பேர் தேவை. ஆனால், தற்போது பா.ஜ.,விடம் 104 பேர் தான் உள்ளனர். 12ம் தேதிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார். அதிருப்தியாளர்களை சந்தித்து பேசி, தங்கள் வலைக்குள் இழுப்பதற்கு மூத்த பா.ஜ., தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
11ம் தேதி பலப்பரீட்சை; எடியூரப்பா நம்பிக்கை: ""வரும் 11ம் தேதி என் பலத்தை நிரூபிப்பேன்,'' என, கவர்னர் பரத்வாஜை சந்தித்த பின், முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக கூறினார். வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் முதல்வர் எடியூரப்பா, சட்டசபையில் தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, முதல்வர் எடியூரப்பா, சில அமைச்சர்களுடன் கவர்னர் பரத்வாஜை நேற்று சந்தித்து பேசினார். கவர்னரை சந்தித்து வெளியே வந்த பின்னர், முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "வரும் 12ம் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது கட்டளைக்கிணங்க, வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டும்படி கவர்னரை கேட்டுக்கொண்டுள்ளேன். "அன்றைய தினம், என் அரசுக்குள்ள மெஜாரிடியை நிரூபிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தான் காரணம். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திரும்பிவருவார்கள்' என்றார்.
அக்கப்போரான அக்டோபர்: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு அக்டோபர் மாதம் என்றாலே ராசி இல்லாத அக்கப்போர் மாதமாகவே கருதப்படுகிறது. 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ஆட்சி மாற்றத்துக்கு சம்மதிக்காததால் பதவியை இழந்தார். 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவரது தலைமைக்கு ஆபத்து ஏற்பட்டு சலசலப்பு நீங்கியது.கடந்த 2009 அக்டோபர் மாதம், ரெட்டி சகோதரர்களிடம் சிக்கி படாதபாடுபட்டார். அந்த மாதம் முழுவதும் எடியூரப்பாவுக்கு நிம்மதி இல்லாத மாதமாகவே இருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் எடியூரப்பாவுக்கு, அதிப்தி எம்.எல்.ஏ.,க்களால் நெருக்கடி உருவாகி உள்ளது.
No comments:
Post a Comment