Search This Blog

Sunday, October 3, 2010

எல்லா கட்சிகளும் லாலு மீது பாய்ச்சல்: திருப்பம் கண்டு அச்சம்

பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், அனைத்து கட்சித் தலைவர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, லாலு பிரசாத்தை அனைத்து கட்சித் தலைவர்களும் கடும் விமர்சனம் செய்தனர். இதனால், லோக்சபா தேர்தலில் அவர் கடும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அதே நிலை தற்போதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் லாலுவுக்கு ஏற்பட்டுள்ளது. பீகார் சட்டசபைக்கு வரும் 21ம் தேதி முதற்கட்ட ஓட்டுப்பதிவு துவங்க உள்ளது. இந்த தேர்தலிலும் லாலு பிரசாத், அரசியல் கட்சித் தலைவர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள், தற்போது நடந்து வரும் தேர்தல் பிரசாரத்தில் லாலு பிரசாத்தை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இது, லாலுவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.ஒரு பக்கம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் முதல்வராக இருந்த போதும், ரயில்வே அமைச்சராக இருந்தபோதும் செய்த ஊழல்களை, தனது தேர்தல் பிரசாரத்தில் பாட்டுப் பாடி புட்டு புட்டு வைக்கிறார். மேலும், லாலுவின் 15 ஆண்டு கால ஆட்சியை, "பயங்கரவாத ஆட்சி' என குறிப்பிடுகிறார்.

இதேபோன்று, தனது பழைய நண்பனான காங்கிரஸ் கட்சி, லாலு பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும் முஸ்லிம் - யாதவ் ஓட்டு வங்கி பார்முலாவை உடைக்கும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.மேலும், ஏராளமான முஸ்லிகளுக்கு காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 50 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தவிர, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தலைவர் மெகபூப் அலி கெய்சரை மாநில தலைவராக நியமித்துள்ளது.இதனால், லாலு பிரசாத்துக்கு நாலாபுறமும் அடி விழுந்துள்ளது. இதே போன்று, லாலுவின் நெருங்கிய உறவினரான சாது யாதவ், சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.

இதே போன்று, லாலு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுபாஷ் யாதவ், ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்காத விரக்தியில், லாலு கட்சியிலிருந்து விலகி விட்டார். அவரும் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளார்.அவர்கள் இருவரும் லாலுவை, "திமிர் பிடித்த மனிதர்' என கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், லாலுவுக்கு எதிராக அனைத்து கட்சித் தலைவர்களும் ஒட்டுமொத்தமாக குறிவைத்து விமர்சித்து வருவதால், அவர் செய்வதறியாது திகைத்துள்ளார். ஐக்கிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் ரகசிய கூட்டணி வைத்து, மக்களை ஏமாற்றி வருவதாக லாலு பதிலடி கொடுத்து வருகிறார்.இச்சூழ்நிலையில், தானாப்பூர் வேட்பாளர் தேர்வில் லாலு கட்சியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. அதிருப்தி தலைவர் ரிதாலால் தன் ஆதரவாளர்களுடன் நேற்று லாலு வீடு முன், அவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

No comments: