Search This Blog

Tuesday, October 12, 2010

ஆறு நகராட்சிகளில் பா.ஜ.,வெற்றி : காங்கிரசை முறியடித்தார் முதல்வர் மோடி

குஜராத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஆறு நகராட்சிகளை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. மொத்தமுள்ள ஆறு நகராட்சிகள் உட்பட, 558 இடங்களுக்கு 2,100 பேர் போட்டியிட்டனர். இதில், பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பவநகர் உள்ளிட்ட ஆறு நகராட்சிகளை பா.ஜ., கைப்பற்றியது. ஜாம்நகரில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதன் மூலம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக, பாக்., பயங்கரவாதி என கருதப்படும், சொராபுதீன் ஷேக் என்பவரை, போலி என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற வழக்கில், முன்னாள் மாநில உள்துறை அமைச்சரும், முதல்வர் மோடியின் நெருங்கிய நண்பருமான அமித்ஷாவை சி.பி.ஐ., போலீசார் கைது செய்தது மற்றும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை பழிவாங்கி வருவது குறித்து பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களுக்கு முடிவு கட்டும் வகையில், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்கும் படி, பா.ஜ., தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. அத்துடன், காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான ஊழல் குறித்து முதல்வர் மோடி, வெளிப் படையாகவே, பிரதமரை குறிவைத்து பிரசாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு, மாநில அரசுக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் நிதி மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து பிரசாரம் செய்தது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் ஆறு நகராட்சிகளைக் கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றி பெற்றது.

முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், "வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ., 80 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது' என்றார். குஜராத்தில் அதிகப்படியான இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் நரேந்திர மோடிக்கு, மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குஜராத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில், ஆனந்த் மாவட்டத்தில், காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட காச்லால் தொகுதியை முதன் முறையாக பா.ஜ., கைப்பற்றியது. அத்துடன், உள்ளாட்சித் தேர்தலில் முதன் முறையாக ஆன்-லைன் மூலம் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டனர் என்பதும் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

ராஜ்கோட் பா.ஜ., வசம்: ராஜ்கோட் நகராட்சியில் மொத்தமுள்ள 69 வார்டுகளில், 58 வார்டுகளில் வெற்றி பெற்றதன் மூலம், மீண்டும் இந்நகராட்சியை பா.ஜ., தக்கவைத்துக் கொண்டுள்ளது. காங்கிரசுக்கு 11 வார்டுகளே கிடைத்தன. இதன் மூலம், 2005ல், 10 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்த முறை ஒரே ஒரு வார்டில் மட்டும் கூடுதலாக வெற்றி பெற முடிந்தது. ஜாம்நகர் நகராட்சியில், 57 வார்டுகளில் 35 வார்டுகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 16 வார்டுகள் மட்டுமே கிடைத்தன. பவ நகரில் 51 வார்டுகளில், 41 வார்டுகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த நகராட்சியில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ., வெற்றி பெற்றது.

No comments: