Search This Blog

Monday, November 1, 2010

அதிபர் ஒபாமா வருகையை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வைகோ கண்டனம்

இந்தியாவுக்கு வரும் ஒபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்'  என்று, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கை: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 8ம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது, அதிர்ச்சியையும் மிக்க வேதனையையும் தருகிறது. அமெரிக்க நாட்டில் கொடும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட கருப்பர்கள் கடுமையாக போராடி சிறுக, சிறுக உரிமைகளை பெற்று உயர்ந்துள்ளனர். உலகம் போற்றும் திருப்புமுனையாக ஒரு கருப்பினத் தந்தையின் மகனாக பிறந்த பராக் ஒபாமா, அமெரிக்க அதிபராகியுள்ளார். நமது தேசப்பிதா காந்தியை மனித குலத்தின் ஒளிவிளக்காக ஒபாமா போற்றி, தனது அலுவலக அறையில் காந்தியின் படத்தை வைத்துள்ளார். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து வந்துள்ள ஒபாமாவை இந்திய மக்கள் வாழ்த்தி வரவேற்க கடமைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள்  அமெரிக்க கொள்கைகள் இந்திய மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால், ஒபாமாவை  எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. போபால் விஷவாயுக் கசிவால் எண்ணற்ற மக்கள் உயிரிழந்த போது அந்நிறுவனத்தின் உரிமையாளரை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்த காங்கிரசை கண்டித்து கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தவில்லை. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டதற்கு  கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை.  இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை  தங்கள் பகுதி என்று சீன வரைபடத்தில் வெளியிட்டதற்கும், ஜம்மு காஷ்மீரிலிருந்து செல்பவர்களுக்கு சீனா தனி விசா கொடுப்பதற்கும், பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள இந்திய பகுதியை பாகிஸ்தானுக்கு உரியது என்று சீனா அதிகாரப்பூர்வமாக சொல்லி வருவதற்கும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இலங்கை தீவில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க சீன அரசு ஆயுதங்களை வழங்கிய போது, கம்யூனிஸ்டுகள் கண்டிக்கவில்லை. ஒபாமா வருகைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள்  எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார். 


No comments: