ஒவ்வொரு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கும் 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இதை முன்னாள் குமாரசாமி மறுக்க முடியுமா?'' என்று முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகா சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்த பின்னர், நிருபர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:இன்று ( நேற்று) நிருபர்கள், பெண் நிருபர்கள் மீதும் போலீஸார் கடும் கெடுபிடிசெய்தனர் என்ற தகவல் அறிந்தேன். இது யாருக்கும் கவுரவம் தரும் செயல் ஆகாது. நிருபர்களின் உரிமையை பறிக்க முயன்றுள்ளது தவறாகும். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பேன். உங்கள் கவலையை நிவர்த்தி செய்வேன். இதை தொடர்ந்து நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதே போன்று மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன். பெண் நிருபர்கள் மீதும் நடந்துள்ள சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.
கவர்னர், விதான்சவுதாவில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதன்படி குரல் ஓட்டு மூலம் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டது. சட்டசபையில் காங்கிரஸ், மஜ.த., வுக்கு மெஜாரிட்டி இல்லை என்று தெரியவந்ததும் அவர்கள் சபையில் நடந்து கொண்ட முறை ஜனநாயகத்துக்கு செய்த துரோகமாகும். மெஜாரிட்டி இல்லை என்று அறிந்து சபையை நடக்கவிடாமல் செய்தனர்.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மேஜை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். சபையில் ம.ஜ.த., வினரும், காங்கிரசாரும் என்னையும், சபாநாயகரையும் தரக்குறைவாக பேசி அவமானம் செய்தனர். கர்நாடகா வரலாற்றில் இது போன்று நடந்தது கிடையாது. இது என்ன நியாயம். அமைதியாக உட்கார்ந்து மெஜாரிட்டியை நிரூபிக்க எதிர்க்கட்சியினர் அவகாசம் செய்து கொடுத்திருக்க வேண்டும்.
அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நடத்திய அக்னி பரீட்சையில் வெற்றி பெற்றுள்ளோம். முதல்வர் அதிகாரத்திற்காக பதவியில் இருக்கவில்லை. நாட்டிற்காக சேவை செய்ய வந்தோம். ஏழை மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்வோம். குமாரசாமி தர்மம், அதர்மம் நடக்கிறது என்று கூறினார். ஆனால், இன்று சபையில் நடந்து கொண்ட முறை சரியா? என்று குமாரசாமி கூற வேண்டும். "துரியோதனன்' வேலையை குமாரசாமி செய்துள்ளார். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வேறு, வேறு காரணத்திற்காக சென்னை, கோவாவில் கூட்டம் நடத்தினார்கள். அங்கு இவர் சென்றது ஏன்? ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களுக்கும் 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்று கூற முடியுமா? பணம் எப்படி வந்தது. யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று தெரியும்.
இதை சும்மா விடுவதில்லை. இந்த அரசை வீழ்த்த யார், யார் துணை இருந்தனர் என்பது பற்றி முழு விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். கர்நாடகா சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதிகாரிகள் ஆதரவு கொடுத்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . நல்லாட்சியை கொடுப்பேன் என்று கூறிக் கொள்கிறேன், என்றார்.
பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் எடியூரப்பா கூறியதாவது: கேள்வி: மெஜாரிட்டியில் எத்தனை ஓட்டு பெற்றுள்ளீர்கள். பதில்: சபாநாயகர் தீர்ப்பு கொடுத்துள்ளார். ரிஸார்ட்டில் ஆனந்தகுமார், வெங்கையாநாயுடு இருப்பதால் எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ரிஸார்ட் செல்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment