Search This Blog

Friday, October 22, 2010

மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு

அரசு என்பது மக்களை வாழச் செய்ய வேண்டும்; ஆனால், மக்களை வாழ விடாமல் வதைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு,'' என, திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
திருப்பூர் யூனியன் மில் ரோடு ஸ்ரீ சக்தி தியேட்டர் முன், திருப்பூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மத்திய அரசின் பஞ்சு ஏற்றுமதி கொள்கையை கண்டித்தும், நலிந்து வரும் ஜவுளித் தொழிலை பாதுகாத்திட வலியுறுத்தியும், பஞ்சு ஏற்றுமதியை தடை செய்யக் கோரியும், தொழிலாளர் நலன் பாதுகாத்திடவும், விவசாயிகள் நலன் காக்க பருத்திக்கு நியாயமான விலை நிர்ணயிக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:பஞ்சு, நூல் ஏற்றுமதியால் தொழில் நலிவடைகிறது. தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைகின்றனர். விவசாயிகளின் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. மிகப்பெரிய தொழிலதிபர்கள் பயனடையும் வகையில் மட்டுமே, அரசின் தொழிற்கொள்கைகள் இருந்து வருகின்றன. அரசு என்பது மக்களை வாழ வைக்க வேண்டும். மக்களை அழிப்பதற்கு அரசு இல்லை. ஆனால், தி.மு.க., அரசு மக்களை வதைத்து, அழித்துக் கொண்டிருக்கிறது.போன ஆண்டில் ஒரு கேண்டி பஞ்சு 23,000 ரூபாயாக இருந்தது; இப்போது, 43,000 ரூபாயாக உள்ளது. நூல் ஒரு கிலோ விலை 150 ரூபாயில் இருந்து, இப்போது 205 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுகளால் விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை. ஐந்து லட்சம் தொழிலாளர்கள், திருப்பூரை விட்டு வேலையில்லாமல் சொந்த ஊர் சென்று கொண்டிருக்கின்றனர்.இந்த கூட்டம் காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை; என்னை நம்பி வந்த கூட்டம். எனக்கு ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து பேச வந்திருக்கிறேன். அவர்களது நலனுக்காக போராட வந்திருக்கிறேன்.

எனது கல்யாண மண்டபத்தை இடித்தாலும், வருமானவரி சோதனை நடத்தினாலும், மக்கள் பிரச்னைக்காகத்தான் போராடுகிறேன்.தமிழகத்தில் ஏழு லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால், 90 ஆயிரம் பேருக்கு தான் வேலைவாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், திருப்பூரை தேடி வருகிற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் நிலையில், தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.தொழிலை காப்பாற்றுவதை விட சொத்து சேர்ப்பதிலும், கொள்ளை அடிப்பதிலும்தான் அரசு அதிக அக்கறை காட்டுகிறது. கருணாநிதி, அவரது மகன்களின் சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்று தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளே கூறி வருகின்றன.கருணாநிதி மகன் ஸ்டாலின், "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு கட்சியை பற்றி என்ன தெரியும்,' என்று கூறுகிறார்.

நான் ஆரம்பித்த கட்சியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். வறுமையை ஒழிப்பதுதான் என் நோக்கம்.என்னை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்களும், தாய்மார்களும் இருக்கிறார்கள். ஆனால், அண்ணாதுரை ஆரம்பித்த கட்சியை பறித்துக் கொண்ட கருணாநிதிக்குதான் கட்சியை பற்றி தெரியாது. இன்னும் ஆறு மாதத்துக்கு பிறகு கருணாநிதி ஆட்சி இருக்காது.மறுபடியும் தி.மு.க., கட்சி ஆரம்பிக்கட்டும், எத்தனை பேர் சேருவார்கள் என்பதை பார்க்க வேண்டும். மரியாதை கொடுத்து பேச வேண்டும். அந்த மரியாதையை தரவில்லை என்றால், மரியாதை கெட்டுவிடும் என தி.மு.க., வினரை எச்சரிக்கிறேன். நாவடக்கம் இல்லாமல் பேசுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அடுப்பு, டிவி, இலவச அரிசி தரும் தி.மு.க., அரசு, ஓட்டுக்கு நோட்டு தருவது ஏன்? சாதனைகளை சொல்லி ஓட்டு வாங்க வேண்டும். ஆனால், தி.மு.க., ஆட்சியில் எல்லாம் வேதனை. அடுப்பு, டிவி, இலவசமாக வீடு எல்லாம் மக்கள் தந்த வரிப்பணம். மக்கள் வரிப்பணத்தை வாங்கி, மக்களுக்கு இலவசங்களை தந்து ஏமாற்றுவதுதான் தி.மு.க., அரசு. கொள்ளையடிக்கத்தான் ஆட்சியே நடத்துகின்றனர்.

உண்மையை சொன்னால் விஜயகாந்த் கெட்டவன் என்கின்றனர். வசனம் பேசுகிறான் என்கின்றனர். நான் சினிமாவில் தான் டயலாக் பேசுவேன். வாழ்க்கையில் வசனம் பேச மாட்டேன். 1967ம் ஆண்டில் போராடி அண்ணாதுரை தி.மு.க., ஆட்சியை கொண்டு வந்தார். இன்றைக்கும் ஆட்சியை காப்பாற்ற, காங்., உடன் விழுந்து விழுந்து கூட்டணி வைக்கிறார் கருணாநிதி.விலைவாசி எல்லாம் உயர்ந்து மக்கள் கஷ்டபட்டிருக்கும் நிலையில், டெல்லிக்கு சென்று, விலைவாசியை கட்டுப்படுத்த என்ன பேசினார் ஸ்டாலின்? அடுத்த தேர்தலில் விஜயகாந்த் யாருடன் கட்சி வைக்கிறார் என்று அலைகின்றனர். காங்., உடன் கூட்டணி சேருவார் என்று கணக்கு போடுகின்றனர். இலை போட்டு பிரியாணி விருந்து வைக்கிறேன் என்கிறார்கள்.

உண்மையான ஆட்சி நடத்தாமல், இப்படி கேவலமாக அரசியல் நடத்துவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது. தே.மு.தி.க., என்றும் மக்களுக்காகதான். கொள்கை மாற மாட்டேன். வறுமையை ஒழிப்பதுதான் என் கொள்கை. இதன் மறைபொருள், மக்களின் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்பாடு செய்தால் தான் வறுமை ஒழியும்.தமிழனுக்கு பிரச்னை என்றால் கடுகளவும் விட்டுத் தர மாட்டேன் என்பார் கருணாநிதி; ஆனால், கடல் அளவில் விட்டுத் தருவார். கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி. முல்லை பெரியாறு திட்டத்தை தாரை வார்த்தவர் கருணாநிதி. காவிரியை தாரை வார்த்தவர் கருணாநிதி. தமிழை வித்தவர் கருணாநிதி.பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட திருப்பூரில் போதிய பஸ் வசதி இல்லை. பெண்களுக்கு தனி பஸ்கள் இல்லை. குளிக்கவும், குடிக்கவும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.தமிழில் பெயர் வைக்க சொல்லும் கருணாநிதி, அவர்களது பேரன்கள் வைக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவன பெயர்களை தமிழில் மாற்றவில்லை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.முன்னதாக, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் வரவேற்றார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி மாநில செயலாளர் சுதீஷ், தேர்தல் பிரிவு செயலாளர் அக்பர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். திருப்பூர் மாநகர செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

விஜயகாந்த் பொதுக்கூட்ட துளிகள்...

* பகல் 3.00 மணிக்கு பொதுக்கூட்டம் என அறிவித்திருந்தாலும், 2.00 மணியில் இருந்தே நிகழ்ச்சி இடத்தில் தே.மு.தி.க., வினர் திரள ஆரம்பித்து விட்டனர். இதனால், 3.30 மணியளவில் பெருமளவில் கூட்டம் திரண்டிருந்தது.
* 3.25 மணிக்கு அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், 3.55 மணிக்கு மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷும் மேடைக்கு வந்தனர்.
* மாலை 4.00 மணிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் முன்னிலையில், 15 நிமிடங்கள் வரை பஞ்சு, நூல் ஏற்றுமதிக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில், தி.மு.க., அரசை தாக்கிய வாக்கியங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன.
* மாலை 4.25 மணிக்கு மேடைக்கு வந்தார் விஜயகாந்த். கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்திருந்த அவர், அதை அணிந்தபடியே மேடையில் பேசினார்.
* மாலை 4.30 மணிக்கு மைக்கை பிடித்த விஜயகாந்த், 5.50 மணி வரை பேசினார். இடையிடையே சில நிமிடங்கள் மைக் பழுதானது. கூட்டம் கட்டுப்பாடின்றி திரண்டதாலும் அவ்வப்போது பேச்சை நிறுத்தி விட்டு கூட்டத்தை அமைதிபடுத்த முயன்றார் விஜயகாந்த்.
* தி.மு.க., அரசையும், கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களையும் தாக்கி பேசிய விஜயகாந்த், அ.தி.மு.க., தொடர்பாக எந்த கருத்துகளையும் கூறவில்லை.
* கூட்டம் அதிகரித்து, மேடையை நோக்கி பலரும் வர முயன்றதால் மேடையின் முன்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலரும் திக்குமுக்காடினர். ஸ்பீக்கர்கள், பேனர் தட்டிகள் கட்டியிருந்த கம்பங்கள், தியேட்டர் காம்பவுண்ட் சுவர்கள், கட்டட மேல்பகுதிகளில் நின்றும், அமர்ந்தும் பலரும் விஜயகாந்த் பேச்சை
ரசித்தனர்.

மாநாடு நடத்த திட்டம்: தொண்டர்களுக்கு அழைப்பு :பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ""விஜயகாந்த் கட்சிக்கு கொள்கை கிடையாது என்கின்றனர்; கொள்ளையடிக்கிற கொள்கை கிடையாது. ஏழைகளை வாழ வைக்க வேண்டும் என்பதுதான் என் கொள்கை. என்னால் ஆன நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். தையல் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், பெண்கள் நாட்டின் கண்கள் திட்டம், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறேன்.""அடுத்து மாநாடு ஒன்று நடத்தலாம் என்றிருக்கிறேன். இதே போல் அனைவரும் கூட்டம், கூட்டமாக குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும். அவர்களை ஊரை விட்டே விரட்ட வேண்டும்,'' என்றார்.

No comments: