தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் மறைவை அடுத்து நடந்த அரசியல் குழப்பங்களைப் போலவே, கர்நாடகத்திலும் ஏற்பட்டுள்ளது. எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்த சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, அம்மாநில ஐகோர்ட்டில் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் நடந்த முன்னுதாரணத்தின்படி பார்த்தால், சபாநாயகருக்கு எம்.எல். ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யுமளவுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பது உண்டு என்று அன்றைய செயல்கள் நிரூபித்தன.
தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 1987, டிசம்பரில் மறைந்ததை அடுத்து, பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அவரது கட்சியான அ.தி.மு.க., ஜெயலலிதா அணி, ஜானகி அணி இரு கூறாக பிரிந்தன. அப்போது, எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜானகியை முதல்வராக ஆக்க அப்போதைய கவர்னர் எஸ்.எல்.குரானா முடிவு செய்ததை அடுத்து, அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, 1988, ஜனவரி 28ம் தேதி அன்று ஜானகி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய தினம், காலையில் அவை கூடியவுடன், ஜெயலலிதா அணியில் இருந்த திருநாவுக்கரசர், பண்ருட்டி ராமச்சந்திரன், சைதை துரைசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், சேடபட்டி முத்தையா உள்ளிட்ட, 33 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் பி.எச். பாண்டியன் அறிவித்தார். இதனால், சட்டசபையில் மிகப்பெரிய ரகளை அரங்கேறியது. உடனடியாக போலீஸ் வரவழைக்கப்பட்டது. அப்போதைய போலீஸ் கமிஷனர் தேவாரம் தலைமையில் போலீசார் சட்டசபைக்குள் புகுந்து கலவரம் அடக்கப்பட்டது. பின்னர் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு ஜானகி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமே ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்கள் மீதான சபாநாயகரின் நடவடிக்கை செல்லாது எனக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த வழக்கை ஏற்க முடியாது என்று கூறி ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், "சபாநாயகருக்கு என்று சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அந்த அதிகாரத்தில் நீதித்துறை தலையிட முடியாது' என்று கூறப்பட்டது. போலீசை சட்டசபைக்குள் வரவழைத்தது தவறு என்ற வாதத்திற்கு கோர்ட் அளித்த பதிலில், "போலீசாரை அவைக்கு அழைத்தது முற்றிலும் சரியே. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இதை தவறு என கூற முடியாது' என்று தெரிவித்துவிட்டது. ஆனால், இதில் முக்கியமா விஷயம் என்னவெனில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை ராஜிவ் காந்தி, 1984ல் கொண்டு வந்தார். தமிழகத்தில் இந்த ரகளை சம்பவம் நடைபெற்ற ஆண்டு 1988. அதுவரைக்கும் சபாநாயகரின் உத்தரவில் கோர்ட் தலையிட அனுமதியில்லாத நிலை இருந்தது. அதனால், பி.எச்.பாண்டியன் அளித்த உத்தரவை கோர்ட்டால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. ஆனால், அதற்கு பிறகு 1990ம் ஆண்டு நிலைமை மாறியது. கட்சி தாவல் சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்தால் அதில் நீதித்துறை தலையிட உரிமை உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துவிட்டது.
தமிழகத்தில் 1988ம் ஆண்டு என்ன நடந்ததோ அதே காட்சிகள் தான் இப்போது கர்நாடகாவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சபாநாயகர் போப்பய்யா உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் தீர்ப்பு வரவில்லை. இந்நிலையில், சேரன்மாதேவியில் இருந்த தமிழக முன்னாள் சபாநாயகரும் வக்கீலுமான பி.எச்.பாண்டியனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: கர்நாடக சபாநாயகர் போப்பய்யா அளித்த தீர்ப்பு முற்றிலும் சரியானதே. இருப்பினும் பா.ஜ.,வைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்திருப்பது மட்டுமே சரியாக இருக்க முடியும். ஆனால் அவர் சுயேச்சைகளையும் சஸ்பெண்ட் செய்துள்ளார். அதுபற்றிய விவரம் முழுமையாக எனக்கு தெரியாது. அது நிச்சயம் விவாதத்துக்கு உரியது.
தவிர இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், சபாநாயகர் என்பவருக்கு வானளாவிய அதிகாரம் இருப்பது நூறு சதவீத உண்மை. அரசியல் சாசனத்தின்படி லோக்சபாவிலும் இதற்கான விதிமுறைகள் தெளிவாக உள்ளன. சட்டசபையிலும் விதிகள் தெளிவாக உள்ளன. ஒரு எம்.எல்.ஏ., லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு ஓட்டுப்போட்டதாக சபாநாயகர் முழுமையாக நம்பும்பட்சத்தில், அந்த எம்.எல்.ஏ.,வின் ஓட்டை நிராகரிக்க சபாநாயகருக்கு முழு உரிமையை சட்டம் அளித்துள்ளது. எனவே, இதுபோன்ற விவகாரங்களில் சபாநாயகரின் தீர்ப்பே இறுதியாக இருக்க முடியும். இவ்வாறு பி.எச்.பாண்டியன் கூறினார்.
No comments:
Post a Comment